DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகம். ஆனால் மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.
தாய்ப்புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரு புறாக்களுமே அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளி வருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன.
குஞ்சுப் புறாக்களுக்கு முதல் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை இந்தப் பால் மட்டும்தான் உணவு. பால் சுரக்கும் தொண்டைப் பையானது சாதாரண நாட்களில் புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்க உதவும் உறுப்பாகும். பால் கொடுக்கும் சமயத்தில் புறாக்கள் தானியம் உட்கொண்டால் பாலில் குஞ்சுகளால் ஜீரணிக்க முடியாத தானியம் கலக்க வாய்ப்புண்டு. அதனால் புறாக்கள் தாங்கள் பட்டினியாக இருந்து தங்களின் சிறிய குஞ்சுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பாலூட்டுகின்றன. எப்பேர்ப்பட்ட தியாகம் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஈரப்படுத்தி மென்மைப்படுத்தப்பட்ட தானிய உணவு குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.
அதிபுத்திசாலியான புறா இனம், கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் (pass the mirror test) ஆற்றல் படைத்தவை மனிதர்களைத் தவிர குரங்கு, யானை, டால்ஃபின் போன்ற இன்னும் சில மிகக் குறைந்த உயிரினங்களுக்கே இந்த ஆற்றல் உண்டு. இதுபோல் இந்தப் புவியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாவற்றிலும் நமக்குத் தெரியாத பல்வகை அதிசய ஆற்றல்கள் உள்ளன. இவற்றை அறியும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். எல்லா உயிர் இனங்களையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை வளர்க்க வேண்டும். இந்தப் புவியானது, மனிதர்களாகிய நமக்கே சொந்தம் என்ற அகந்தை உணர்வு மழலைச் செல்வங்களிடம் தலைதூக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.
No comments:
Post a Comment
Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you