Jan 22, 2022

பாதாள ஆற்றின் பறக்கும் ஆறு

 பாதாள ஆற்றின் பறக்கும் ஆறு 


 அமேசான் ஆறு தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறு. இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. இதன் நீளம் 6400 கி.மீ. உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறு இது. அமேசான் ஆறு, உலகில் பெரியதாக இருந்தாலும், நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவுதான். இந்த ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன. 


 பிரேசில் அமேசான் ஆற்றுக்கு அடியில் அமேசான் ஆற்றைப்போலவே பாதாள பூமியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பிரமாண்டமான ஆறு ஓடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைக் கண்டுபிடித்தவர் ஓர் இந்திய ஆராய்ச்சியாளர்தான். வாலியா ஹம்சா என்ற இந்திய ஆராய்ச்சியாளரை கொண்ட பிரேசில் இயற்கை ஆராய்ச்சி மற்றும் தேசிய கண்காணிப்பு குழு மேற் கொண்ட ஆய்வில் இந்த பாதாள ஆறு ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 1970ம் ஆண்டு பிரேசில் பெட்ரோப்ராஸ் எண்ணை நிறுவனம் இங்கு 241 எண்ணை கிணறுகள் தோண்டியது. அந்தக் கிணறுகள் அப்போதே செயல்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்டன. இந்தக் கிணறுகள் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு குறித்து கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அமேசான் ஆற்றுக்கு அடியில் இன்னொரு ஆறு ஓடுவது தெரிந்து ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து கருத்து: ‘ஆய்வின் நோக்கம் வேறாக இருந்தாலும், எதிர்பாராத விதமாக கிடைத்த அரிய தகவலின் அடிப்படையில் ஆய்வின் போக்கு மாறியது. அப்போது, அமேசான் ஆற்றுக்கு அடியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பிரமாண்ட ஆறு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நீளம் 6 ஆயிரம் கிலோ மீட்டர். அதாவது பூமியின் மேல் உள்ள அமேசான் ஆறும் இதன் அளவும் ஒன்றாக உள்ளது. புதிய ஆறுக்கு ‘ஹம்சா’ என்று இந்திய ஆராய்ச்சியாளரின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. எண்ணைநிறுவனம் பெட்ரோப்ராஸ் தந்த வெப்பம் குறித்த தகவல்கள் அடிப்படையில் அமேசான் பகுதியில் ஆய்வு நடத்திய போது, நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் ஆய்வு தீவிரப் படுத்தப்பட்டது. இதில் ஹம்சா ஆறு குறித்து தெரிய வந்தது. இதன் நீரோட்டம் நிமிடத்துக்கு 3ஆயிரம் கன அடியாக உள்ளது. அக்ரி பகுதியில் இருந்து உற்பத்தியாகி சோலிமோயஸ், அமேசோனா, மராஜோ தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை கடந்து அமேசான் ஆற்றுக்கு அடியில் ஆறு ஓடுவதாக கருதப்படுகிறது. இதன் நீர் மிகக் குறைந்த உப்புத்தன்மை கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த தொடர்ந்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது.’ பறக்கும் ஆறு * தென் அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியை வளப்படுத்திக் கொண்டிருக்கும் அமேசான் ஆறு பல அதிசயங்களைக் கொண்டது. உலகிலேயே இரண்டாவது நீளமான ஆறாக இருப்பதும், உலகின் மிகப் பெரிய வடிகாலாக அறியப்படுவதும் அமேசான்தான். உலகின் அனைத்து ஆறுகளில் ஓடும் நீரின் மொத்த அளவில், ஐந்து ஒரு பங்கு நீர் அமேசான் ஆற்றில் ஓடுகிறது. பல்லாயிரம் உயிரினங்கள், மர வகைகள் என உலகின் உயிர்சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி அமேசான். இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் ஆற்றில் அதிகம் அறியப்படாத ஒரு அம்சம் உள்ளது. அதுதான் பறக்கும் ஆறு. 


கண்ணுக்குத் தெரியாத இந்த ஆறு அமேசான் காட்டுப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் நீராவியால் உருவாகியுள்ளது, இந்த ஆற்றின் சிறப்பம்சம். தரையில் ஓடும் சாதாரண ஆற்றில் உள்ள நீரோட்டத்தைப் போல, இந்தப் பறக்கும் ஆற்றில் நீராவியோட்டம் இருக்கிறது. அமேசான் ஆற்று நீரை உறிஞ்சும் மரங்கள், அதை நீராவியாக வெளியேற்றுவதால் இப்படியொரு ஆறு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மரங்கள் ஒரு நாளில் மட்டும் வெளியேற்றும் நீராவியின் மொத்த எடை பல ஆயிரம் கோடி டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, வெனிசுலா, கயானா, சூரினாம் என பல நாடுகளிலும் பரவியிருக்கிறது இந்தப் பறக்கும் மாய ஆறு. தென் அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத் தொடர், இந்த பறக்கும் ஆற்றுக்கு இயற்கையே வகுத்துத் தந்த கரையாக உள்ளது. இதனால், பிரேசில் மட்டுமல்லாமல் தென் அமெரிக்காவின் பல நாடுகளிலும் பெருமளவு மழைப் பொழிவுக்கு அமேசானின் பறக்கும் ஆறே காரணமாக இருக்கிறது. அமேசான் என்ற உலகின் மிகப் பெரிய ஆற்றின் மர்மங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் அமேசானின் பாதாள ஆறும், பறக்கும் ஆறும் உலகை திரும்பி பார்க்க வைக்கும் விநோதம் என்றால் மிகையில்லை!

4 comments:

  1. அருமையா சொன்னாங்க. ரொம்ப அருமை அருமை.always சப்போர்ட் யு சகோ

    ReplyDelete
  2. Thanks for sharing these unknown information... It's a great work..

    ReplyDelete

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you