Dec 29, 2017

விவேகானந்தர் பாறையின் மறு பக்கம்......

கன்னியாகுமாரி, பாரதத்தாயின் பொற்பாதம், இயற்கைத்தாயின் அருட்கொடை, கடற்தாயின் உற்சாகம் என்று பலவிதமான பெருமைகளுடையது. கன்னியாகுமாரி என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது விவேகானந்தரின் பாறையில் அமைந்துள்ள அவரின் நினைவு மண்டபம் தான். அய்யன் வள்ளுவன் எழுத்தாணியோடு கம்பீரமாக நின்றிருந்தாலும், ஏனோ முதலில் அனைவரின் நினைவில் முதலில் வருவது அந்த நினைவு மண்டபம் தான். இது 1962ல் ஆரம்பித்து 1972ல் கட்டிமுடிக்கப்பட்டது. அவ்வளவு அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும், மண்டபத்திற்கு பின்னால் ஒரு பெரிய கதையுண்டு என்பது இந்த காலத்திற்கு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிகப்பெரிய கலவரத்தை முன்னோக்கிச் சென்று, அது போல் எதுவும் நடக்காமல் முடிந்த இந்த சம்பவத்தினை, வரலாறு அவ்வளவு சீக்கிரமாக மறந்துபோனது அல்லது மறைத்துவிட்டு போனது மிகவும் ஆச்சிரியம்.
கன்னியாகுமாரி என்று, எதனால் பெயர் வந்தது என்று அந்த மாவட்டத்துக்காரர்களுக்கே தெரிந்திருக்காது. விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்படும் இந்த பாறைக்கு, ஸ்ரீ பாதப் பாறை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மிகச்சரியாகச் சொன்னால், ஸ்ரீ பாதப் பாறைதான் அதன் முதற்பெயர், தேவி கன்னியாகுமாரி என்பவர் சிவபெருமானை மணப்பதற்காக அங்கு தவமிருந்ததாக ஐதீகம். அங்கு பாறை காணப்படும் பாத சுவடு கூட இவருடையது என்று இன்னும் நம்பப்படுகின்றது.
1963ம் வருடம் இந்திய அரசு விவேகானந்தரின் நூற்றாண்டினை ஒரு நினைவுச்சின்னம் எழுப்பி கொண்டாட முடிவு செய்தது. விவேகானந்தர், இந்திய இளைஞர்களின் விடிவெள்ளி, அமைதியின் திருவுருவம், இவரால் உந்தப்பட்டவர்களும், உத்வேகம் அடைந்தவர்கள் நம்மில் அதிகம். காலங்கள் பல கடந்தபின்பும் அவரது, வார்த்தைகள் இன்னும் பலரின் கணினியின் தொடக்கப்பக்கத்தில் புன்னகைத்துக்கொண்டிருக்கும். ஐ.நாவில் அவர் பேசிய முதல் வாக்கியத்தினை, இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் சொல்லிச் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வோம். இந்தியாவின் தேசிய அடையாளங்களில் இவரும் ஒருவர், என்பதை விட இவர் முக்கியமானவர் என்பதுதான் சரி.
விவேகானந்தர், கன்னியாகுமாரிக்கு வந்திருந்தார், அங்கு கடலுக்கு உள்ளே உள்ள பாறைக்கு நீந்தி சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். இது போதாதா, அவருக்கு நினை மண்டபம் அங்கு கட்ட. நினைவு மண்டம் மட்டுமா, மண்டபத்திற்கு சென்று வர, ஒரு பாலம் போடவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. அதற்கான வேலைக்கு ஒரு குழு வேலாயுதம் பிள்ளை என்பவரின் தலைமையில் உருவானது.
விவேகானந்தரின் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு யார் எதிர்க்ப் போகின்றார்கள், யாருக்கு கருத்து வேறுபாரு இருக்கமுடியும்? என்று அதிநம்பிக்கையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு சுறு சுறுப்படைந்தது. விஷயம் வேகமாகப் பறவியது, குமரி முழுவதும்.
தேவி கன்னியாகுமாரி என்பது ஐதீகம், விவேகானந்தரின் மூன்று நாள் தியானம் என்பது ஒரு நிகழ்வு, ஆனால் அதையும் மீறி சிலரின் வாழ்வாதாரமாகவும் அந்த பாறை இருந்தது, அந்நாளில் அது பலர் மறந்தது. குமரி மீனவர்களின் வாழ்வாக இருந்தது அது. மீன்பிடிப்பின் போது ஏற்படும் களைப்பு போக்கும் இடமாகவும், வலையினை விரித்து காயவைக்கும் இடமாகவும், மீன் வியாபார பரிமாற்று இடமாகவும் இருந்தது. அவர்களின் போதாத காலம், அவர்கள் அநேகம் பேர் கிறிஸ்தவர்களாக இருந்தது தான். ஒவ்வொரு ஆண்டும், சிலுவை வைத்து ‘குரூஸ்’ என்னும் திருவிழாவும் இந்த பாறையில் வைத்து நடத்தினார்கள். ஆகையால் எதிர்ப்பு, மீனவர்களால் உருவானது.
காலம் மீனவர்களை, “கிறிஸ்தவர்களாகவும்”, விவேகானந்தரை “இந்து சன்னியாசியாகவும்” மட்டுமே பார்க்கவைத்ததுதான் கொடுமை.
நானூறு வருடங்களுக்கு முன்பு புனித சேவியர் இங்கு வந்தபோது, இந்த பாறையில் தான் இருந்து ஜெபம் செய்தார், ஆகவே இது கிறிஸ்தவர்களுக்குத்தான் சொந்தம் என்ற கதை அங்குள்ள ஒரு பாதிரியாரால் கொம்பு சீவி விடப்பட்டு. கிறிஸ்தவர்கள் தான் இந்த பாறையின் உரிமையாளர்கள் என்று கூறிக்கொண்டார்கள். ஹிந்துக்களுக்கு புதிதாக கதை ஒன்றை உருவாக்கும் வேலை தேவைப்படவில்லை. இருக்கவே இருக்கு, தேவி கன்னியாகுமாரி, விவேகானந்தர்.
மீனவர்கள் ஒரு காரியம் செய்தார்கள், இரவோடு இரவாக ஒரு பெரிய சிலுவையினை கொண்டு சென்று பாறையில் வைத்துவிட்டார்கள் (பாபர் மஸ்ஜித்தில், சில வீணர்கள் செய்த அதே பார்முலா). கரையில் இருந்து பார்த்தாலே தெரிகின்ற அளவிலான ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய சிலுவை அது.
சூடு ஏறியது அங்குள்ள மக்களுக்கு, கண்டன ஆர்பாட்டங்கள், ஆட்சியாளருக்கு மனு, அரசுத்தலைவர்களுக்கு தந்தி, ஸ்ரீபாதப் பாறையில் எப்படி சிலுவையினை வைக்கலாம்? என கொதித்து நின்றது எதிர்த்தரப்பு.
பாறை எங்களுக்குத்தான் சொந்தம் என்று இருதரப்பும் உரிமைகொள்ள, தமிழக அரசு தலையிட்டது. பாறை யாருக்குச் சொந்தம் என்று ஒரு விசாரனைக்கு உத்தரவிட்டது. விசாரனையின் முடிவில், பாறைக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. எனவே பாறையில் உள்ள சிலுவை வருவாய்த்துறையினரால் அகற்றப்பட்டது.
இது எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல ஆனது, 400 வருடங்கள் முன்பு இது போன்ற பெரிய சிலுவை இருந்தது, பின்பு சில சமுக விரோதிகளால் அது அழிக்கப்பட்டுவிட்டது, அதனால் இப்போதுள்ள சிலுவையினை தமிழக அரசு காப்பாற்றுவதை விடுத்து அழிக்கின்றது, அதற்கு பரிகாரமாக, அதே போல் ஒரு சிலையை மட்டுமல்லாமல் புனித சேவியருக்கு ஒரு நினைவுச் சின்னமும் உருவாக்கவேண்டும் என்று புது திரைக்கதையினை உருவாக்கி, கோஷங்களை எழுப்பினர் அங்குள்ள கிறிஸ்தவ சமுகத்தினர். இந்தமுறை குமரி மீனவர்களுக்கு ஆதரவாக நம்ம கேரள பங்காளிகள் இணைந்துகொண்டார்கள்.
இரண்டில் எது செய்தாலும் மத கலவரத்துக்கு தூபம் போடும் என்றெண்ணிய, அன்றய முதல்வர் பக்தவத்சலம், விவேகானந்தரும் வேண்டாம், சேவியரும் வேண்டாம், பாறை, பாறையாகவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவருக்கு, இந்த பாறை விவேகானந்தர் தவம் இருந்த இடம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக வேண்டும் என்றால் ஒரு போர்டு வைத்துவிடலாம் "இது விவேகானந்தர் தியானம் செய்த பாறை" என்று நிறுத்திக்கொண்டார்.
முதல்வர் பக்தவத்சலம்
ஏக்நாத் ரானடே
இந்நிலையில் இந்த பிரட்சனை ஹிந்துக்களால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போதய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர், ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்பி பிரச்சனையை தீர்க்குமாரு கட்டளையிட்டார். ஹிந்துக்கள் மட்ட்டுமல்லாது கிரிஸ்தவர்களும், நடுநிலையாளர்களும் இவர் என்ன செய்யப்போகின்றார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தன. சிலர் ஆர்.எஸ்.எஸுக்கு விஷயம் சென்றதில் இருந்து, எங்கு என்ன நடக்குமோ? என்ற அச்சவுணர்விலும் சில மக்கள் இருந்தனர்.
ரானடே, இவருக்கு ‘தமிழ்’ என்று சொல்லுவதற்கே, இயலாதாக இருந்தது, மேலும் தமிழக அரசியல், அரசியல் தலைவர்கள் யார் யார்? எப்படி? என்பதெல்லாம் அறிந்திராத ஒருவரால் எப்படி இதனை தீர்த்துவிடமுடியும் என்று தலை சொறிந்து நின்றது ஒரு கூட்டம். இந்நிலையில் அவர் ஆரயத்தொடங்கியது, பிரச்சனைகளையும், அதன் வேர்களையும், மற்றும் எதிர்ப்பாளர்கள் யார்? என்பதை மட்டுமே.
அப்போது விவேகானந்தர் மண்டபத்திற்கு தீவிரமாக எதிர்த்து நின்றது இரண்டு பேர். ஒருவர் தமிழக முதல்வர் பக்தவத்சலம், மற்றொருவர் ஹீமாயூன் கபீர், அன்றைய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர். கபீர் ஒரு கல்கத்தாகாரர். ரானடே, நேராக கல்கத்தா போய் இறங்கியதும் முதல்வேலை, அனைத்து பத்திரிக்கைகளையும் கூட்டி, பிரச்சனை இது தான், வங்கத்தின் தங்கம், விவேகானந்தருக்கு உங்கள் மாநிலத்தின் அமைச்சர் கபீர் முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்று ஒரே போடுபோட்டுவிட்டு, நடையை கட்டினார். இது போதாதா பத்திரிக்கைகளுக்கு, ரானடே தமிழகத்திற்கு வருவதற்கு முன்பு, கபீர், தன் ஆட்சேபனையை விலக்கிக்கொண்டார்.
ஆனால் இந்த மாதிரியான பாச்சாவெல்லாம் தமிழகத்திடம் பலிக்கவில்லை. அமைதியை நிலைனாட்டும் பொறுப்பு, சட்ட ஒழுங்கு எல்லாவற்றையும், தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மிகவும் யோசனையிலேயே இருந்தார். பின்பு விவேகானந்தரின் நினைவு மண்டப குழு விஸ்தரிக்கப்பட்டு, அதில் நடுநிலையாளர்கள் பலரை சேர்த்துக்கொண்டார்கள். அதில் முக்கியமானவர் தி.மு.க தலைவர் அண்ணாதுரை. மற்றும் சில கம்யூனிஸ்ட் தலைவர்களும். சன்னியாசிகள் கால் போன இடம், தூங்கின இடம், உட்கார்ந்த இடம் என்று மண்டபம் கட்டினால், இந்தியாவில் வீடுகளை விட, மண்டபங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் என்று கூறி சில பெரியாரிஸ்டுகள் குழுவில் இடம்பெறாமல் விலகிக்கொண்டனர்.
பின்பு நடுனிலையாளர்களின் துணையுடன், கிரிஸ்தவ மக்களை சமாதானம் செய்தும், சரி செய்தும், நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நன்கொடையில் கட்டப்பட்ட மண்டபம் தான் இன்று பாறையில், பவ்வியமாக பவனிவரும் மண்டபம். இது அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரியால் திறந்து வைக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸின் திறமையால் கட்டப்பட்டது என்று கரசேவகர்களும், அண்ணாத்துறையின் நடுநிலையான முயற்சியால் கட்டப்பட்டது என்று திராவிட இயக்கத்தினரும், கம்யூனிஸ்டுகள் தான் காரணம் என்று சிலரும், கிரிஸ்தவர்களின் விட்டுக்கொடுக்கும் தன்மையால் தான் இது நடந்தது என்று ஆளுக்கொரு காரணத்தினை சொன்னாலும், விவேகானந்தர் என்ற ஒரு நல்ல ஆன்மாவிற்காக மட்டுமே இது சாத்தியமானது என்பது தான் உண்மை.



ஒரு ஊர்ல....

ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார்
தலைப்பு கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்
ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார்.
அதை கண்ட அவர் கணவர் என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என்றார்
என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள்
என்று கொடுத்தார் அதில்
கடவுளே என்னை என் வீட்டில் இருக்கும் டிவியை போல் ஆக்கிவிடு
நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும்.அதை போல் வாழ வேண்டும்
எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர்.
நான் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க வேண்டும்,அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும்.தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு கவனத்தை போல் நானும் பெற வேண்டும் .
அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம்
அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும் என்னை விளக்க கூடாது .
என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும் சண்டையிடவேண்டும்
என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும் .
கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்
என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை.நான் டிவியை போல் வாழ வேண்டும் அவ்வளவுதான் .
இதை படித்துவிட்டு கணவர் சொன்னார் அந்த குழந்தை பாவம் என்ன பெற்றோர் இவர்கள் குழந்தையை கவனிக்காமல் என்ன ஜென்மமோ .
ஆசிரியை தன் கணவரிடம் கூறினார் இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்
பெற்றோர்களே டீவீக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நம் குடும்ப உறவுகளை தூரமாக்கி விடாதீர்கள்
டிவியில் வரும் சில ப்ரோக்ராம்கள் கூட குழந்தைகளிடம் எதிமறையான விளைவுகளை ஏற்படுத்த கூடியவைகளாகவே பெரும்பாலும் இப்பொழுது உள்ளன
எனவே பொன்னான நேரத்தை சிறிது குடும்பத்தினருடன் செலவிட பலக்கபடுத்திகொள்ளுங்கள்.

சூரிய ஒளி மின்சாரம் - 4

கிரிட்-டை சோலார் சிஸ்டம் (Grid-Tie Solar Power System)
கிரிட்-டை என்றால் மின்வாரிய இணைப்புடன் இணைக்கப்பட்டது என பொருள். அதாவது நாம் சோலார் சிஸ்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நம் தேவைக்கு அதிகமாக இருந்தால், அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்கவும், குறைவாக இருந்தால் அதை மின்வாரியத்திடமிருந்து பெறும் வகையில் அமைக்கப்படுவதே கிரிட்-டை சிஸ்டம் ஆகும். உதாரணத்திற்கு நாம் நாள் ஒன்றுக்கு 15 யூனிட் (15,000W) மின்சாரத்தை சோலார் மூலம் உற்பத்தி செய்வதாக வைத்துக்கொள்வோம் சராசரியாக நமக்கு 8-10 யூனிட்டுகள்தான் உபயோகத்திற்கு தேவை. தினந்தோறும் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரத்தை பாட்டரி பேங்க்-ன் திறன் எவ்வளவோ அந்த அளவுக்கு தான் சேமிக்க முடியும். அதன் பின் தினமும் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரம் வீணாகிக்கொண்டே இருக்கும். சில நாட்களில் நமக்கு உற்பத்திக்கு மேல் அதிகமாக மின்சாரம் தேவைப்படும். எனவே தேவைப்படும் பொழுது பற்றாக்குறை மின்சாரத்தை மின்வாரியத்திடமிருந்து பெறவும், தேவை இல்லாத நேரத்தில் அதிகப்படியான உற்பத்தி மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்றுவிடவும் இந்த அமைப்பால் முடியும். இதற்கு மின்வாரியத்துடன் நெட்-மீட்டரிங் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த முறை அமுலில் உள்ளது.
இந்த சிஸ்டத்தில் மீட்டர் பொறுத்தும் முறையில் ஒவ்வொரு நாடும் வெவ்வெறு முறைகளை பயன்படுத்துகிறது. காட்டப்பட்ட படம் பாட்டரி பேங்க் இல்லாத சிஸ்டத்திற்கு உரியது. மின்வாரியத்திடமிருந்து அவர்கள் பெறும் மின்சாரத்திற்கு வீடுகளுக்கான ரேட்டும், அவர்கள் மின் வாரியத்திற்கு விற்கும் உபரி மின்சாரத்திற்கு அதிகப்படியான ரேட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தேவைக்கு மேல் திறன் கொண்ட சிஸ்டத்தை அமைத்து லாபம் பெறுகிறார்கள். அரசுக்கும் மின் பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும்

பாட்டரி பேங்குடன் கூடிய கிரிட்-டை சோலார் சிஸ்டம்
சில மாநிலங்களில், நம் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை கிரிட்-டை இன்வெர்டர் மூலமாக மின்வாரியத்திற்கு திருப்பி கொடுக்கும் திட்டம் அமுலில் உள்ளது. அதாவது நம்மிடமிருந்து மின்வாரிய சப்ளைக்கு மின்சாரத்தை நம் இன்வெர்டர் அனுப்பும் பொழுது மின் வாரிய மீட்டர் எதிர் திசையில் சுற்றி, மீட்டர் ரீடிங் மின் அளவுக்கு ஏற்ப குறையும். இரு திசையிலும் (Clockwise&Anti-clockwise)சுற்றக்கூடிய மீட்டரை பொருத்தி விடுகிறார்கள். இதனால் மின்வாரிய சப்ளையிலிருந்து உபயோகித்த மின்சாரத்திலிருந்து, நாம் அவர்களுக்கு கொடுத்த மின்சாரத்தை கழித்து மீதி உள்ள மின்சாரத்தின் அளவையே அது காட்டும். நாம் அதிகமாக கொடுத்திருந்தால் அதற்கான கட்டணத்தை நமக்கு தரும். இந்த தகவலை என்னால் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.ஆஃப்-கிரிட்(Standalone) சிஸ்டத்திற்கும், கிரிட்-டை சிஸ்டத்திற்கும், இன்வெர்ட்டர் தவிர வேறு எந்த மாற்றமும் கிடையாது. கிரீட்-டை சிஸ்டம் அமைத்தால், இன்வெர்ட்டர் எப்பொழுதும் ஆன்(ON) நிலையிலேயே இருக்க வேண்டும். காரணம், மின்வாரிய இணைப்பு இன்வெர்ட்டர் மூலமாகத்தான் வீட்டு இணைப்புக்கு வரும். மேலும் நாம் மின்சாரத்தை உபயோகிக்காமலிருந்தாலோ அல்லது குறைவாக மின்சாரத்தை உபயோகித்துக்கொண்டிருந்தாலோ, சோலார் மின்சாரம் கிரிட் எனப்படும் மின்வாரிய சப்ளைக்கு போய்கொண்டிருக்கும். அதனால் நமக்கு பாட்டரியில் பேக்-அப் மின்சாரம் இருக்காது. எனவே பாட்டரிக்கும் இன்வெர்ட்டருக்கும் இடையிலான இணைப்பில் ஆன் -ஆஃப் (ON-OFF) சுவிட்ச் இணைக்க வேண்டும்.
மத்திய அரசு “Ministry of Renewable Energy – (MNRE)” அமைச்சகத்தின் மூலம் சூரிய ஒளியை சக்திக்கு பயன்படுத்த பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி வருகிறது.நேரடியாக இத்திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் National Bank for Agricultural and Rural Development – NABARD”மூலமாகவும், மாநில அரசுகளின் மின்சக்தி மேம்பாட்டு ஏஜன்ஸிகளின் மூலமாகவும் செயல்படுத்துகிறது. நிதி உதவி தேவைப்படுபவர்கள் நபார்டு வங்கியை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மானிய தொகை நீக்கி மீதியுள்ள தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் கடனாக வழங்கப்படும். MNRE-யால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்தே வாங்கவேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளையும் கடன் வழங்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
வங்கி கடன் தேவை இல்லை என்றால் நாம் நேரடியாக அங்கீகாரம் பெற்ற சப்ளையர்கள் அல்லது உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்களே மானிய தொகைக்கு ஏற்பாடு செய்வார்கள். வாங்கப்படும் சிஸ்டத்திற்கு MNRE பொறுப்புகிடையாது. எனவே அவர்களுடைய பட்டியலில் உள்ள நல்ல டீலரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. உத்திரவாதம், சர்வீஸ் ஆகியவற்றை செய்து தருபவராக இருக்கவேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சோலார் சிஸ்டம் மிக குறைந்த வாட்ஸ் கொண்டது என்பதால், கிராமப்பகுதி மக்களுக்கே பயன்படும் என நினைக்கிறேன்



சூரிய ஒளி மின்சாரம் - 3

சோலர்ர் பேனல்களை கொண்டு 12V/24V மின் அழுத்தம் கொண்ட 1KWh (1000 வாட்ஸ்) Solar Array-ஐ அமைக்கும் விதத்தை கூறியுள்ளேன். இனி அடுத்த நிலையாகிய சோலார் ஆரே மூலம் கிடைக்கும் மின்சாரத்தை ஒழுங்கு படுத்துவது (Regulate) பற்றி இனி பார்க்கலாம்.
அதிக அளவு வெயிலில் மின் அழுத்தம் (Voltage at Typical Power) 17V ஆகும். 12V பாட்டரியை சார்ஜ் செய்ய முதலில் 14.4V – 14.6V மின் அழுத்தமும், அதன் பின் 13.4V-13.7V மின் அழுத்தமும் வேண்டும். சோலார் ஆரேயிலிருந்து கிடைக்கும் மின் அழுத்தம் வெயிலின் அளவுக்கு ஏற்ப மாறுபட்டு கொண்டிருக்கும். இதை ஒழுங்கு படுத்தி பாட்டரி சார்ஜிங்-க்கு தேவையான மின் அழுத்தத்தை கொடுக்க ஒரு சாதனம் வேண்டும். அதுதான் சார்ஜ் ரெகுலேட்டர் ஆகும். இது சார்ஜ் கண்டிரோலர் என்றும் கூறப்படும்.
சார்ஜ் கண்டிரோலர் 6V, 12V, 24, 36V, 48V என பல மின் அழுத்தத்தில் 6A,10A, 20A, 30A, 40A, 60A என பல திறன்களில் கிடைக்கிறது.சில கம்பெனிகள் 12V/24V ஆட்டோ மாடல்களிலும் தயாரிக்கிறது. அதாவது இது 12V, 24V மின் அழுத்தத்தில் இயங்கும்.
நம்முடைய சோலார் பேனலை இணைத்திருக்கும் விதத்தில் அதன் மின் அழுத்தம், கரண்ட் (ஆம்பியர்) திறன் ஆகியவற்றை வைத்து நமக்கு தேவையான சார்ஜ் கண்டிரோலரை தேர்வு செய்ய வேண்டும்.
முன் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விபர குறிப்பில் 100W பேனல் 5.9 ஆம்பியர் கரண்டை தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 100W -12V பேனல்கள் 10-ஐ பேரலல் முறையில் இணைத்திருந்தால் அந்த ஆரேயிலிருந்து கிடைக்கும் கரண்ட் 59 ஆம்பியராகும் (5.9 x 10). கிட்டதட்ட 60 ஆம்பியர் கரண்டை ரெகுலேட்டருக்கு எடுத்து செல்ல மிகவும் தடிமனான வயர் தேவை. வயர் கனம் அதிகமாக ஆக அதன் விலையும் அதிகமாக இருக்கும். மொட்டை மாடியில் இருக்கும் சோலார் பேனல்களின் இணைப்பிலிருந்து கீழே வீட்டுக்குள் சார்ஜ் கண்டிரோலர், பாட்டரி, இன்வெர்ட்டர் ஆகியவைகள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சார்ஜ் கண்டிரோலருடன் இணைக்க அதிக நீளம் வயர் தேவை. இந்த செலவை குறைக்க வேண்டும். அதனால் 400W வரையிலான சோலார் பவர் சிஸ்டத்தை மட்டுமே 12V ஆக டிசைன் செய்ய வேண்டும். அதற்கு மேல் வாட்டேஜ் உள்ளவற்றை 24V-க்கு டிசைன் செய்ய வேண்டும். 12V சிஸ்டத்திற்கு வயருக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, 12V-60ஆம்பியர் சார்ஜ் கண்ட்ரோலரும் பல மடங்கு விலை அதிகம். கிடைப்பதும் கஷ்டம். வாட்டேஜ் அதிகரிக்க அதிகரிக்க சிஸ்டத்தை 24V, 36V, 48V என வடிவமைக்க வேண்டும்.
முந்தைய பதிவில் 100W-12V சோலர்ர் பேனல்களை சீரியல் மற்றும் பேரலெல் முறையில் இணைக்க வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது. இரண்டு பேனல்களை சிரியஸ் முறையில் இணைக்க வேண்டும். இப்பொழுது இந்த இரண்டு பேனல்களும் சேர்ந்து 200W-24V ஆக மாறிவிடும். கிடைக்கும் கரண்ட் 5.9 ஆம்பியராகும். இவ்விதம் 5 செட் (set) இணைக்க வேண்டும். இவற்றை இனி பேரலெல் முறையில் இணைக்கும் பொழுது 1KW-24V ஆரே கிடைத்து விடும். ஆனால் இதிலிருந்து கிடைக்கும் கரண்ட் 29.5(5.9x 5) ஆம்பியராக இருக்கும். இதனால் 24V-30A சார்ஜ் கண்ரோலர் போதுமானது.ஆனால் 30 ஆம்பியர் அளவுக்கு அதிகமான திறன் கொண்ட சார்ஜ் கண்ட்ரோலரை உபயோகிப்பது நல்லது.
இது சோலார் பேனலில் கிடைக்கும் மின்சாரத்தை அப்படியே பாட்டரியை சார்ஜ் செய்யும் அளவிற்கு கட்டுப்படுத்தி பாட்டரிக்கு கரண்டை கொடுக்கும். சோலார் பேனலில் இருந்து அதிகப்படியான அளவுக்கு கரண்டை பெறும் தொழில் நுட்பத்திற்கு “Maximum Power Point Tracking” என்று பெயர். இது சுருக்கமாக MPPT என சொல்லப்படும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்திய சார்ஜர் கண்ட்ரோலர் படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இனி அடுத்த நிலை, பாட்டரி பேங்க் டிசைன் செய்வது. ஒன்றுக்கு மேற்பட்ட பாட்டரிகளை இணைக்கும் பொழுது அது, பாட்டரி பேங்க் என அழைக்கப்படும். இப்பொழுது நம்முடைய 1KW-24 சிஸ்டத்திற்கான பாட்டரி பாங்க் டிசைன் செய்வதை பார்க்கலாம். சார்ஜ் கண்ட்ரோலரால் சீராக்கப்பட்ட, சோலார் ஆரேயிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை சேமிக்க பாட்டரி பேங்க் பயன்படுகிறது. இப்பொழுது இந்த பாட்டரி பேங்க் எவ்வளவு திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
1000W-24V-30Ah. அதாவது ஒரு மணி நேரத்தில் 24 வோல்ட் மின் அழுத்தத்தில் 30 ஆம்பியர் கரண்ட் நமக்கு கிடைக்கும். சராசரியாக நாள் 1-க்கு 5 மணி நேரம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கரண்ட் 150 ஆம்பியராகும்(24 வோல்ட் மின் அழுத்தத்தில்). வெளி நாடுகளில் 3 நாட்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் பாட்டரி பாங்க்கை வடிவமைப்பார்கள். இந்த கணக்குப்படி நமக்கு 450 Ah (24 volt) பாட்டரி தேவை. பாட்டரிகள் நம் தேவைக்கு ஏற்ற அளவில் கிடைக்காது. எளிதில் கிடைக்கும் பாட்டரிகளை சீர்யஸ் மற்றும் பேரலெல் முறையில் இணத்து நமக்கு தேவைப்படும் அளவில் பாட்டரி பேங்கை அமைத்துக்கொள்ள வேண்டும்.
தேவை —— 24V-450Ah பாட்டரி
12V-150Ah பேட்டரி = 6 Nos
இரண்டு பேட்டரிகளை சீரியல் முறையில் இணைக்கும் பொழுது அது 24V-150Ah பேட்டரியாக மாறிவிடும். இவ்விதம் 3 செட்(set) இனைத்துக்கொள்ளவேண்டும்.
அதன் பிறகு 3 செட்டையும் பேரலில் இணைக்கும் பொழுது நமக்கு 24V-450Ah பேட்டரி பேங்க் கிடைத்து விடும். சீரியஸ் + பேரலெல் இணைப்பு பற்றி படத்துடன் முன்பு விளக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்தால் போதும் என்றால் நமக்கு தேவை 24V-300Ah பேட்டரி பேங்க். அதற்கு தேவை 12V-150Ah பேட்டரிகள்
ஒரு வேளை 150 ஆம்பியர் பேட்டரி கிடைக்கவில்லை என்றால் 100 ஆம்பியர் பேட்டரியை உபயோகிக்கலாம்.
12V-100Ah பேட்டரி தேவை = 8 / 10 Nos
சீரியஸ் முறையில் இரண்டு பேட்டரிகளை இணைக்கும் பொழுது 24V-100ஆம்பியர் பேட்டரியாக மாறிவிடும். இவ்விதம் இணைக்கப்பட்ட 4 செட் பேட்டரிகளை பேரலெல் முறையில் இணைக்கும் பொழுது 24V-400 ஆம்பியர் கிடைக்கும். இது நம் தேவையை விட 50 ஆம்பியர் குறைவு 5செட்களை இணைதால் 24V-500 ஆம்பியர் கிடைக்கும். இது தேவையை விட 50 ஆம்பியர் அதிகம்.
இரண்டு நாள் உற்பத்தியை சேமித்தால் போதும் என்றால் நமக்கு தேவை 24V-300ஆம்பியர் பாட்டரி. இதற்கு தேவை ஆறு எண்ணிக்கை பேட்டரிகள்.
முக்கிய குறிப்பு: பேட்டரியை சீரீயஸ் முறையில் இணைக்கும் பொழுது முதல் பாட்டரியின் நெகடிவ் முனையை 2-வது பாட்டரியின் பாசிடிவ் முனையுடன் இணைக்க வேண்டும். இப்பொழுது முதல் பாட்டரியின் பாசிடிவ் முனையும் 2-வது பேட்டரியின் நெகடிவ் முனையும் இணைப்பின்றி இருக்கும். இவ்விதம் இணைக்கப்பட்ட பாட்டரி செட்களை பேரலெல் முறையில் இணைக்கும் பொழுது அனைத்து செட்களின் பாசிடிவ் முனைகளை ஒன்றாகவும், நெகடிவ் முனைகளை ஒன்றாகவும் இணைக்க வேண்டும். இந்த இரு முனைகள் வழியாகத்தான் நமக்கு பேட்டரி கரண்ட் கிடைக்கும்.
பேட்டரி பேங்கை ரேக்கிலும் அமைக்கலாம். அல்லது இடவசதி இருந்தாலும் தரையிலும் வைக்கலாம்.
பாட்டரியில் சேமிக்கப்பட்டிருக்கும் டி.சி கரண்ட்(ஆம்பியர்) -ஐ ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உபயோகப்படுத்த முடியாது. பேட்டரி கரண்டில் 50% தான் பயன் படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால் பேட்டரி டிஸ்சார்ஜ் லெவலுக்கு கீழே போய்விடும். இதனால் பாட்டரியின் வாழ்நாள் குறைந்து விடும். எனவே இன்வெர்ட்டர் தானாகவே அந்த லெவலுக்கு கீழே போனால் மின் இணைப்பை துண்டித்து விடும். எனவே நாம் கவலைப்பட தேவையில்லை. நம்முடைய பேட்டரி பேங்க் 24V-450Amp ஆக இருந்தால் அதில் சேமிக்கப்பட்டுள்ள 450 ஆம்பியரில் 225 ஆம்பியர் கரண்டை மட்டுமே உபயோகிக்கமுடியும். இந்த கரண்டை இன்வெர்ட்டர் 230V ஏ.சி மின்சாரமாக மாற்றும் பொழுது நமக்கு கிடைக்கும் மின்சாரம் உத்தேசமாக 5400வாட்ஸ். ஆனால் பாட்டரியில் மீதி இருக்கும் கரண்ட் பிக்சட் டெப்பாசிட் போல பாட்டரியிலே இருக்கும். அதன் பின், சோலார் பேனலில் இருந்து கிடைக்கும் கரண்ட் பாட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடும். சோலார் பேனல் தினமும் 5 யூனிட்டுக்கு தேவையான கரண்டை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. எனவே தினந்தோறும் நாம் 5 யூனிட் மின்சாரத்தை தான் உபயோகிக்கவேண்டும்.
இப்பொழுது 24V-600 ஆம்பியர் பேட்டரி பேங்கை உபயோகித்தால் சுமார் 7200 வாட்ஸ் மின்சாரத்தை பேட்டரியிலிருந்து பெறலாம். இதனால் பாட்டரியில் குறைந்த மின்சாரத்தை சோலார் பேனல் சார்ஜ் செய்ய ஒன்றரை நாட்கள் தேவைப்படும். நீங்கள் முன்பு போலவே தினமும் 5000 வாட்ஸ் உபயோகித்தால் மீதி 2200 வாட்ஸ் மின்சாரம் ரிசர்வ்-ல் எப்பொழுதும் இருக்கும்.
சுருக்கமாக சொல்லப்போனால் உங்கள் சிஸ்டம் ஒரு நாளைக்கு எத்தனை வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறதோ அதே அளவு மின்சாரத்தை தான் நீங்கள் உபயோகிக்க வேண்டும். 1000வாட்ஸ் சிஸ்டம் என்றால் 5000 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சிஸ்டத்தின் திறனைப்போல 5 மடங்கு. உங்கள் விருப்பப்படி ரிசர்வ் மின்சாரத்தை அதிகரிக்க பாட்டரியை அதிகப்படுத்த வேண்டும்.
முதல் வரிசையை பார்க்கலாம்.12V-150A. 6 பேட்டரிகள் தேவை. இரண்டு இரண்டாக சீரியஸ் முறையில் இணைக்க வேண்டும். இவ்விதம் இணைத்தால் 3 செட் கிடைக்கும். இந்த 3 செட்களையும் பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். இதைத்தான் 2 S x 3 P என சுருக்கமாக ஒரு சீரியஸ் இணைப்புக்கு 2 பாட்டரிகள் (2S), 3 பேரலல் இணைப்புகள் (3P) என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து அதில் கிடைக்கும் கரண்ட். 450 ஆம்பியர். அதில் உபயோகிக்க கூடியது 225 ஆம்பியர். அதிலிருந்து இன்வெர்ட்டர் மூலமாக நமக்கு கிடைக்கும் மின்சாரம் 5400 வாட்ஸ். ஒரு நாளைக்கு உபயோகப்படுத்த வேண்டிய வாட்ஸ் 5000. மீதி ரிசர்வில் இருப்பது 400 வாட்ஸ். இதைப்போலவே மற்றவற்றை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அடுத்த நிலைக்கு வருவோம். நம்முடைய சிஸ்டம் 1KW என்பதால் இன்வெர்ட்டரும் 1KW ஆக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரே நேரத்தில் நாம் எத்தனை வாட்ஸ்களை அதிகப்படியாக உபயோகிக்கிறோமோ அதை விட கூடுதலாக இருக்க வேண்டும். மார்க்கெட்டில் நல்ல கம்பெனி தயாரிப்புகள், சில குறிப்பிட்ட திறன் மற்றும் மின்அழுத்ததில் கிடைக்கும். அதில் நமக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இன்வெர்ட்டர்களில் வாட்ஸ் என குறிப்பிடப்படுவது கிடையாது. 600VA, 800VA, 1200VA என குறிப்பிடப்பட்டிருக்கும். 1 VA = 0.8W ஆகும். 600VA என்றால் 480W ( 600 x 0.8)சோலாருக்கென்றே பிரத்யோகமாக தயாரிக்கப்படும் சில இன்வெர்ட்டர்களில் MPPT சார்ஜ் கண்டிரோலரும் பில்ட்-இன் ஆக இருக்கும். இத்தகைய இன்வெர்ட்டரை உபயோகப்படுத்தும் பொழுது நாம் சார்ஜ் கண்ட்ரோலரை தனியாக வாங்க வேண்டியது இல்லை.
தற்சமயம் Micro Inverter கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அளவில் மிகவும் சிறியது. ஆனால் இதில் MPPT சார்ஜ் கண்ட்ரோலரும் உள்ளடங்கியது. இதை சோலார் பேனலின் பின் பக்கத்தில் இணைத்துக்கொள்ளலாம். இவ்விதம் இணைக்கும் பொழுது சோலார் பேனலில் இருந்து வெளி வரும் மின்சாரம் 230 V A.C ஆக இருக்கும். நாம் 10 பேனல்கள் உபயோகித்தால் ஒவ்வொரு பேனலுடனும் ஒரு மைக்ரோ இன்வெர்ட்டர் இணைக்க வேண்டும்.அதன் ஏ.சி அவுட்புட்டை பேரலெல் ஆக இணைக்க வேண்டும். இப்பொழுது மொத்த பேனலின் அவுட்புட் மின்சாரமும் 230 வோல்ட் ஏ.சி-யாக இருக்கும். இதை சேமிக்க முடியாது. உடனே நாம் உபயோகிக்க வேண்டும். இது கிரிட்-டை (GRID-TIE) சிஸ்டத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். நாம் இதுவரை தெரிந்து கொண்டது OFF-GRID SYSTEM.
OFF-GRID SYSTEM: நாம் இதுவரை பார்த்த ஆஃப்-கிரீட் சிஸ்டத்தை நம் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.
நாம் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் சோலார் மின்சாரம் தினசரி உபயோகத்திற்கு போதுமானதாக இருந்தால் அதையே உபயோகப்படுத்தலாம். மின் வாரிய இணைப்பை எமெர்ஜென்ஸிக்கு மட்டுமே பயன்படுத்தலாம். ஒரு சேஞ் ஓவர் சுவிட்ச் இணைப்பதன் மூலமாக மின்வாரிய மின்சாரம், இன்வெர்ட்டரிலிருந்து வரும் சோலார் மின்சாரம் இவற்றை நம் விருப்பப்படி உபயோகிக்கலாம். ஜெனரேட்டர் உபயோகிப்பவர்கள் இந்த சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சைதான் பயன்படுத்துவார்கள்.
அடுத்த பதிவில் GRID-TIE SYSTEM பற்றி விரிவாக பார்க்கலாம்………





சூரிய ஒளி மின்சாரம் - 1

சூரிய ஒளி மின்சாரம் - 1
பூமியின் வெப்ப நிலை மாறுபட்டு வருவதால் பருவ மழை இப்பொழுது பொய்த்து வருகிறது. அதனால் நீர் தேக்கங்கள் மூலமாக தண்ணீரின் விசையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் (Hydro Power Plant) மின் உற்பத்தி குறைந்து வருகிறது
நிலக்கரியை கொண்டு நீரை சூடாக்கி, நீராவியின் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் அணல் மின் நிலையங்களில் (Thermal Power Plant) தயாரிக்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் நிலக்கரி அமுத சுரபி போல தோண்ட தோண்ட கிடைத்துக்கொண்டே இருக்கப்போவதில்லை. ஒரு கால கட்டத்தில் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். அதனால் இம்முறையிலும் தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய இயலாது.
அணுமின் நிலையங்கள் (Atomic Power Plant) மூலம் உற்பத்தி செய்யும் பொழுது தடையில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருந்தாலும், ஆபத்து அதிக அளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதுடன், விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிப்படைய கூடும். தொழில் நுட்பத்திலிலும் பொறுப்புடன் செயல்படுவதிலும் சிறந்த மேலை நாடுகள் கூட, இத்திட்டத்தை கைவிட்டு வருகிறது.
இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரத்தை பெறக்கூடிய, சூரிய ஒளி மின்சாரமே எதிர்காலத்தில் நிலைத்து இருக்கும். இம்முறை எளிதானது. ஆபத்தில்லாதது, செலவில்லாதது. நம் தேவைக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். சூரிய ஒளி மின்சாரம் பற்றி முழுமையாக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் புத்தகங்கள் இல்லை. எனவே சூரிய ஒளி மின்சாரத்தை பற்றியும், அதை உற்பத்தி செய்யும் முறை பற்றியும் தெளிவான விளக்கப்படங்களுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தொடர் பதிவாக பதிவிட முடிவு செய்துள்ளேன். இதன் தொடர்ச்சி பல பதிவுகளாக வெளிவரும். உங்கள் சந்தேகங்களை பின்னூட்டம் மூலமாக கேளுங்கள்.
சூரிய ஒளி கதிகள் சிலிகானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட போட்டோ வோல்ட்டைக் (PV – Photovoltaic) செல்களின் மீது விழும்பொழுது அது DC மின்சாரமாக மாற்றப்படுகிறது.
DC (Direct current) மின்சாரத்திற்கு பாசிடிவ், நெகடிவ் என இரு முனைகள் (Terminals) உண்டு. இந்த முனைகளில் மின்சாரம் கிடைக்கும். இதன் திறன் 0.5 வோல்ட் ஆகவும் மிகவும் குறைவான அளவு ஆம்பியர் கரண்ட் ஆக இருக்கும். எனவே ஒரு செல்லிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு நாம் எதையும் இயக்க முடியாது. எனவே நமக்கு தேவைப்படும் வோல்ட் மற்றும் ஆம்பியர் கிடைக்கும் வகையில் பல செல்களை சீரியல் (SERIES) மற்றும் பேரலெல் (PARALLEL) முறையில் இணைத்து ஒரு மாடுல்ஸ் (MODULES) ஆக தயாரிக்கப்படுகிறது. இவை தான் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றின் திறன் 5 WATT முதல் 300 WATT இருக்கும். நம் தேவைக்கு ஏற்ப இவற்றை வாங்கி கொள்ளலாம்.
பொதுவாக 3 வோல்ட், 6 வோல்ட், 12 வோல்ட் என ப்ல வோல்ட்டேஜ்களில் பல செல்களை இணைத்து பேனல் தயாரிக்கப்பட்டாலும், அதிக அளவில் பயன்படுவது 12 வோல்ட் பேனல்களே.
இனி பி.வி. பேனல் மூலம் எப்படி மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். இந்த பேனலில் சூரிய ஒளி படும்பொழுது மின் சக்தியாக மாறும். அவ்வாறு கிடைக்கும் டி.சி. மின்சாரம் ஒரே அளவில் இருக்காது. இது சூரிய ஒளியின் பிரகாசத்திற்கு ஏற்ப கூடி குறையும். உதாரணத்திற்கு நாம் உபயோகிக்கும் பேனெல் 12 வோல்ட் / 80 வாட் என வைத்துக்கொள்வோம். 12 மணி உச்சி வெயில் இது 14 வோல்ட்டுக்கும் அதிகமான வோல்ட்டை கொடுக்கும். காலையிலும் மாலையிலும், மேக மூட்டம் இருக்கும் பொழுது 12 வோல்ட்டுக்கு குறைவான வோல்ட்டை தரும். எனவே அப்படியே இந்த மின்சாரத்தை பாட்டரியில் சார்ஜ் செய்தால் பாட்டரி கெட்டுவிடும். எனவே பாட்டரி சார்ஜ் செய்ய தேவையான மின்சாரத்தை மட்டுமே பாட்டரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சாதனம் தேவை. அதுதான் சார்ஜ் ரெகுலேட்டர் ஆகும்.
சோலார் பேனலின் பாசிடிவ் முனையை சார்ஜ் ரெகுலேட்டரின் இன் புட்டில் ( INPUT) – பாசிடிவ் உடன் இணைக்கவேண்டும் . அதை போலவே நெகடிவ் முனையை நெகடிவ்வுடன் இணைக்கவேண்டும். சார்ஜ் ரெகுலேட்டரின் அவுட் புட்டில் (OUTPUT) பாட்டரியின் பாசிடிவ் முனையை பாசிடிவ்வுடனும், நெகடிவ்வை நெகடிவ்வுடனும் இணைக்க வேண்டும். .
சார்ஜ் கண்டிரோலர் / ரெகுலேட்டெர் 7 AMPS, 10 AMPS ,20 AMPS — 12 volt /24 volt என்ற அளவுகளில் கிடைக்கும். இதற்கு உபயோகப்படும் பாட்டரி நாம் எல்லோரும் பாiர்த்திருக்கக்கூடியது தான். அதாவது கார் மற்றும் லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் 12 வோல்ட், 24 வோல்ட் பேட்டரிகள்தான். சோலார் மற்றும் இன் வெர்ட்டருக்கென டீப் சைக்கிள் பாட்டரியும் உண்டு.
இனி பாட்டரிகளில் சேமிக்கப்படும் மின்சாரம் 12 வோல்ட் அல்லது 24 வோல்ட் ஆக இருக்கும். இந்த மின்சாரத்தை கொண்டு நம் வீட்டிலுள்ள மின் விளைக்கை எரிய வைக்க முடியாது. ஃபேன், டி.வி எதுவும் இந்த மின்சாரத்தில் இயங்காது. காரணம் இவையெல்லாம் 220 வோல்ட் ஏசி மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. எனவே பாட்டரியில் சேமிக்கப்பட்டுள்ள 12 / 24 வோல்ட் டி.சி. மின்சாரத்தை 220 வோல்ட் ஏசி மின்சாரமாக மற்ற வேண்டும். .
இனி நமக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் மின்சாரம் எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சாரத்தை உபயோகப்படுத்தும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
சாதாரண பல்பு மிகவும் அதிகமாக கரண்ட் எடுக்கும். உதாரணத்திற்கு 60 வாட் பல்பு என்றால் ஒரு மணி நேரம் எரிய 60 வாட் சக்தி வேண்டும். அதாவது 0.272 ஆம்பியர் கரண்ட் வேண்டும். அதே வெளிச்சத்தை 13 – 15 வாட் காம்பேக்ட் புளோரசென்ட் லாம்ப் ( CFL – COMPACT FLUORESENT LAMP ) தரும். அதாவது நான்கில் ஒரு பங்கு மின்சாரமே தேவைப்படும்.
எனவே சாதாரண பல்புகளுக்கு பதில் CFL பல்புகளை உபயோகித்தால் மின் செலவு குறையும். சீலிங் ஃபேன் = 65 W -75 W, டி.வி = 100 W . இது கம்பெனி, மாடல்களை பொருத்து மாறுபடும். எனவே நம் டி.வி.யின் சர்வீஸ் மேனுவலை பார்க்கவேண்டும். இப்பொழுது நாம் எந்தெந்த சாதனங்களை எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு உபயோகிக்கிறோம் என்பதை பார்க்கலாம்.
சீலிங் ஃபேன் 6 மணி நேரம் = 6 x 70 W = 420 W
லைட் 6 மணி நேரம் = 6 x 40 W = 240 W
டி.வி 4 மணி நேரம் = 4 x 100W = 400 W
ஆக மொத்தம் வாட்ஸ் ———————— = 1060 W
இதைப்போலவே நாம் உபயோகிக்கும் சாதனங்கள் எத்தனை வாட்ஸ், எவ்வளவு நேரம் உபயோகிக்கிறோம் என்பதை கணக்கிட்டு மொத்த மின் தேவையை கணக்கிடலாம்.
இனி வோல்ட், கரண்ட், வாட் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
பேச்சு வழக்கில் நாம் கரண்ட் என்று சொல்வோம். அது மின்சாரத்தை குறிக்கும். ஃபேன் மெதுவாக சுற்றினாலோ அல்லது டியூப் லைட் எரியாமல் விட்டு விட்டு எரிந்தால் லோ வோல்ட் என்று சொல்வோம். அடுத்தபடி கடையில் பல்பு வாங்கும் பொழுது 40W அல்லது 60 வாட் பல்பு கொடுங்கள் என்று கேட்ப்போம். அதற்கு மேல் நமக்கு மின்சாரத்தை பற்றி தெரியாது. அவசியம் வோல்ட், கரண்ட், வாட்ஸ் என்றால் என்ன? அவை ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு உடையது என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
வோல்ட் (VOLT)
மின்சாரத்திலிருக்கும் எலெக்ட்ரான்களை (ELECTRONS) லோடு அல்லது சர்க்கியூட் என அழைக்கப்படும் நம் மின்சாதனத்திற்கு அனுப்பும் அழுத்தமே வோல்ட் ஆகும். எனவேதான் வோல்ட்டை மின் அழுத்தம் என தமிழில் சொல்கிறோம். தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயத்தில் தண்ணீர் தொட்டி இருக்கிறது. அதன் அடிப்பாகத்தில் 1 cm அளவுள்ள குழாய் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அதே தொட்டி 10 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது முதல் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பொழுது அதன் வெளியேறு குழாய் வழியாக வெளிவரும் தண்ணீரின் அழுத்தம் குறைவாக இருக்கும். 10 மீட்டர் உயரத்திலிருந்து வெளிவரும் தண்னீரின் அழுத்தம் 10 மடங்கு அதிகமாக இருக்கும்.6 வோல்ட், 12 வோல்ட், 24 வோல்ட் பாட்டரிகளை இப்பொழுது ஒப்பிட்டு பார்ப்போம். 24 வோல்ட் பாட்டரி 6 வோல்ட் பாட்டரியை விட 4 மடங்கு மின் அழுத்தம் அதிகமானது. அதைப்போல 12 வோல்ட் பாட்டரியை விட 2 மடங்கு அதிக மின் அழுத்தம் கொண்டது.
கரண்ட் (CURRENT)
தண்ணீர் தொட்டியிலிருந்து குழாய் வழியாக வாட்டர் மாலிகுல்ஸ் என்ற தண்ணீர் வெளியேறும் அளவை போல மின்சார எலெக்டிரான்ஸ் வெளியேறும் அளவை கரண்ட் குறிக்கும். அதாவது நம் சாதனம் உபயோகிக்கும் எலெக்டிரான்ஸ் அளவை குறிக்கும். பொதுவாக கரண்ட் என்பது ஆம்பியர் என அழைக்கப்படும்.
படத்தில் முதல் தொட்டியின் அவுட்லெட் பைப் 1 செ.மி, இரண்டாவது படத்தில் 10 செ.மி பைப் இணைக்கப்பட்டுள்ளது. 1 செ.மி அளவிலுள்ள குழாய் 1 மணி நேரத்தில் 100 லிட்டர் தண்ணீர் வெளிவருவதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் 10 செ.மி அளவுள்ள குழாய் மூலம் 100 லிட்டருக்கு அதிகமாக பல மடங்கு தண்ணீர் வெளிவருமல்லவா?. ஆமாம். அதைப்போலவே மின் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள சாதனம் அதிக அளவில் மின்சாரத்தை எடுக்கக்கூடியதென்றால், அதற்கேற்ப இணைப்பு வயரின் பருமனை ( cross-sectional area) அதிகரிக்க வேண்டும்.
இப்பொழுது Ohms’s Law பற்றி தெரிந்து கொள்வோம்.
POWER = VOLTAGE X CURRENT ( P = V x I )
or
WATT = VOLTAGE X AMPERE ( W = V x A )
இதுதான் அடிப்படை விதி. இப்பொழுது வாட், வோல்ட், ஆம்பியர் இவற்றில் ஏதாவது 2 தெரிந்திருந்தால் மூன்றாவதை கண்டுபிடித்து விட முடியும். உதாரணத்திற்கு டி.வியை எடுத்துக்கொள்ளலாம். அது இயங்கும் வோல்ட் 220. 100 வாட் என டிவி. காபினட்டில் போட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அது எவ்வளவு கரண்டை எடுக்கும்?
W = V x A
ie 100 W = 220 x A
ie 100 / 220 = A (Watt divided by Volt)
ie = 0.455 Amp
அதாவது 0.455 ஆம்பியர் கரண்ட் அதற்கு தேவை.
இனி சீரியஸ் ( SERIES CONNECTION) இணைப்பு மற்றும் பேரலல் (PARALLEL CONNECTION) பற்றி பார்க்கலாம்.
சீரியஸ் இணைப்பு
( ஒவ்வொரு பாட்டரி செல்லும் 1.5 V / 1.7 Amp )
படத்தில் 3 பாட்டரிகள் (1.5V,1.7Amp) சீர்யஸ் முறையில் இணைக்க பட்டுள்ளது.முதல் பாட்டரியின் பாசிடிவ் முனை இரண்டாவது பாட்டரியின் நெகடிவ் முனையிடனும், 2-வது பாட்டரியின் பாஸிடிவ் முனை 3-வது பாட்டரியின் நெகடிவ் முனையிடனும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது 1-வது பாட்டரியின் நெகடிவ் முனையும் 3-வது பாட்டரியின் பாஸிடிவ் முனையும் எதனுடனும் இணைக்கப்படாமல் உள்ளது இந்த இரு முனைகளின் வழியாக நமக்கு 4.5 வோல்ட் / 1.7 ஆம்பியர் கிடைக்கும்.
பாரலெல் (PARALLEL) இணைப்பு
மேலே குறிப்பிடப்பட்ட அதே பாட்டரிகள் பாரெலெல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று பாட்டரிகளின் பாஸிடிவ் முனைகள் ஒன்றாகவும் நெகடிவ் முனைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் வழியாக நமக்கு 1.5 V / 5.1 ஆம்பியர் மின்சாரம் கிடைக்கும்.
சீரியஸில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் (வோல்ட்) மட்டுமே கூடுதலாகும். ஆம்பியர் அதிகரிக்காது.
பேரலில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் (வோல்ட்) அதிகரிக்காது. ஆம்பியர் மட்டுமே அதிகரிக்கும்







சூரிய ஒளி மின்சாரம் - 2

டி.சி. கரண்ட் (DIRECT CURRENT) – ஏஸி கரண்ட் (ALTERNATIVE CURRENT)
டி.சி கரண்ட் என்பது பாட்டரி மற்றும் சோலார் செல், கம்யூடேட்டர் டைப் டைனமோ ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். டிசி மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அதிக அளவு இழப்பு ஏற்படும். எனவே டி.சி மின்சாரம் இப்பொழுது வீட்டு உபயோகம், தொழில்சாலைகளுக்கு உகந்தது அல்ல.
ஏ.சி மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது ஜெனெரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும். குறைந்த இழப்பில் இதை நெடுந்தொலைவிற்கு எடுத்து செல்ல முடியும். எனவே தான் இது இப்பொழுது வீட்டு உபயோகம், தொழில்சாலை ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
டி.சி மின்சாரம், ஏ.சி மின்சாரம் ஆகியவற்றிற்குரிய வேறுபாட்டை படம் விளக்குகிறது.
முதல் படத்தில், பாட்டரியின் பாஸிடிவ் முனையிலிருந்து எலெக்ட்ரான்கள் லோடு என கூறப்படும் பல்பு அல்லது டி.சி மின்சாரத்தில் இயங்கக்கூடிய சாதனத்திற்கு சென்று மறு முனைவழியாக பாட்டரியின் நெகடிவ் முனைக்கு செல்லுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே திசையில் எலெக்ட்ரான்கள் டி.சி மின்சாரத்தில் பயணிக்கும்.
இரண்டாவது படத்தை பாருங்கள். பாட்டரிக்கு பாசிடிவ் , நெகடிவ் என இரு முனைகள் இருப்பது போல ஏ.சி மின்சாரத்திற்கு பேஸ் (Phase), நியூட்ரல் (Neutral) என இரு முனைகள் உண்டு. இது சுருக்கமாக P, N என அழைக்கப்படும்.
இந்த படத்தில் ஏ.சி. கரண்ட்டின் எலெக்ட்ரான்கள் இரு திசையிலும் மாறி மாறி செல்வதை அம்பு குறியீடு காட்டுகிறது. அதாவது பேஸ் முனையிலிருந்து எலெக்ட்ரான்கள் லோடுக்கு சென்று மறு முனை வழியாக ஏசி மின்சாரத்தின் நியூட்ட்ரல் முனைக்கு செல்லும். அடுத்து நியூட்ரல் முனை வழியாக எலெக்ட்ரான்கள் லோடுக்கு சென்று பேஸ் முனையை அடையும். இவ்விதம் வினாடிக்கு 50 சுழச்சிகள் (CYCLES) நடைபெறும். நம் நாட்டில் உள்ள மின் இனைப்புகள் 220V.AC,50Cycle/sec ஆகும். இப்பொழுது உங்களுக்கு ஏசி, டி.சி மின்சாரத்தின் வேறுபாடு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
சோலார் சிஸ்டம் வடிவமைத்தல்.
சோலர்ர் மின்சாரத்தின் தேவை ஒவ்வொரு நபரை பொருத்தும் மாறுபடும். அவற்றை பார்ப்போம்.
1. இரவில் காய்கறி, பழம், போன்றவற்றை தள்ளுவண்டியில் வைத்து இரவில் வியாபாரம் செய்பவர்கள் பெட்ரோமாக்ஸ் லைட், அல்லது சிமினி விளக்குகளை உபயோகிக்கிறார்கள். மண்ணெண்ணைக்காக வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியை செலவு செய்கிறார்கள். இவர்களுக்கு சோலார் மின்சாரம் லாபகரமானது. பகலில் சோலார் பேனல் மூலம் பாட்டரியை சார்ஜ் செய்து, இரவில் உபயோகிக்க கூடிய வைகையில் சோலார் லாண்டர்ன் (Solar Lantern) எல்லா ஊர்களிலும் கிடைக்கின்றன. இதை எமெர்ஜென்சி விளக்காகவும் பயன்படுத்தலாம். மின்சாரமே இல்லாத பகுதியில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு மிகவும் பயன் படும்.
இது பலவடிவங்களில் கிடைக்கிறது. இவற்றை டாட்டா ( TATA BP) போன்ற பெரிய கம்பெனிகள் முதல் லோக்கல் டுபாக்கூர் கம்பெனிகள் வரை தயாரிக்கிறது. இதை அரசிடம் பதிவு செய்த சப்ப்ளையர்கள் /தயாரிப்பாளகளிடம் வாங்கினால் அரசு மானியம் உண்டு.
மின் இணைப்பு இல்லாத கிராமங்களிலிருக்கும் வீடுகளுக்கு இரண்டு அல்லது மூன்று லைட்டுகள் எரியும் வகையில் வீட்டின் மேல்பகுதியில் ஓடு அல்லது ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூறையிலும் சோலார் பேனலை அமைத்து CFL பல்புகளை எரிய வைத்து வெளிச்சத்துக்கான மின்தேவையை பூர்த்தி செய்யலாம்.
ஆக மொத்தத்தில் நம் தேவைக்கு ஏற்ப சிஸ்டத்தை அமைத்துக்கொள்ளலாம். இதற்கும் அரசு மானியம் உண்டு.
1 K Watt (1000 Watts) சோலார் சிஸ்டம்
ஒரு கிலோ வாட் (1000 வாட்) சோலார் சிஸ்டம் என்பது, சூரிய ஒளியிலிருந்து ஒரு மணி நேரத்தில் 1 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது ஆகும். இதை எப்படி கணக்கிடுவது என்பதை பார்க்கலாம்.
சோலார் பேனல்கள் பல அளவுகளில் 50 W -12V/24V , 75 W – 12V/24V, 80W – 12V/24V, 100W – 12V/24V, 150W – 12V/24V, 200W – 12V/24V என கிடைக்கிறது. அதாவது 50வாட் சோலார் பேனல்கள் 12வோல்ட் மின் அழுத்தம், 24 வோல்ட் மின் அழுத்தம் ஆகிய இரு மின் அழுத்த அளவுகளில் கிடைக்கிறது. இதைப்போலவே மற்ற வாட் பேனல்களும் கிடைக்கிறது.
எனவே 12வோல்ட் சிஸ்டம் அல்லது 24வோல்ட் சிஸ்டம் இவற்றில் எது நமக்கு தேவை என்பதை முதலில் முடிவு செய்யவேண்டும். 12வோல்ட் சிஸ்டம் என்றால்
100W-12V பேனல் = 10 (100W x 10 = 1000W) அல்லது
200W-12V பேனல் = 5 (200W x 5 =1000W)
தேவை. இவற்றை பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். உதாரணத்திற்கு 3 பேனல்கள் இணைக்கப்பட்டுள்ளதை விளக்கும் படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது பேனல்களிலிருந்து வெளியே வரும் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகளின் வழியாக 1 KW -12V (1000W-12V) டி.சி மின்சாரம் கிடைக்கும்.
நீங்கள் 24 வோல்ட் சிஸ்டம் என முடிவு செய்தாலும் மேலே குறிப்பிட்டபடியே 1000 வாட்டுக்கு தேவையான 24வோல்ட் மின் அழுத்தம் கொண்ட பேனல்களை இணைக்க வேண்டும்.
ஒருவேளை 24 வோல்ட் பேனல் கிடைக்கவில்லை என்றால், பத்து 12 வோல்ட் பேனல்களையே சீரியஸ் + பேரெலெல் என்ற கூட்டு இணைப்பின் மூலம் இணைக்க முடியும். இரண்டு 12 V பேனல்களை சீயஸ் முறையில் இணைத்தால் அது 24V ஆக செயல்படும். முதலில் இரண்டு இரண்டாக பேனல்களை சீரியஸ் முறையில் இணைக்க வேண்டும். இப்பொழுது 5 செட் பேனல்கள் கிடைக்கும். இவற்றை பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். இப்பொழுது இந்த பேனல்களின் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் வழியாக 1KW-24V மின்சாரம் கிடைக்கும். இந்த இணைப்பை விளக்குவதற்காக நான்கு 12V பேனல்கள் இம்முறையில் இணைக்கப்பட்டுள்ள படம் தரப்பட்டுள்ளது.
இப்பொழுது நீங்கள் விரும்பிய வகையில் 1KW -12V அல்லது 1KW-24V சோலார் பேனல்களை இணைத்து விட்டீர்கள். இவ்வாறு அமைக்கப்ப்டும் அமைப்பை ஆங்கிலத்தில் “ARRAY” என கூறுவோம்.
இவ்வாறு அமைக்கப்பட்ட சோலார் பேனல் அமைப்பின் மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். 100 W பேனல் என்றால் அது ஒரு மணி நேரத்தில் 100W மின்சாரத்தை தரும் என்று பொருள். எனவே நாம் அமைத்திருக்கும் ARRAY எனப்படும் சோலர் அமைப்பு ஒரு மணி நேரத்திற்கு 1KW அல்லது 1000W மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சூரிய ஒளி பிரகாசமாக இருப்பது எத்தனை மணி நேரம் என்பதை பார்க்கலாம். பொதுவாக காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை. 7 மணி நேரம் என வைத்துக்கொள்ளலாம். இதை சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் என கணக்கிட்டால் நாம் குறைந்த பட்சம் 5KW அல்லது 5000W (வாட்) மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
அதாவது 1KW சோலார் பேனல் சிஸ்டம் நமக்கு நாள் ஒன்றுக்கு 5KW அல்லது 5000 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்பு (array) நாள் ஒன்றுக்கு சுமார் 5000 வாட்ஸ் அல்லது 5 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என பார்த்தோம்.பூமியின் சுழ்ற்சி, சூரியனின் சுழற்சி இவற்றின் அடிப்படையில் பூமியில் ஒவ்வொரு பகுதி அல்லது ஊரிலும் சூரியனுடைய ஒளி கதிர்கள், வெவ்வேறு கோணத்தில் , வெவ்வேறு கால (duration) அளவில் இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒவ்வொரு மாதமும் விழும் சூரிய ஒளியின் மூலம் தினசரி உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை கணக்கிட முடியும். இது நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் மாறுபடும். உதாரணத்திற்கு திருச்சியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5.13KWh வீதம் ஒரு வருடத்தில் 1872.45 KWh / யூனிட் மின்சாரத்தை ஒரு சதுர மீட்டர் பரப்பில் பெற முடியும். 1KWh என்பது 1000Wh அல்லது 1 யூனிட் ஆகும்.
ஒரு நிறுவனம் தயாரிக்கும் 100W சோலார் பேனலின் அளவு (size) 56.7 இஞ்ச் நீளம், 25.1 இஞ்ச் அகலம் என கூறப்பட்டுள்ளது. இந்த அளவு கிட்டத்தட்ட எல்லா கம்பெனிகளின் பேனல்களின் அளவும் ஒரே மாதிரியாகத்தான். இருக்கும். அதிக அளவில் வித்தியாசமிருக்காது. இப்பொழுது நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்புக்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்பதை பார்க்கலாம்.
(56.7″x 2) = 113.4″ = 9′ 9″ =10 அடி
25.1″ x 5) = 125.5″ = 10′ 6″ = 10 1/2 அடி
அதாவது 10 1/2 அடி அகலமும் 10 அடி நீளமும் தேவை. இதை சரியான திசையில் , சரியான கோணத்தில் வருடம் முழுவதும் அதிக பட்ச சூரிய ஒளி படும் வகையில் பொருத்த வேண்டும். கீழே 1 MW சோலார் பேனல் .
இனி சோலார் பேனலின் விபர குறிப்பை பார்க்கலாம்.
Spec:
* 150x150mm multi-crystalline solar cells
* Typical Power: 100W
* Minimum Power: 95W
* Voltage at Typical Power: 17V
* Current at Typical Power: 5.9A
* Open Circuit Voltage: 22V
* Short Circuit Current: 6.69A
* Dimension: 56.7″ L x 25.1″W x 1.38″ D
* Weight: 24lbs
1. 150x150mm multi-crystalline solar cells என்பது 150 mm X 150 mm அளவுள்ள கிரிஸ்டலைன் செல்களால் உருவாக்கப்பட்ட சோலார் பேனல் என்பதை குறிக்கிறது.
2. Typical Power: 100W அதாவது சூரிய ஒளி அதிகமாக அதன் மீது விழும் பொழுது பேனல் தரும் மின் சக்தி 100 W.ஆகும்.
3. Minimum Power: 95W குறைந்த பட்ச சக்தி 95W
4. Voltage at Typical Power: 17V அதிக பட்ச மின் அழுத்தம் 17V
5. Current at Typical Power: 5.9A அதிக பட்ச மின் அழுத்தத்தில் தரும் கரண்ட் 5.9 ஆம்பியராகும்.
6. Open Circuit Voltage:22V பாட்டரியுடன் (லோடு) இணைக்காமலிருக்கும் பொழுது உள்ள மின் அழுத்தம் 22V.
7. Short Circuit Current: 6.69A ஆரம்ப நிலையில் இருக்கும் நமக்கு இந்த விபரம் தேவை இல்லை.
8. Dimension: 56.7″L x 25.1″W x 1.38″D 56.7 அங்குல நீளம், 25.1 அகலம், 1.38 அங்குல பருமன் உடையது.
9. Weight: 24 lbs இதன் எடை 24 பவுண்ட் (10.9 Kg)





சூரிய ஒளி மின்சாரம் - ஒரு பார்வை

சோலார் பேனல் விலை குறைந்து விட்டது
சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் குறித்த ஆலோசனை மற்றும் தகவல்களுக்கு:
தற்போது அதிரடி சலுகையாக ஒரு கிலோ வாட் ( 1000 W) உற்பத்தி செய்ய கூடிய தரமான சோலார் பேனல் 67000 ரூபாய் மட்டுமே! இதன் மூலம் ஒரு வீட்டுக்கு தேவையான ஏ‌சி, மிக்சி, கிரைண்டர், டி‌வி,ஃபிரிஜ்,வாஷிங் மெஷின்,ஃபேன்,அயர்ன் பாக்ஸ், 1 HP மோட்டார் இன்னும் இது போன்ற அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் இயங்கும் வகையில், நம் தமிழக அரசு 50000 ரூபாய் மானியம் உடனுக்குடன் கொடுத்து உதவுகின்றது
1KW சோலார் பேனல் - 1,17,000 ரூபாய்
மானியம் - 50,000 ரூபாய்
செலுத்தும் தொகை - 67,000 ரூபாய் மட்டுமே
நீங்கள் ஒரு மாதம் 800 ரூபாய் வீதம் மின்சார கட்டணம் செலுத்துபவராக இருந்தால், ஏழு மாதத்தில் நீங்கள் கட்டிய தொகை மின்சார கட்டணத்தில் மீதம் ஆகும்!
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் .....
இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும்.
இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும், ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாடு நாடு முழுவதும் உடனே செயல்படுத்த வேண்டியது அவசியம்மும் அவசரமும் ஆகும். மாறாக தாமதித்தால் மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு அனைத்து துரைகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்தடை பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட், இரண்டு கிலோ வாட், ஐந்து கிலோ வாட், பத்து கிலோ வாட் சோலார் பவர் பேக்' திட்டம் தற்போது வீட்டு உபயோகத்திறகு கைகொடுக்கிறது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் தற்போது "இன்வெர்ட்டர்கள்' பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் ஐந்து மணி நேரம் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த ஒரு கிலோ வாட்க்கு Rs - 67500/-* ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு ஐந்து யூனிட் ( 5000 W )மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின்சார பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த 80-100 சதுர அடி இடம் தேவை. சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவை ஒப்பிடுகையில், சோலார் அமைப்பை ஏற்படுத்திய ஓரு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பை பராமரிப்பதும் எளிது. சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதும்.
முற்றிலும் மின் வாரியத்தின் தேவையிலிருந்து விலகலாம். மின்தட்டுப்பாடு என்ற பிரச்னையே ஏற்படாது. மின்சேமிப்பு. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டுமணி நேரம் சூரியசக்தியை ஈர்க்க முடியும். ஒருமுறை போட்டோ செல் பேனல்களை கழுவி துடைத்தால், சூரிய ஒளி ஈர்க்கும் திறன் குறையாது. இயக்க யாரும் தேவையில்லை.
தமிழ்நாட்டை சூரிய ஒளி மின்சார மாநிலம் ஆக்குவோம்! மின் மிகை மாநிலம் ஆக மாற்றுவோம்!




Dec 26, 2017

முயல் ஆமை கதை

# லேட்டஸ்ட்_வெர்ஷன் .
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம்
வைக்கின்றன. முயல் வேகமாக
ஓடினாலும், வழியில் தூங்கிவிட,
ஆமை மெதுவாகச் சென்றாலும்
தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று
பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
# நீதி : தலைக்கனம் கூடாது.
வேகத்தைவிட, நிதானம் முக்கியம்
ஜெயிக்க!
வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை
அடைந்த முயல், ‘நாம ஓவர்
கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான்
தோத்துட்டோம்’ என்பதைப்
புரிந்துகொண்டு, மீண்டும்
ஆமையைப் பந்தயத்திற்கு
அழைக்கிறது. ஆமையும்
ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது.
முயல், இடையில் எங்கேயும்
தூங்காமல் ஓடிச் சென்று,
ஜெயிக்கிறது.
# நீதி2 : நிதானம் முக்கியம் தான்,
ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று
நினைத்தால்... அதுதான் இல்லை!
காலங்காலமாக ஜெயித்து வந்த
ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக்
கொள்ள முடியவில்லை. இம்முறை
அது முயலை பந்தயத்துக்கு
அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்!
பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை
என்று ஆமை சொல்ல, முயலும் அந்த
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...
முயல் இடையில் எங்கேயும்
இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச்
சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன்
பிரேக் போட்டாற்போல நிற்கிறது.
பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை
அடைய முடியும். ஆற அமர வந்து
சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி
கோட்டைத் தொட்டு பந்தயத்தில்
ஜெயிக்கிறது!
# நீதி3 : நாம் போட்டியிடும் போது
எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை
நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக்
கொள்ள வேண்டும்.
இன்னும் கதை முடியவில்லை
மக்களே.!
ஒரு வழியாக ஆமையும் முயலும்
நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி,
ஒரு பந்தயம் வைக்க முடிவு
செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த
அதே பாதையில்தான் இம்முறையும்
பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை
மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை
வரை. அதற்குப் பின்..?
ஆமை ஆற்றில் நீந்துகிறது.
அப்படியென்றால் முயல்? ஆமையின்
முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள
தூரத்தை, ஆமையை தன் முதுகில்
வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது.
இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக்
கோட்டை அடைகிறார்கள்; இருவரும்
வெல்கிறார்கள்!
# நீதி4 : டீம் வொர்க் வின்ஸ்!
# டீம்_வொர்க்
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில்
1+1 = 3. அதாவது, இருவரின் பலம்
சேரும்போது, அது ஒரு புது
பலத்தை உருவாக்கும். அதனால்தான்
நிறுவனங்களில் பணியாட்களைத்
தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம்
வொர்க் திறனை முக்கியமாகச்
சோதிக்கிறார்கள்.
அலுவலக வேலைகளுக்கு மட்டும்
இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங்
இருந்தால்தான், ஒரு குடும்பம்
சிறப்பாகச் செயல்படும். எல்லோரின்
பங்களிப்பும் தேவை குடும்பத்தில்.
எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும்
இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில்
வரும் எல்லா கருத்துக்களுமே
ஜெயிக்க முக்கியமானவை. நிதானம்
முக்கியம், வேகம் முக்கியம்,
புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க
வேண்டியது முக்கியம், இந்த கதை
இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ
வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில்,
இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம்.
அதை கற்றுக் கொடுப்பதும் டீம்
வொர்க்கே!
வாழ்க்கையில்
முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.
# முயலாமை மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் # அனுபவம் .
முயலாமல் தோற்றால் # அவமானம்.
வெற்றி நிலையல்ல,
தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி,
தோல்வி..!!