Dec 29, 2017

விவேகானந்தர் பாறையின் மறு பக்கம்......

கன்னியாகுமாரி, பாரதத்தாயின் பொற்பாதம், இயற்கைத்தாயின் அருட்கொடை, கடற்தாயின் உற்சாகம் என்று பலவிதமான பெருமைகளுடையது. கன்னியாகுமாரி என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது விவேகானந்தரின் பாறையில் அமைந்துள்ள அவரின் நினைவு மண்டபம் தான். அய்யன் வள்ளுவன் எழுத்தாணியோடு கம்பீரமாக நின்றிருந்தாலும், ஏனோ முதலில் அனைவரின் நினைவில் முதலில் வருவது அந்த நினைவு மண்டபம் தான். இது 1962ல் ஆரம்பித்து 1972ல் கட்டிமுடிக்கப்பட்டது. அவ்வளவு அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும், மண்டபத்திற்கு பின்னால் ஒரு பெரிய கதையுண்டு என்பது இந்த காலத்திற்கு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிகப்பெரிய கலவரத்தை முன்னோக்கிச் சென்று, அது போல் எதுவும் நடக்காமல் முடிந்த இந்த சம்பவத்தினை, வரலாறு அவ்வளவு சீக்கிரமாக மறந்துபோனது அல்லது மறைத்துவிட்டு போனது மிகவும் ஆச்சிரியம்.
கன்னியாகுமாரி என்று, எதனால் பெயர் வந்தது என்று அந்த மாவட்டத்துக்காரர்களுக்கே தெரிந்திருக்காது. விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்படும் இந்த பாறைக்கு, ஸ்ரீ பாதப் பாறை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மிகச்சரியாகச் சொன்னால், ஸ்ரீ பாதப் பாறைதான் அதன் முதற்பெயர், தேவி கன்னியாகுமாரி என்பவர் சிவபெருமானை மணப்பதற்காக அங்கு தவமிருந்ததாக ஐதீகம். அங்கு பாறை காணப்படும் பாத சுவடு கூட இவருடையது என்று இன்னும் நம்பப்படுகின்றது.
1963ம் வருடம் இந்திய அரசு விவேகானந்தரின் நூற்றாண்டினை ஒரு நினைவுச்சின்னம் எழுப்பி கொண்டாட முடிவு செய்தது. விவேகானந்தர், இந்திய இளைஞர்களின் விடிவெள்ளி, அமைதியின் திருவுருவம், இவரால் உந்தப்பட்டவர்களும், உத்வேகம் அடைந்தவர்கள் நம்மில் அதிகம். காலங்கள் பல கடந்தபின்பும் அவரது, வார்த்தைகள் இன்னும் பலரின் கணினியின் தொடக்கப்பக்கத்தில் புன்னகைத்துக்கொண்டிருக்கும். ஐ.நாவில் அவர் பேசிய முதல் வாக்கியத்தினை, இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் சொல்லிச் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வோம். இந்தியாவின் தேசிய அடையாளங்களில் இவரும் ஒருவர், என்பதை விட இவர் முக்கியமானவர் என்பதுதான் சரி.
விவேகானந்தர், கன்னியாகுமாரிக்கு வந்திருந்தார், அங்கு கடலுக்கு உள்ளே உள்ள பாறைக்கு நீந்தி சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். இது போதாதா, அவருக்கு நினை மண்டபம் அங்கு கட்ட. நினைவு மண்டம் மட்டுமா, மண்டபத்திற்கு சென்று வர, ஒரு பாலம் போடவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. அதற்கான வேலைக்கு ஒரு குழு வேலாயுதம் பிள்ளை என்பவரின் தலைமையில் உருவானது.
விவேகானந்தரின் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு யார் எதிர்க்ப் போகின்றார்கள், யாருக்கு கருத்து வேறுபாரு இருக்கமுடியும்? என்று அதிநம்பிக்கையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு சுறு சுறுப்படைந்தது. விஷயம் வேகமாகப் பறவியது, குமரி முழுவதும்.
தேவி கன்னியாகுமாரி என்பது ஐதீகம், விவேகானந்தரின் மூன்று நாள் தியானம் என்பது ஒரு நிகழ்வு, ஆனால் அதையும் மீறி சிலரின் வாழ்வாதாரமாகவும் அந்த பாறை இருந்தது, அந்நாளில் அது பலர் மறந்தது. குமரி மீனவர்களின் வாழ்வாக இருந்தது அது. மீன்பிடிப்பின் போது ஏற்படும் களைப்பு போக்கும் இடமாகவும், வலையினை விரித்து காயவைக்கும் இடமாகவும், மீன் வியாபார பரிமாற்று இடமாகவும் இருந்தது. அவர்களின் போதாத காலம், அவர்கள் அநேகம் பேர் கிறிஸ்தவர்களாக இருந்தது தான். ஒவ்வொரு ஆண்டும், சிலுவை வைத்து ‘குரூஸ்’ என்னும் திருவிழாவும் இந்த பாறையில் வைத்து நடத்தினார்கள். ஆகையால் எதிர்ப்பு, மீனவர்களால் உருவானது.
காலம் மீனவர்களை, “கிறிஸ்தவர்களாகவும்”, விவேகானந்தரை “இந்து சன்னியாசியாகவும்” மட்டுமே பார்க்கவைத்ததுதான் கொடுமை.
நானூறு வருடங்களுக்கு முன்பு புனித சேவியர் இங்கு வந்தபோது, இந்த பாறையில் தான் இருந்து ஜெபம் செய்தார், ஆகவே இது கிறிஸ்தவர்களுக்குத்தான் சொந்தம் என்ற கதை அங்குள்ள ஒரு பாதிரியாரால் கொம்பு சீவி விடப்பட்டு. கிறிஸ்தவர்கள் தான் இந்த பாறையின் உரிமையாளர்கள் என்று கூறிக்கொண்டார்கள். ஹிந்துக்களுக்கு புதிதாக கதை ஒன்றை உருவாக்கும் வேலை தேவைப்படவில்லை. இருக்கவே இருக்கு, தேவி கன்னியாகுமாரி, விவேகானந்தர்.
மீனவர்கள் ஒரு காரியம் செய்தார்கள், இரவோடு இரவாக ஒரு பெரிய சிலுவையினை கொண்டு சென்று பாறையில் வைத்துவிட்டார்கள் (பாபர் மஸ்ஜித்தில், சில வீணர்கள் செய்த அதே பார்முலா). கரையில் இருந்து பார்த்தாலே தெரிகின்ற அளவிலான ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய சிலுவை அது.
சூடு ஏறியது அங்குள்ள மக்களுக்கு, கண்டன ஆர்பாட்டங்கள், ஆட்சியாளருக்கு மனு, அரசுத்தலைவர்களுக்கு தந்தி, ஸ்ரீபாதப் பாறையில் எப்படி சிலுவையினை வைக்கலாம்? என கொதித்து நின்றது எதிர்த்தரப்பு.
பாறை எங்களுக்குத்தான் சொந்தம் என்று இருதரப்பும் உரிமைகொள்ள, தமிழக அரசு தலையிட்டது. பாறை யாருக்குச் சொந்தம் என்று ஒரு விசாரனைக்கு உத்தரவிட்டது. விசாரனையின் முடிவில், பாறைக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. எனவே பாறையில் உள்ள சிலுவை வருவாய்த்துறையினரால் அகற்றப்பட்டது.
இது எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல ஆனது, 400 வருடங்கள் முன்பு இது போன்ற பெரிய சிலுவை இருந்தது, பின்பு சில சமுக விரோதிகளால் அது அழிக்கப்பட்டுவிட்டது, அதனால் இப்போதுள்ள சிலுவையினை தமிழக அரசு காப்பாற்றுவதை விடுத்து அழிக்கின்றது, அதற்கு பரிகாரமாக, அதே போல் ஒரு சிலையை மட்டுமல்லாமல் புனித சேவியருக்கு ஒரு நினைவுச் சின்னமும் உருவாக்கவேண்டும் என்று புது திரைக்கதையினை உருவாக்கி, கோஷங்களை எழுப்பினர் அங்குள்ள கிறிஸ்தவ சமுகத்தினர். இந்தமுறை குமரி மீனவர்களுக்கு ஆதரவாக நம்ம கேரள பங்காளிகள் இணைந்துகொண்டார்கள்.
இரண்டில் எது செய்தாலும் மத கலவரத்துக்கு தூபம் போடும் என்றெண்ணிய, அன்றய முதல்வர் பக்தவத்சலம், விவேகானந்தரும் வேண்டாம், சேவியரும் வேண்டாம், பாறை, பாறையாகவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவருக்கு, இந்த பாறை விவேகானந்தர் தவம் இருந்த இடம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக வேண்டும் என்றால் ஒரு போர்டு வைத்துவிடலாம் "இது விவேகானந்தர் தியானம் செய்த பாறை" என்று நிறுத்திக்கொண்டார்.
முதல்வர் பக்தவத்சலம்
ஏக்நாத் ரானடே
இந்நிலையில் இந்த பிரட்சனை ஹிந்துக்களால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போதய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர், ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்பி பிரச்சனையை தீர்க்குமாரு கட்டளையிட்டார். ஹிந்துக்கள் மட்ட்டுமல்லாது கிரிஸ்தவர்களும், நடுநிலையாளர்களும் இவர் என்ன செய்யப்போகின்றார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தன. சிலர் ஆர்.எஸ்.எஸுக்கு விஷயம் சென்றதில் இருந்து, எங்கு என்ன நடக்குமோ? என்ற அச்சவுணர்விலும் சில மக்கள் இருந்தனர்.
ரானடே, இவருக்கு ‘தமிழ்’ என்று சொல்லுவதற்கே, இயலாதாக இருந்தது, மேலும் தமிழக அரசியல், அரசியல் தலைவர்கள் யார் யார்? எப்படி? என்பதெல்லாம் அறிந்திராத ஒருவரால் எப்படி இதனை தீர்த்துவிடமுடியும் என்று தலை சொறிந்து நின்றது ஒரு கூட்டம். இந்நிலையில் அவர் ஆரயத்தொடங்கியது, பிரச்சனைகளையும், அதன் வேர்களையும், மற்றும் எதிர்ப்பாளர்கள் யார்? என்பதை மட்டுமே.
அப்போது விவேகானந்தர் மண்டபத்திற்கு தீவிரமாக எதிர்த்து நின்றது இரண்டு பேர். ஒருவர் தமிழக முதல்வர் பக்தவத்சலம், மற்றொருவர் ஹீமாயூன் கபீர், அன்றைய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர். கபீர் ஒரு கல்கத்தாகாரர். ரானடே, நேராக கல்கத்தா போய் இறங்கியதும் முதல்வேலை, அனைத்து பத்திரிக்கைகளையும் கூட்டி, பிரச்சனை இது தான், வங்கத்தின் தங்கம், விவேகானந்தருக்கு உங்கள் மாநிலத்தின் அமைச்சர் கபீர் முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்று ஒரே போடுபோட்டுவிட்டு, நடையை கட்டினார். இது போதாதா பத்திரிக்கைகளுக்கு, ரானடே தமிழகத்திற்கு வருவதற்கு முன்பு, கபீர், தன் ஆட்சேபனையை விலக்கிக்கொண்டார்.
ஆனால் இந்த மாதிரியான பாச்சாவெல்லாம் தமிழகத்திடம் பலிக்கவில்லை. அமைதியை நிலைனாட்டும் பொறுப்பு, சட்ட ஒழுங்கு எல்லாவற்றையும், தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மிகவும் யோசனையிலேயே இருந்தார். பின்பு விவேகானந்தரின் நினைவு மண்டப குழு விஸ்தரிக்கப்பட்டு, அதில் நடுநிலையாளர்கள் பலரை சேர்த்துக்கொண்டார்கள். அதில் முக்கியமானவர் தி.மு.க தலைவர் அண்ணாதுரை. மற்றும் சில கம்யூனிஸ்ட் தலைவர்களும். சன்னியாசிகள் கால் போன இடம், தூங்கின இடம், உட்கார்ந்த இடம் என்று மண்டபம் கட்டினால், இந்தியாவில் வீடுகளை விட, மண்டபங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் என்று கூறி சில பெரியாரிஸ்டுகள் குழுவில் இடம்பெறாமல் விலகிக்கொண்டனர்.
பின்பு நடுனிலையாளர்களின் துணையுடன், கிரிஸ்தவ மக்களை சமாதானம் செய்தும், சரி செய்தும், நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நன்கொடையில் கட்டப்பட்ட மண்டபம் தான் இன்று பாறையில், பவ்வியமாக பவனிவரும் மண்டபம். இது அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரியால் திறந்து வைக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸின் திறமையால் கட்டப்பட்டது என்று கரசேவகர்களும், அண்ணாத்துறையின் நடுநிலையான முயற்சியால் கட்டப்பட்டது என்று திராவிட இயக்கத்தினரும், கம்யூனிஸ்டுகள் தான் காரணம் என்று சிலரும், கிரிஸ்தவர்களின் விட்டுக்கொடுக்கும் தன்மையால் தான் இது நடந்தது என்று ஆளுக்கொரு காரணத்தினை சொன்னாலும், விவேகானந்தர் என்ற ஒரு நல்ல ஆன்மாவிற்காக மட்டுமே இது சாத்தியமானது என்பது தான் உண்மை.



3 comments:

  1. Get up to $1000 FREE for 10 Free Spins on Immortal Romance
    If you love the 토토 사이트 코드 game, get the Immortal Romance 도박장 구인 online 헬로우 블랙 잭 now! Immortal Romance 사설 토토 사이트 Online. Play 포커 with real money or free spins, no registration required,

    ReplyDelete

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you