Dec 29, 2017

சூரிய ஒளி மின்சாரம் - 4

கிரிட்-டை சோலார் சிஸ்டம் (Grid-Tie Solar Power System)
கிரிட்-டை என்றால் மின்வாரிய இணைப்புடன் இணைக்கப்பட்டது என பொருள். அதாவது நாம் சோலார் சிஸ்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நம் தேவைக்கு அதிகமாக இருந்தால், அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்கவும், குறைவாக இருந்தால் அதை மின்வாரியத்திடமிருந்து பெறும் வகையில் அமைக்கப்படுவதே கிரிட்-டை சிஸ்டம் ஆகும். உதாரணத்திற்கு நாம் நாள் ஒன்றுக்கு 15 யூனிட் (15,000W) மின்சாரத்தை சோலார் மூலம் உற்பத்தி செய்வதாக வைத்துக்கொள்வோம் சராசரியாக நமக்கு 8-10 யூனிட்டுகள்தான் உபயோகத்திற்கு தேவை. தினந்தோறும் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரத்தை பாட்டரி பேங்க்-ன் திறன் எவ்வளவோ அந்த அளவுக்கு தான் சேமிக்க முடியும். அதன் பின் தினமும் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரம் வீணாகிக்கொண்டே இருக்கும். சில நாட்களில் நமக்கு உற்பத்திக்கு மேல் அதிகமாக மின்சாரம் தேவைப்படும். எனவே தேவைப்படும் பொழுது பற்றாக்குறை மின்சாரத்தை மின்வாரியத்திடமிருந்து பெறவும், தேவை இல்லாத நேரத்தில் அதிகப்படியான உற்பத்தி மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்றுவிடவும் இந்த அமைப்பால் முடியும். இதற்கு மின்வாரியத்துடன் நெட்-மீட்டரிங் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த முறை அமுலில் உள்ளது.
இந்த சிஸ்டத்தில் மீட்டர் பொறுத்தும் முறையில் ஒவ்வொரு நாடும் வெவ்வெறு முறைகளை பயன்படுத்துகிறது. காட்டப்பட்ட படம் பாட்டரி பேங்க் இல்லாத சிஸ்டத்திற்கு உரியது. மின்வாரியத்திடமிருந்து அவர்கள் பெறும் மின்சாரத்திற்கு வீடுகளுக்கான ரேட்டும், அவர்கள் மின் வாரியத்திற்கு விற்கும் உபரி மின்சாரத்திற்கு அதிகப்படியான ரேட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தேவைக்கு மேல் திறன் கொண்ட சிஸ்டத்தை அமைத்து லாபம் பெறுகிறார்கள். அரசுக்கும் மின் பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும்

பாட்டரி பேங்குடன் கூடிய கிரிட்-டை சோலார் சிஸ்டம்
சில மாநிலங்களில், நம் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை கிரிட்-டை இன்வெர்டர் மூலமாக மின்வாரியத்திற்கு திருப்பி கொடுக்கும் திட்டம் அமுலில் உள்ளது. அதாவது நம்மிடமிருந்து மின்வாரிய சப்ளைக்கு மின்சாரத்தை நம் இன்வெர்டர் அனுப்பும் பொழுது மின் வாரிய மீட்டர் எதிர் திசையில் சுற்றி, மீட்டர் ரீடிங் மின் அளவுக்கு ஏற்ப குறையும். இரு திசையிலும் (Clockwise&Anti-clockwise)சுற்றக்கூடிய மீட்டரை பொருத்தி விடுகிறார்கள். இதனால் மின்வாரிய சப்ளையிலிருந்து உபயோகித்த மின்சாரத்திலிருந்து, நாம் அவர்களுக்கு கொடுத்த மின்சாரத்தை கழித்து மீதி உள்ள மின்சாரத்தின் அளவையே அது காட்டும். நாம் அதிகமாக கொடுத்திருந்தால் அதற்கான கட்டணத்தை நமக்கு தரும். இந்த தகவலை என்னால் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.ஆஃப்-கிரிட்(Standalone) சிஸ்டத்திற்கும், கிரிட்-டை சிஸ்டத்திற்கும், இன்வெர்ட்டர் தவிர வேறு எந்த மாற்றமும் கிடையாது. கிரீட்-டை சிஸ்டம் அமைத்தால், இன்வெர்ட்டர் எப்பொழுதும் ஆன்(ON) நிலையிலேயே இருக்க வேண்டும். காரணம், மின்வாரிய இணைப்பு இன்வெர்ட்டர் மூலமாகத்தான் வீட்டு இணைப்புக்கு வரும். மேலும் நாம் மின்சாரத்தை உபயோகிக்காமலிருந்தாலோ அல்லது குறைவாக மின்சாரத்தை உபயோகித்துக்கொண்டிருந்தாலோ, சோலார் மின்சாரம் கிரிட் எனப்படும் மின்வாரிய சப்ளைக்கு போய்கொண்டிருக்கும். அதனால் நமக்கு பாட்டரியில் பேக்-அப் மின்சாரம் இருக்காது. எனவே பாட்டரிக்கும் இன்வெர்ட்டருக்கும் இடையிலான இணைப்பில் ஆன் -ஆஃப் (ON-OFF) சுவிட்ச் இணைக்க வேண்டும்.
மத்திய அரசு “Ministry of Renewable Energy – (MNRE)” அமைச்சகத்தின் மூலம் சூரிய ஒளியை சக்திக்கு பயன்படுத்த பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி வருகிறது.நேரடியாக இத்திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் National Bank for Agricultural and Rural Development – NABARD”மூலமாகவும், மாநில அரசுகளின் மின்சக்தி மேம்பாட்டு ஏஜன்ஸிகளின் மூலமாகவும் செயல்படுத்துகிறது. நிதி உதவி தேவைப்படுபவர்கள் நபார்டு வங்கியை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மானிய தொகை நீக்கி மீதியுள்ள தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் கடனாக வழங்கப்படும். MNRE-யால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்தே வாங்கவேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளையும் கடன் வழங்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
வங்கி கடன் தேவை இல்லை என்றால் நாம் நேரடியாக அங்கீகாரம் பெற்ற சப்ளையர்கள் அல்லது உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்களே மானிய தொகைக்கு ஏற்பாடு செய்வார்கள். வாங்கப்படும் சிஸ்டத்திற்கு MNRE பொறுப்புகிடையாது. எனவே அவர்களுடைய பட்டியலில் உள்ள நல்ல டீலரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. உத்திரவாதம், சர்வீஸ் ஆகியவற்றை செய்து தருபவராக இருக்கவேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சோலார் சிஸ்டம் மிக குறைந்த வாட்ஸ் கொண்டது என்பதால், கிராமப்பகுதி மக்களுக்கே பயன்படும் என நினைக்கிறேன்



2 comments:

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you