Jan 20, 2022

ஜொலிக்கும் தங்க நிற நகரம்

 ஜொலிக்கும் நகரம்




 ஒரு நகரமே  தங்க நிறத்தில் ஜொலித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்?


அப்படி ஒரு நகரம் இருக்குமா? உண்மையில் அப்படி ஒரு நகரம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. மேற்கு ஆசியாவில் உள்ள ஜோர்டானில் இருந்திருக்கிறது. சவுதி அரேபியாவுக்கு அருகில் அமைந்துள்ள சிறிய நாடுதான் ஜோர்டான். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டு வரை இது புதையல் நகரம். இந்த தங்க நகரம் பற்றி உலகத்துக்கு தெரியாது. இந்த அழகான, அற்புதமான, கலைபொக்கிஷமான மலை நகரத்தை, 1812ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து, தான் கண்டு பெற்ற இன்பத்தை உலகம் கண்டு இன்புற வெளி உலகுக்கு அடையாளம் காட்டினார். பின்னர் 1985ம் ஆண்டு இது யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ‘இறப்பதற்கு முன் உலகில் அவசியம் பார்க்க வேண்டிய 28 இடங்கள்’ என்கிற பட்டியலில் பிரதானமான இடத்தை பெட்ராவுக்கு அளித்துள்ளது ஸ்மித்சோனியன் என்கிற பத்திரிகை. கி.மு 3ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோர்டான் பிரதேசத்தை ஆண்டுவந்த நெபாட்டியன்கள் காலத்தில் பெட்ரா நகரம் உருவாக்கப்பட்டது. பண்டைய காலத்தில் நெபாடியன்களின் தலைநகரமாக செல்வ வளம் கொழித்த நகரம் தான் பெட்ரா. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் பாறை என்று அர்த்தம். நாலாபுறமும் மலைகள். நடுவில் பள்ளத்தாக்கு. இந்த நகரம் மிகவும் பாதுகாப்பாக அமைந்திருந்தது. பெட்ரா நகரத்தில் 20,000 நெபாடியன்கள் மட்டும் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்கள் தண்ணீர் சேமிப்பதில் வல்லர்கள். அந்த வறண்ட மலைப் பிரதேசத்தில் பெய்யும் மழை வீணாகி விடாத வகையில், நகருக்குள் நேர்த்தியான கால்வாய்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து தண்ணீரை பல இடங்களில் தேக்கியுள்ளனர். வானைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கும் குகைக் கோவில்கள் தான் இந்த நகரின் சிறப்பம்சம். இவற்றில் பல காலவெள்ளத்தில் சிதைந்து விட்டாலும், இன்னும் சில பிரம்மாண்டங்கள் அங்கே நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, கருவூலம் என அழைக்கப்படும் அல்-கஸ்னே. இந்த கல் கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகளையும், கைவினை நுணுக்கங்களையும் பார்க்கும் போது( நம் நாட்டு மகாபலிபுரத்தை மிஞ்சி விடும்) இது உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கும். பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை. பல கலாசாரங்களின் கலவையாக இந்த கல் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கோவிலின் முகப்பு பகுதி நான்கு தூண்களுடன் பிரம்மாண்டமாக இருக்கிறது. பெட்ரா நகர் கலைப்பொக்கிஷங்களை பொதுவாக நான்கு வகைகளுக்குள் அடக்கிவிடலாம். கருவூலக் கட்டடம், வெளிப்புற கல்லறைகள், வாடி மூசா கல்லறைகள், கலைக்காட்சியகம் ஆகியன. இவ்வளவு சிறப்பு பெற்ற அழகு நகரம் கி.மு. 312 ம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட பெட்ரா நகரம் கி.பி. 363 ல் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தின் காரணமாகவும், கி.பி. 700 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாகவும் மண்ணுக்குள் முழுமையாக புதைந்து போய்விட்டது.  




 அல் கேசினே! * லுட்விக் ஒரு சுற்றுலாப் பிரியர். சரித்திரப் பெருமை வாய்ந்த டமாஸ்கஸ், லெபனான். எகிப்து மற்றும் அரேபியாவின் பல சிறிய தேசங்களைச் சுற்றி வந்தவர். உண்மையில் நைல் நதியின் மூலத்தை அடைந்து அதன் ஆற்றுப்படுகைகளில் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபடும் நோக்கில்தான் அவர் தனது புதிய பயணத்தைத் தொடங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக ஜோர்தானில் புதைந்து கிடந்த பிரம்மாண்டமான கருவூலமான அல் கேசினே-வை கண்டுபிடித்தார். நெபாடியர்களின் கடவுள்! *பெட்ராவில் வாழ்ந்த மக்கள் பல தெய்வங்களை வணங்கிவந்தனர். அவர்களது மதம் இன்னதென்று தனித்துக் குறிப்பிட்டு விட முடியாதபடி கலப்பு மதமாக இருந்து வந்திருக்கிறது. அவர்களது காலத்தில் கட்டப்பட்டிருந்த ஆலயங்களில் அவர்கள் வணங்கிவந்த அல்அஸி மற்றும் துஷாரா ஆகிய கடவுள்களை பிரதிபலிக்கும்விதமாக சிலைகள், தூண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. துஷாரா கடவுளை போற்றி வணங்கும் துஷாரி பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. அவர்களது ஆலயங்களுக்கு அல் டெயிர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பெட்ரா கண்காட்சியகம் *1994ல் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் பெட்ராவில் கண்டெடுக்கப்பட்ட சிறிய மண் சிற்பங்கள், பயன்படுத்திய பாத்திரங்கள், ஓவியங்கள், கலை வேலைப்படுகள் கொண்ட கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கண்காட்சியாக வைத்திருந்தனர்.




No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you