Dec 5, 2017

சென்னையில் இயற்கை உணவகங்கள்


‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
முன்பு நம்மாழ்வார் சிறப்பிதழுக்காகச் சென்னையில் உள்ள சில இயற்கை உணவகங்களுக்குச் சென்று தற்போதைய நிலை குறித்துப் பேசினோம். அவற்றின் தொகுப்பு இங்கே…
அடையாறு, காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது, திருக்குறள் உணவகம். இதன் உரிமையாளர்களில் ஒருவரான கார்த்திகேயனிடம் பேசினோம். “சாப்பிடுற உணவு எப்போதுமே பன்முகமா இருக்கணும். ஒரே வகையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடாதுனு நம்மாழ்வார் சொல்வாரு. இட்லி, தோசை, பொங்கல், பூரினு வழக்கமாகச் சாப்பிடுற பொருட்களையே சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசில சுழற்சி முறையில செஞ்சு கொடுக்கலாமேனு யோசிச்சுதான் இந்தச் சிறுதானிய உணவகத்தைத் தொடங்குனோம். நாங்க ஐ.டி. வேலையை விட்டுட்டு முழு நேரமாக உணவகத்தை நடத்துறோம்.
பூந்தமல்லிக்குப் பக்கத்துல இருக்கிற கரையான் சாவடியில 2014-ம் வருஷம் நானும் சுரேஷ்ங்கிற நண்பரும் உணவகம் ஆரம்பிச்சோம். வரகு, சாமை, கேழ்வரகு, கம்பு, சோளம்னு சிறுதானியங்களை வெச்சு தயாரிச்ச உணவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்தத் தைரியத்துலதான் இங்க இந்த உணவகத்தை ஆரம்பிச்சுருக்கோம். நம்மாழ்வார், இயற்கை விவசாயம்னு மட்டும் இல்லாம, ‘நஞ்சில்லாத உணவு’ங்கிற விதையையும் விதைச்சார். அந்த விதைதான் ஆரோக்கியமான உணவை நோக்கி மக்களைத் திரும்ப வெச்சுருக்கு.
கம்பு வடை, பூங்கார் அரிசி மினி இட்லி, தூதுவளை தோசை, மூலிகை டீ, வாழை இலை கொழுக்கட்டை, பாரம்பர்ய அரிசி சாப்பாடுனு விதவிதமான உணவுகளைக் கொடுக்கிறோம். இப்போ இந்த உணவுகளுக்கான தேவை அதிகரிச்சுட்டே இருக்குறதால வாடிக்கையாளர்களும் அதிகரிச்சுட்டே இருக்குறாங்க” என்றார், கார்த்திகேயன்.
அந்த உணவகத்தில் குழந்தைகளோடு மூலிகை சப்பாத்தி, தூதுவளை தோசை எனச் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிவசந்திரனிடம் பேசினோம். “வீடுகள்ல கேழ்வரகு, கம்புனு ஒரு வேளை உணவா சாப்பிடுறது வழக்கம். ஹோட்டல்கள்ல அதுலயே நிறைய வெரைட்டி கிடைக்கிது. அவுட்டிங் போய் ஹோட்டல்ல சாப்பிடுற மாதிரியும் இருக்கும். அதே நேரத்துல சத்தான உணவையும் சாப்பிட முடியும். ஹோட்டல்கள்ல சாப்பிடுற உணவுகள் பொதுவா குழந்தைகளை ஈர்க்கும். அதனால குழந்தைகளைச் சிறுதானிய உணவுக்குச் சுலபமா பழக்க முடியுது” என்றார்.
“நஞ்சில்லா உணவு எல்லோருக்கும் போய்ச் சேரணும். அது எளிமையாகவும் பக்குவமாகவும் சமைக்கப்படணும். அது எல்லோருக்கும் கிடைக்கற மாதிரியும் இருக்கணும். அப்போதான் உண்மையான ஆரோக்கியம் கிடைக்கும் என்பார், நம்மாழ்வார். அதைத்தான் தாரக மந்திரமா வெச்சு இந்த உணவகத்தை நடத்திட்டுருக்கேன்” என்கிறார், அடையாறு பகுதியில் ‘கிராம போஜன்’ எனும் உணவகத்தை நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி.
தொடர்ந்து பேசியவர், “ரெண்டரை வருஷத்துக்கு முன்ன இதை ஆரம்பிச்சேன். நாப்பது வயசுக்கு மேல இருக்கிறவங்கதான் இங்க நிறைய சாப்பிட வருவாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா, இங்க வர்றவங்கள்ல பெரும்பான்மையானவங்க 40 வயசுக்குள்ள இருக்கிற இளைஞர்கள்தான். பெண்களும் நிறைய வர்றாங்க. அந்தளவுக்கு ஆரோக்கியமான உணவு குறித்தான தேடல் அதிகமாகிட்டே இருக்கு. நாமதான் அவங்களோட தேவையைப் புரிஞ்சுக்காம இவ்வளவு நாளா இருந்துட்டோமோனு தோணுது.
கிராமங்கள்ல வீட்ல சமைக்கிற மாதிரியான பக்குவத்துல சமைச்சுக் கொடுக்கிறோம். என் மனைவி, மகள், மகன்னு குடும்பமே உழைக்கிறோம். ஆரம்பத்துல சரியா போகலை. ஆனா, இப்போ எங்களுக்கு வேலை செய்ய நேரம் போதலை. மறந்துபோன உணவுகளை மீட்டெடுக்கிறதும், அதை மக்கள்கிட்ட கொண்டு போறதையும் நோக்கமா வெச்சு நடத்திட்டு இருக்கேன்” என்றார்.
அங்கு சமைக்கப்பட்ட கம்பு, கேழ்வரகு தோசை மற்றும் நிலக்கடலை சட்னியை ருசி பார்த்துவிட்டு அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணேஷ்-ஷியாமளா தம்பதியிடம் பேசினோம்.
“சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசியில செய்யப்பட்ட உணவுகளைச் சுவை பார்க்க வந்திருக்கோம். இங்கிருக்கிற உணவுல எந்தக் கெமிக்கலும் சேர்க்கிறதில்லை. சுவை கூட்டிகளையும் சேர்க்கிறதில்லை. அதனால அடிக்கடி இங்க வந்து சாப்பிடுறோம். இதெல்லாம் கிராமத்து உணவுகள்னு ஒதுக்காம, அதிலிருக்கிற ஆரோக்கியத்தையும் சுவையையும் ரசிச்சு சாப்பிடுறதில ஒரு சந்தோஷம் இருக்கு” என்றனர்.
சென்னை, ராமாபுரத்தில் உள்ள அரசமரம் அருகில் இருக்கிறது, செல்வியம்மாள் கிராமிய உணவகம். சினிமா துறையினர், மாணவர்கள், இளைஞர்கள், குடும்பங்கள் என்று கூட்டம் குழுமுகிறது, இங்கே. செக்கு எண்ணெயில் சமைக்கப்பட்ட மீன், ஆடு, கோழி இறைச்சி வகைகளின் மணம் நாசியைத் துளைக்கிறது. வீட்டின் ஒரு பகுதியையே உணவகமாக்கி நடத்தி வருகிறார் ரகுநாத். “பசுமை விகடன் மூலமாத்தான் நம்மாழ்வாரைத் தெரியும். ராமாவரம் பகுதியில் கட்டடங்கள் பெருக ஆரம்பிச்சதும், இடத்தைக் காலி பண்ணிட்டு எங்கயாவது போய் இயற்கை விவசாயம் செய்யலாம்னு இருந்தேன். அப்போ அம்மாதான் இங்கயே ஓர் உணவகம் ஆரம்பிக்கலாமேனு யோசனை சொன்னாங்க. ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி இதை ஆரம்பிச்சோம். வீட்டுப் பக்குவத்துல சமைச்சுக் கொடுக்கணும்னு செக்கில் ஆட்டுன கடலையெண்ணெய், நல்லெண்ணெயைத்தான் பயன்படுத்துறோம். நல்லெண்ணெயில் சமைக்கிற அசைவ உணவுகளுக்குத் தனிச் சுவை இருக்கு. முருங்கைக் கீரை, சோளம், கம்பு, ராகினு அவியலும் செய்றோம். மதிய உணவுல சிவப்பரிசிச் சோறு, பொன்னியரிசிச் சோறு கொடுக்கிறோம்” என்றார்.
வேளச்சேரி, தண்டீஸ்வரம் மெயின் ரோட்டில் ‘அந்திக்கடை’ என்ற உணவகம் உண்டு. இங்கு, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில்… பொங்கல், உப்புமா போன்ற உணவுகள் சமைக்கப் படுகின்றன. இங்கு காலை வேளையில் 75 ரூபாய்க்கு வழங்கப்படும் சாமைப் பொங்கல், சோள தோசை, ராகிப் பூரி, சுக்கு மல்லி காபி ஆகியவை கோம்போ உணவில் வழங்கப்படுகின்றன.
பரபரப்பான சென்னைப் பெருநகரத்தில் இப்படி இயற்கை உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆரோக்கியமான விஷயம். இதனால் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்து விவசாயிகளின் பொருளாதாரம் உயரவும் வாய்ப்பிருக்கிறது

No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you