Dec 5, 2017

கெடுவாய்ப்பு


பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒன்றை விட்டு ஒன்று மிகுந்த தொலைவில் உள்ளதால், ஒரு கோளில் இருந்து அனுப்பப்பட்ட செய்தி மற்ற கோளை அடையும் முன்னரே, செய்தி அனுப்பிய கோள், துரதிஷ்டவசமாக அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன் என்பது மிகவும் கசப்பான, மறுக்க முடியாத உண்மை. சில கோள்கள் ஆயிரம் ஒளிவருடங்கள் தொலைவிலும், சில லட்சம் அல்லது கோடிக்கணக்கான ஒளிவருடங்கள் தொலைவிலும் உள்ளபோது அங்கிருந்து வரும் செய்திகள் இங்கு வந்து சேருவதற்குள் அந்த கோள் அல்லது அதில் வாழும் உயிர்கள் அழிந்து போக வாய்ப்புள்ளது.
ஒரு நம்ப முடியாத உண்மை என்னவென்றால், இந்த பூமியில் இதுவரை உயிர்கள் தோன்றி மனிதன் எனும் ஓர் அற்புத பிறப்பு பரிணாமம் அடைந்தது மிக மிக ஆச்சரியமும் அதிசயமுமாகும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்த பிரபஞ்சம் நம்மில் பல பேர் நினைப்பதுபோல அமைதியானது அல்ல. வானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு வானத்தில் பெரிய விபத்துக்கள் தெரியாததால் அப்படி தோன்றுகிறது.
உண்மை என்னவென்றால் பிரபஞ்சத்தில் பல அழிவுகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன. நம் பூமியும் இதற்கு விதிவிலக்கில்லை. நம்மில் பலர் இந்த பூமி எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பூமிக்கு பல பாதுகாப்புகள் இருந்தாலும் பற்பல ஆபத்துகளும் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. இந்த பூமி இதற்கு முன் பல முறை பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன், அண்ட வெளியில் இருந்து சுமார் மணிக்கு 30,0000 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ஒரு விண்வெளிப் பாறையினால் (ASTEROID) பூமி தாக்கப்பட்டது என்றும் அந்த தாக்குதலினால்தான் 'டைனோசர்' (dynosaur) என்ற, அப்போது பூமியை ஆண்டுவந்த மிருகங்களை பூமி இழந்தது என்று விஞ்ஞானிகள் கூறினர். அப்போதைய அரசியல்வாதிகள் அதை நம்பவில்லை. விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களும் சொன்னதை ஆட்சியாளர்கள் கேட்டிருந்தால் மனித குலம் நல்ல வளர்ச்சி கண்டிருக்குமே. அவர்கள்தானே விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு பணம் கொடுப்பது!!
அண்டவியல் வளர்ச்சி அடைந்த பின் நம் கண்ணாலேயே அந்த மாதிரி தாக்குதலைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் 1994 இல் கிடைக்கப் போவதாக கூறினர் விஞ்ஞானிகள். அதிர்ந்து போன அரசியல் வட்டாரம் அதைப் பார்க்கத் தயாரானது. நல்லவேளை தாக்குதல் வியாழன் மேல்தான். நம் மேல் வரும் பல தாக்குதல்கள் வியாழனின் ஈர்ப்புவிசையினால் வியாழனைத் தாக்கியுள்ளன. வியாழன் இல்லாவிட்டால், பூமிக்கு 'சங்கு' முன்பேயே ஊதப்பட்டிருக்கும்.[...]
விஞ்ஞானிகள் சொன்ன நாளில், அந்தத் தாக்குதல் எல்லோரும் பார்க்க வியாழனின் மேல் நடந்தது. வியாழன் பூமியை விட பல மடங்கு பெரிது. தாக்குதல் நடந்தபின் பூமி அளவு பெரிய நெருப்பு வியாழனில் எரிவதை, மனித வரலாற்றில் முதன் முறையாக விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் தொலைநோக்கியின் மூலமாக 'லைவ்' ஆக கண்டனர். அறிவியலாளர்கள் கூறியது போல நடந்ததைக் கண்டபின் தான் அரசியல்வாதிகளுக்கு அறிவியல் உண்மைகளைத்தான் கூறுகிறது என்று புரிந்தது . அதன்பின்னர் அண்டவியல் ஆராய்சிகளுக்கு உதவி கொடுக்கப்பட்டது.
இதுபோல பல தாக்குதல்களில் இருந்து தப்பிய பூமி ஒரு 'ஜாக்பாட்' அதிர்ஷ்டசாலி என்று கூறுகின்றனர் அறிவியலாளர்கள். மூன்று சீட்டு விளையாடும் போது மூன்று சீட்டும் 'ஏஸ்' ஆக ஒருமுறையல்ல இரண்டு, மூன்று முறை வந்தால் எவ்வளவு அதிர்ஷ்டமோ அவ்வளவு அதிர்ஷ்டம் பெற்றது பூமி என்று கூறுகின்றனர்.
அழகான பெண்ணை வர்ணிக்க நிலவை உதாரண‌த்திற்கு சொல்வார்கள். ஆனால் நிலவை நேரில் பார்த்தாலோ அல்லது அதன் 'க்ளோஸ் அப்' புகைப்படத்தையோ பார்த்தார்களேயானால், அதன் பிறகு பெண்ணை வர்ணிப்பதற்குப் பதிலாக, வசை பாடுவதற்குத் தான் நிலவை பயன்படுத்துவர். ஏனென்றால் நிலவில் அவ்வளவு குழிகள். அம்மைத் தழும்பு முகம் போல இருக்கும். எல்லாம் வாங்கிய தாக்குதலின் அடையாளங்கள். பூமிக்கும் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் மழை, பூகம்பம், எரிமலை, கண்ட அசைவுகள், கடலரிப்பு போன்றவற்றால் அவை பெரும்பாலும் மறைந்து போய்விட்டன. சைபீரியாவிலும், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலும் மற்றும் பூமியின் சில பகுதிகளிலும் இந்தத் தழும்புகளைக் காணலாம்.
புதன் கோளும் ஒரு பலத்த தாக்குதலுக்கு உள்ளாயிருக்கின்றது.
பிரபஞ்சம் வயது அடைந்து கொண்டே இருக்கின்றது. நமது சூரிய குடும்பமும் விதிவிலக்கல்ல. நமது செவ்வாய் கோள் ஒரு காலத்தில் பூமியைப் போலவே காந்தப் புலன் உள்ள கோளாகவும், தண்ணீர், வளிமண்டலம் உள்ள கோளாகவும் இருந்தது. அங்கே ஆரம்பகட்ட உயிரினங்கள் இருந்ததற்கான வாய்ப்புகள் உள்ளன என்று பல அறிவியலாளர்கள் நம்புகின்றனர். மேலும் செவ்வாயிலிருந்து உயிர் பூமிக்கு வந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கூறுகின்றனர். ஆனால் தற்போது அதற்கு காந்தப் புலன் இல்லை. நீர் வற்றிவிட்டது. துருவப் பிரதேசங்களிலும், நிலத்திற்கு அடியில் சில இடங்களிலும் தான் நீர் இருப்பதாகத் தெரிகிறது. வளிமண்டலம் அடர்த்தி குறைந்ததாக மாறிவிட்டது.
இந்தப் பரிணாம மாற்றம் அடையக் காரணம், செவ்வாய் பூமியை விட சிறியதாய் இருப்பதால் செவ்வாயின் உள்ளே உள்ள உருகிய இரும்பு காலப்போக்கில் குளிர்ந்து கெட்டியாகி விட்டது. பூமியின் உள்ளே கெட்டியான இரும்பும், அதைச் சுற்றி உருகிய இரும்பும் சுழல்வதால் காந்தப் புலன் உருவாகிறது. செவ்வாயில் அந்த உருகிய இரும்பு குளிர்ந்து கெட்டியாகி விட்டதால் காந்தப் புலன் இல்லாமல் போய்விட்டது. இந்த காந்தப் புலன் இல்லாவிட்டால், சூரிய காந்தப் புயல்களினால் பூமி தாக்கப்பட்டு உயிர்கள் இல்லாத ஒரு வறண்ட பிரதேசமாக மாறிவிடும். அதுதான் செவ்வாயில் நடந்த‌து. ஒரு காலத்தில் உயிர் வளர்ச்சிக்கு சாதகமாக இருந்த செவ்வாயின் வளிமண்டலம், நம்மில் சூரியனின் நாசகரமான கதிர் வீச்சுகளினாலேயே தகர்க்கப்பட்டது. அதனால் நீர் வற்றி, வறண்ட குளிர்ந்த பிரதேசமாக மாறிவிட்டது.
குழந்தை பிறக்கும்போதே இறப்பது போல, பிரபஞ்சத்தில் ஒரு கோளில் உயிர்கள் தோன்ற ஆரம்பிக்கும் சமயம், அந்தக் கோள் பிரபஞ்சத்தின் அழிவு சக்தியால் ஒரு உபயோகமில்லாத இடமாய் மாறிவிடுகிறது.
பூமியில் இந்த காந்தப்புலன் வடக்கிலிருந்து தெற்காக வந்து கொண்டிருக்கின்றது. அப்படி தொடர்ந்து எப்பொழுதுமே நடந்து கொண்டிருக்காது. சில காலத்திற்குப் பிறகு அது தடம் மாறி தெற்கிலிருந்து வடக்காக செல்ல ஆரம்பிக்கும். அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் அந்த மாற்றம் பூமியில் ஆரம்பித்துவிட்டது என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் அழிந்து போகும் வாய்ப்புண்டு. இது போன்ற பல அழிவுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதனால்தான், மனிதனை வேறு ஒரு கோளில் குடியமர்த்துவதற்கு அறிவியலாளர்கள் முயற்சிகள் ஆரம்பித்துள்ளனர்.
நமது சகோதரி என்று அழைக்கப்பட்ட வெள்ளி, பித்தளை ஆனாலும் பரவாயில்லை. பழைய துருப்பிடித்த தகரம் ஆகிவிட்டது. எல்லோராலும் ரசிக்கப்படும், ஒருகாலத்தில் பூமியைப் போன்று இருந்த வெள்ளி, அதிபயங்கர புயல்களையும், கந்தக அமில மழையையும், நச்சு வாயுக்களை கொண்டதுமான, உயிர்கள் பரிணமிக்க முடியாத ஒரு நரகமாக மாறிவிட்டது.
'சொர்க்கமாக நாம் நினைத்தது வெறும் நரகமாக மாறிவிட்டது'. வெள்ளி மற்றும் செவ்வாயின் பரிணாம வளர்ச்சியைக் காணும் நாம், நம் பூமிக்கும் வயதாகிக் கொண்டிருக்கின்றது என்ற உண்மையை மனிதில் கொள்ள வேண்டும்.
நமக்கெல்லாம் ஆதாரமாயிருக்கும் சூரியனுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. அது தன் பாதி வயதை எட்டிவிட்டது.
ஏராளமான குழந்தைகள் பிறக்கும் போது இறப்பது, ஐந்து வயதை கடப்பதற்குள் போதிய உணவின்றி இறப்பது, வாலிபப் பருவம் அடைவதற்குள் இன்னும் ஏராளமானவர் இறப்பது போல, பிரபஞ்சத்திலும் உயிர் தோன்றும் போதே அழிந்து போகும் கோள்கள், உயிர் தோன்றிய சில காலத்திலேயே அழிந்து போகும் கோள்கள், உயிர் தோன்றி மனிதனைப் போன்ற பரிணாம வளர்ச்சி அடைவதற்குள் அழிந்து போகும் பல கோள்கள் உள்ளன. ஆகவே பிரபஞ்சத்தில் பலப் பல நிலைகளில் உயிர்கள் பரிணாம வளர்ச்சியடைந்தக் கோள்களை காண வாய்ப்புண்டு


No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you