Dec 7, 2017

பாகம் 1 : மனம் எனும் மாய தேவதை - (ஒரு மனோதத்துவ அறிவியல் கட்டுரை தொடர் )

இந்த" மனம் எனும் மாய தேவதை" கட்டுரை தொடர் எனது வழக்கமான 'பக்கா அறிவியல் ' கட்டுரைகளில் இருந்து சற்றே மாறுபட்டு சைகாலஜிக்கலான ஒரு கட்டுரை தொடர். ஆனால் மனோ தத்துவம் என்பதும் அறிவியலின் பிரிவு தான் என்பதால் இதையும் அறிவியல் கட்டுரை என்றே தாராளமாக சொல்லலாம்.
எனது "மனம் எனும் மாய பிசாசு" தொடரில் மனதை சரியாக பயன் படுத்தாமல் அதை பிசாசாக மாற்றி அதன் பிடியில் சிக்கி சின்னா பின்னம் ஆனவர்கள் உண்டு
உண்மையில் மனம் பிசாசா அல்லது தேவதையா என்பது அதை நாம் பழகும் விதத்தில் தான் இருக்கிறது .அதை தவறாக கையாண்டால் நம்மையே அழிக்கும் பிசாசு அதே சமயம் அதை சரியாக கையாண்டால் அது வரங்களை அள்ளி கொடுக்கும் தேவதை.
வாருங்கள்,
இந்த முறை அந்த தேவதையை கொஞ்சம் சந்தித்து நலம் விசாரித்து விட்டு வருவோம்.
மனம் என்பதை பற்றி சொல்லும் போது "அதை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்...நல்லதை நினை ..நல்லதை செய் நல்ல எண்ணங்களை கைகொள்" போன்ற பொதுவான அறிவுரைகள் சொல்வதில் எனக்கு அதிக உடன் பாடு இல்லை.
மாறாக மனதை பற்றி அதை கையாளுதல் பற்றி அதை புரிந்து கொள்ளுதல் பற்றி அதன் ஆச்சரியங்களை ..அதிசயங்களை பற்றி அதன் செயல்பாடுகள் பற்றி கொஞ்சம் அறிவியல் ரீதியாக பேசவே அதிகம் விரும்புகிறேன்.
உங்களிடம் ஒரு கருவி உள்ளது அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்... என்று வைத்து கொள்ளுங்கள் .அந்த கருவி பற்றி அது செயல் படும் விதம் பற்றி தெரிந்து வைத்து கொண்டால் அதை இன்னும் சிறப்பாக நீங்கள் செயல் படுத்த முடியும் அல்லவா... இந்த உண்மை மனதிற்கும் பொருந்தும்.
மனம் என்பதின் செயல் பாடு ஒரு கருவியோடு நாம் ஒப்பிட முடியும்.
அதற்கு ஒரு குறிப்பிட்ட வகை உள்ளீடு கொடுத்தால் அது குறிப்பிட்ட வகை வெளியீடை கொடுக்கும் என்று ஒரு கணினி போன்று அதன் செயல் திறனை வரையறுக்க முடியும். அதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளும் முன் உங்களுக்கு ஒரு கேள்வி மனதிற்கும் அறிவிற்கும் என்ன வித்தியாசம்?
இவைகள் இரண்டும் இரண்டு துருவங்களாக நின்று கொண்டு நம்மை ஆளுக்கொரு திசையில் இழுப்பதை நமது அன்றாட வாழ்வில் நாம் உணர்ந்து இருப்போம். இதோ சில உதாரணங்கள்....
நீங்கள் சுகர் பேஷன்ட் நீங்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் ஒரு சுவீட் உங்களை கை நீட்டி அழைக்கிறது
இப்போது 'ஒன்னு சாப்பிட்டா நல்லா இருக்கும் 'என மனம் ஆசை பட்டு கொண்டு இருக்கும் போதே உங்கள் அறிவு ' எச்சரிக்கை ஏற்கனவே சுகர் அதிகம் இந்த சுவீட் உனக்கு தேவையா'என்று கேள்வி கேட்கிறது.
சொந்தகாரன் பணம் உதவி கேட்டு உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான்.'பாவம் அவன். நம்ம வீட்டில் தான் பணம் உள்ளதே அவனுக்கு கொடுத்து உதவுவோம் 'என்று மனம் சொல்லி கொண்டு இருக்கும் போதே உங்கள் அறிவு 'அங்கே மனைவி முறைத்து கொண்டு இருக்கிறாள் இப்போ இவனுக்கு காசு கொடுத்தால் நீ காலி' என்கிறது.
இரவு கண்முழித்து நெட்டில் இருப்பதை மனம் விரும்பும் போது உடம்பு வீணா போகுது பார்த்துக்கோ என அறிவு சொல்லி கொண்டே இருக்கிறது.
இப்படி சில இடங்களில் மனம் நல்லதாகவும் அறிவு கெட்டதாகவும் சில இடங்களில் அறிவு நல்லதாகவும் மனம் கெட்டதாகவும் மாறி மாறி இருப்பதை பார்க்கிறோம் அப்போ இதில் யார் சொல்லும் பேச்சை கேட்பது யார் சொல்வதை மீறுவது..?
மனதிற்கான சிந்தனையும் அறிவிற்கான சிந்தனையும் நமக்கு மூளையில் இருந்து தானே வருகிறது அப்போ சிந்தனை உடன் உணர்வுகள் கலந்தால் அதை மனம் என்றும் உணர்வுகள் கலக்காத சிந்தனையை அறிவு என்றும் ஓரளவு நாம் வரையறை செய்யலாமா?
ஆனால் மனம் எனும் போது அதில் தானாக இதயம் சம்பந்த படுவது எப்படி?
அதீத சந்தோஷம் அதீத சோகம் இவை வரும் போது இதயத்தில் பாரமாகவோ லேசாகவோ இருப்பதாய் உணர்வு ஏற்படுகிறதே ஏன் ?
இதில் இந்த மூளையின் செயல் பாட்டை இன்னும் அறிவியல் முழுசாக அறிய முடியவில்லை... அதன் மொத்த ஆற்றலில் நாம் சிறிதளவு தான் பயன் படுத்துகிறோம் .அதில் பெரும் பகுதியில் என்னென்ன சாத்தியங்கள் அடங்கி இருக்கின்றன என்பது நமக்கு தெரியாது என்பது நமக்கு தெரியும்.
வெகு தற்செயலாக விபத்தாக சில பேருக்கு அந்த மறைந்திருக்கும் ரகசியங்கள் வெளி வந்த சம்பவங்கள் வரலாற்றில் உண்டு.
ஒருவர் ஏணியில் இருந்து கீழே விழுந்து மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் அடி பட்டதை தொடர்ந்து தூரமாக நடக்கும் ஒலியை இங்கேயே உணர தொடங்கினார்.
ஒரு பெண்மணி ..தலையில் அடி பட்ட உடன் பகலிலேயே நட்சத்திரத்தை பார்க்க தொடங்கினார்.
அடுத்தவர் இன்னும் விசேஷம்.... அவருக்கு 24 மணி நேரமும் காதுக்குள் ஏதோ ஒலி கேட்டு கொண்டே இருந்ததாம் நீண்ட ஆய்வுக்கு பின் ஆய்வாளர்கள் கண்டு சொன்னது.... அங்கிருந்து பல மைல் தொலைவில் உள்ள ரேடியோ ஒலி பரப்பு கோபுரம் ஒலி பரப்பும் அனைத்தும் இவருக்கு கேட்ட படி இருந்ததாம். பிறகு அவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று.
அப்படி என்றால் ரேடியோ சிக்னலை வெறும் காதால் கேட்கும் ஆற்றல்...
பகலிலே நட்சத்திரங்களை பார்க்கும் ஆற்றல்...
தூர நடப்பதை இங்கேயே உணரும் ஆற்றல் ..
எதிர்காலத்தில் நடப்பதை பார்க்கும் ஆற்றல் ..இவை எல்லாம் மூளையின் ஒரு மூலையில் இன்னும் பயன்படுத்த படாமல் ஒளிந்து கிடக்கிறதா... ?அவை ஏன் சாதாரணமாக வெளிபடுவது இல்லை. தற்செயலாக சில பெயருக்கு மட்டும் அது எப்படி வெளி பட்டு விடுகிறது. சில பேருக்கு இயல்பாக ESP எனப்படும் பின்னால் நடக்க போவதை சொல்லும் திறன் இருக்கிறதே அது எப்படி வந்தது.
கையால் தொடாமல் பொருளை நகர்த்த ஆற்றல் வாய்ந்த மனிதர்கள் உலகத்தில் இருப்பதாக டிஸ்கவரி டாக்குமெண்ட்ரி சொல்லுகிறது.
அப்போ மூளையின் சக்தி தான் என்ன ?ஏன் அது ஒளிந்து இருக்கிறது ?அல்லது மொத்த மனித குலமும் இன்னும் பரிமாண வளர்ச்சி எனும் பயணத்தில் உள்ளதா இன்னும் லட்ச கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் மனிதனுக்கு கிடைக்க போகும் ஆற்றல்கள் தான் மூளையில் ஒளிந்து கிட(டை)க்கிறதா?
இவைகளை பயிற்சி மூலம் வெளி கொண்டு வர முடியுமா?
தொடர்ந்து சிந்திப்போம்


No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you