Dec 7, 2017

மனம் எனும் மாய தேவதை - பாகம் 11 : தேவதை தரிசனம்

(இறுதி பாகம் )
மனதில் தீய எண்ணங்கள் கீழ்த்தனமான எண்ணங்கள் தவறாக எண்ணங்கள் வரும் போது நாம் என்ன செய்ய வேண்டும். அதை எப்படி கையாள வேண்டும் ?
மனதில் தீய எண்ணங்கள் ஊற்று எடுக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி வாழ்வை மனதை அலசியவர்கள் சொல்வது என்ன என்று பார்க்கலாம்.
அதற்க்கு முன்....
எந்த ஒரு கருவியையும் கையாளும் முன் அந்த கருவியின் இயல்பு பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டியது அவசியம் அல்லவா.
ஒருவன் இயந்திர துப்பாக்கியை எடுத்து கைத்தடி போல பயன்படுத்தி எதிரியை அடித்தால் எப்படி இருக்கும் ? அந்த துப்பாக்கியின் இயல்பு அறிந்தால் அவன் அதை விட சிறப்பாக பயன்படுத்துவான் அல்லவா ? மனம் ஒரு கருவி தான் அதை பயன்படுத்த அதன் இயல்புகளை குறித்த ஞானம் அவசியம்.
அதன் இயல்பை பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன் கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கலாம்.. உங்களுக்கு எப்போதும் பல சிந்தனைகள் வருகிறதே (நல்லதோ கெட்டதோ ) அது எதுவும் நீங்க சிந்திக்கிறது இல்ல. சும்மா தேமேனு வைக்க பட்ட ரேடியம் எபோதும் கதிர்வீச்சை வெளியிட்டு கொண்டே இருப்பது எப்படி ஒரு அறிவியல் உண்மையோ.. 'பிரவுனியின் மோஷன் ' இல் துகள்கள் எப்போதும் இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருப்பது எப்படி ஒரு அறிவியல் உண்மையோ... அப்படி மனதில் சதா எண்ணங்களின் தள்ளு முள்ளு ஓடி கொண்டே இருப்பது அதன் இயல்பு.... ஆனால் அதை எல்லாம் தங்களது சிந்தனையாக நினைத்து குழப்பி கொள்வது தான் மனிதன் செய்யும் தவறு...( வேணும்னா ஒன்னு பண்ணி பாருங்களேன் கொஞ்ச நேரம் சிந்திக்காம இருக்க முயன்று பாருங்களேன் அப்போ தெரியும் அது யார் கட்டுப்பாட்டில் இருக்கு என)
நமது கவனம் இல்லாமலே இதயம் துடிப்பது போல நமது கவனம் இல்லாமலே ஜீரண மண்டலம் வேலை செய்வது போல...அல்லது சுவாசம் வந்து போவது போல நமது கவனம் இல்லாமலே... சொல்ல போனால் நமது கவனம் இல்லாததால் தான்... சிந்தனைகள் நமக்குள் வந்து போகின்றன. பகல் நேரம் பூராவும் உள்வாங்கிய வெப்பதை இரவில் வெளியிடும் ஒரு பாறையை போல வாழ்வில் அன்றாடம் நமது கவனதிற்கே வராமல் உள்வாங்கும் பல தரவுகளை மனம் சிந்தனைகளாக வெளிபடுத்துகிறது. இரவில் கனவாக வெளிப்படுத்துகிறது.
"மனம்....பகலில் காணும் கனவு = சிந்தனை...
இரவில் சிந்திக்கும் சிந்தனை = கனவு "
என்று ஒரு கூற்று உண்டு.
இதில் நல்ல சிந்தனை கேவலமான சிந்தனை குற்ற சிந்தனை... வக்கிர சிந்தனை..புனித சிந்தனை ...எல்லாமே அடக்கம்.
இதில் இப்போது நான் சொல்ல போவது தான் மிக மிக முக்கியமானது. அந்த சிந்தனைகள் எதனுடனும் நீங்கள் தங்களை அடையாள படுத்தி கொள்ளாத வரை... அல்லது அந்த சிந்தனைக்கு மறுவினை ஆற்றாத வரை அந்த சிந்தனை உங்களுக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால் அதற்க்கு நீங்கள் ஒரே ஒரு சின்ன ரெஸ்பான்ஸ் (அதை விரும்பியோ அல்லது அதற்க்கு எதிராகவோ ) கொடுத்து விட்டால் அது உங்களை இருகபிடித்து கொள்கிறது
இப்போ இதை கவனியுங்கள்...
உங்களுக்குள் ஒரு நாள் ஒரு மிக கீழ்த்தனமான சிந்தனை வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள். நீங்கள் அப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி கையாள வேண்டும் ?
அது மாதிரி சிந்தனை உள்ளே வந்த உடன் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் மிக கவனமாக அதை கவனிப்பது... ஒரு கேவலமான சிந்தனை உள்ளே ஓடி கொண்டிருக்க நீங்கள் அதை ஏதோ படம் பார்ப்பது போல என்ன எல்லாம் சிந்திக்கிறது என உற்று கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.
'ச்சே எவ்ளோ மட்டமான சிந்தனை' என்றோ அல்லது 'ஐயோ இப்படி ஒரு எண்ணம் வருதே என்ன செய்வேன்' என்றோ அதற்க்கு மறுமொழி கொடுத்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் காலி.... அது உங்களை பற்றி கொள்ளும்... குறிப்பாக ஒரு விஷயத்தை வேணாம் வேணாம் என அழுத்தமாக சொல்ல சொல்ல மிக ஆழமாக பிடித்து கொள்ளும் . அது மனதின் இயல்பு. ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் அதை உற்று கவனித்து கொண்டே இருந்தால் ஒரு மேஜிக் நடக்கும் அது எப்படி தானாக வந்ததோ அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்கி சென்று கடைசியில் மறைந்து விடுவதை பார்க்கலாம். மனம் தேவதையாக தரிசனம் தருவது இந்த கணத்தில் தான்.
ஒரு வேலை மீண்டும் வந்தால் ? மீண்டும் அதே உற்று கவனி வைத்தியம் தான்.
இந்த தனக்குள் உற்று கவனிப்பது இருக்கே இதற்க்கு இன்னோரு வி்சித்திர பயன்பாடு உண்டு.... நமக்குள் வரும் கலை ... அன்பு... ரசனை ஆனந்தம் .. மகிழ்ச்சி போன்ற போன்ற நேர்மறை ஆற்றல்களை மேலும் தக்க வைக்க..
கோபம்... பொறாமை... ஆற்றாமை... வன்மம்... போன்ற எதிர்மறை ஆற்றலை மறைந்து போக செய்ய இது உதவு கிறது . எப்படி ?அதற்க்கு என்ன செய்ய வேண்டும் ?
அது ஒரு பயிற்சி...
ஒரு ரோஜா வை பார்க்கிறீர்கள் நமக்குள் அந்த அழகு ஒரு மாறுதலை உண்டாக்குகிறது... ஒரு குழந்தையின் சிரிப்பு... ஒரு சூர்யோதம் ..ஒரு ஓவியம்... நமக்குள் ஒரு குதுகூலத்தை உண்டு பண்ணுகிறது அந்த நேரத்தில் எல்லாம் நமக்குள் நடக்கும் மாற்றத்தை நாம் உற்று கவனிக்க வேண்டும். ஒரு சங்கீதம் கேட்கிறீர்கள் மனதில் அது ஒரு இதத்தை கொடுகிறது.. அப்போ சட்டென்று கண்ணை மூடி மனதுக்குள் ஆழ்ந்து அந்த இதத்தை உற்று கவனித்து அதனுடன் ஒன்றி போக வேண்டும்.
இப்படி தொடர்ந்து பயிற்சி செய்து வர வேண்டும் . இதே போல கோபம் ..பயம்..
வெறுப்பு வரும் போதும் உள்ளே உற்று கவனித்து அது செய்யும் மாறுதலை கவனிக்க வேண்டும் .
அப்படி செய்தால் என்ன ஆகும் தெரியுமா ?
தானாகவே நேர்மறை ஆற்றல் நமக்குள் தங்கும் எதிர்மறை விலகும் .. அதெப்படி நடக்கிறது .?அது எப்படி சரியாய் இது தங்கும் அது ஓடும் என்றால் அதான் மனதின் இயல்பு.
ஒரு பெரிய வீடு... அதில் விருந்தாளி வரும் போது வீட்டுக்காரர் சரியாய் கவனிக்க வில்லை என்னாகும் விருந்தாளி வருவது குறைந்து போகும்.
அதே வீடு... அங்கே திருடன் வந்ததை வீட்டுக்காரர் சரியாய் கவனிக்க வில்லை என்னாகும் திருடன் வருவது அதிகம் ஆகும்.
இதையே தலைகீழாக சொல்வதானால்.
அந்த வீட்டு காரர் யார் வந்தாலும் கவனிபாரேயானால் .... தானாக திருடன் ஓடி போவான். நல்ல விருந்தாளிகள் அதிகம் வருவார்கள்.
மனம் கூட இப்படி தான் செயல் படுகிறது.
நீங்கள் கற்று கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான சூட்சமம்... எப்போதும் மனதை கவனி. புத்தர் தங்கள் சீடருக்கு எது செய்தாலும் நாள் முழுல்தும் மனதை கவனித்த படியே இரு என்று வற்புறுத்தினார். அப்படி செய்தால் தூக்கத்தில் கூட மனதை கவனிக்க முடியும் .
எண்ணங்களில் நாம் ஏன் இவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தெரியுமா ?
தொடர்ந்து நாம் யோசிக்கும் ஒரு எண்ணம் தான் செயல் ஆகிறது. தொடர்ந்து செய்யும் செயல் தான் பழக்கம் ஆகிறது. தொடர்ந்து செய்யும் பழக்கம் தான் ஒருவன் குணாதிசயமாகிறது. தொடர்ந்து இருக்கும் குணாதிசயம் தான் அவனை சுற்றி உள்ள சூழ்நிலையை உண்டாக்குகிறது .அவன் விதியை எழுதி அவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.
மனதை பற்றி இன்னோரு மகா ரகசியம் இப்போது சொல்கிறேன்.. இந்த பிரபஞ்சம் எங்கும் மனிதர்களின் எண்ணங்கள் பரவி இருக்கிறது அதில் நல்ல.. தரமான... வலிமையான... அன்பான ...சிந்தனையும் உண்டு. கேடு கெட்ட சிந்தனையும் உண்டு. உங்கள் மூளை எதை பற்றி தொடர்ந்து சிந்திக்கிறதோ... அது சம்பந்தமான தகவலை இந்த பிரபஞ்சத்தில் இருந்து அது உறிஞ்சி இழுக்கிறது.
அது உங்களுக்கே தெரியாத உங்கள் திறனுக்கு அப்பால் பட்ட ஒரு தகவலாக கூட இருகலாம் ஆனால் அதை மூளையால் கிரகிக்க முடியும்.
மனம் ஒரு கருவியை போன்றது என்று முதல் பாகத்தில் சொன்னேன்.
எந்த ஒரு கருவியை வாங்கினாலும் அதனுடன் அந்த கருவியை கையாள அல்லது பராமரிக்க 'டிப்ஸ் ' கள் கொண்ட கையேடு கொடுக்கப்படுவதை போல இந்த பாகத்தில் அப்படி சில டிப்ஸ்களை மட்டும் கொடுத்து கட்டுரையை முடிக்கலாம் என்று இருக்கிறேன்.
  ஒரு சீடன் தன் குருவை அணுகி குருவே நான் இரண்டு மாடுகளை வளர்க்கிறேன் அதில் ஒன்று நல்லது இனொன்று கெட்டது ஒரு வேளை என்றைக்காவது இரண்டிற்கும் சண்டை வந்தால் எது ஜெயிக்கும் ? என்று கேட்டான். அதன் பொருள் தனக்குள் நல்ல மனமும் உண்டு கெட்ட குணமும் உண்டு இரண்டிற்கும் சண்டை வந்தால் எது வெல்லும் என்பது தான்.
பொதுவாக உலகில் நல்ல மனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு இல்லை. இரண்டும் கலந்தே மனங்கள் இருக்கின்ற அது தான் மனதின் இயல்பும் கூட. ஒருவனுக்கு நல்ல மனம் ....நல்ல சிந்தனை மட்டுமே வரும் படி மனம் படைக்கபட்டு அவன் நல்லவனாக இருந்தால் அதில் சிறப்பு என்ன இருக்க முடியும். நல்லதும் கெட்டதும் கலந்து இருந்து நாம் நல்லவர்களாக இருக்கும் போது தான் அது சிறப்பு. ஒரு ஃபுட் பால் விளையாட்டில் கோல் கீப்பர் யாரும் இல்லை என்றால் அதில் கோல் போடும் வீரன் ஒரு போதும் சிறந்தவன் அல்ல . கோல் கீப்பர் தடையாக இருந்து அதை மீறி கோல் போடுபவனே நல்ல விளையாட்டு வீரன். நீங்களும் வாழ்வில் நல்ல விளையாட்டு வீரன் ஆக வேண்டும் என்றால் தடையை ஏற்க கற்க வேண்டும்.
நமக்குள் நல்லது கெட்டது இரண்டும் இருக்கே அப்போ இரண்டில் எது வெற்றி பெறும் அதை தீர்மானிப்பது எது ? அந்த சீடனுக்கு குரு சொன்ன பதில் என்ன தெரியுமா ? எந்த மாட்டிற்கு நீ அதிக தீவனம் போட்டு அதிக ஊட்டம் கொடுத்து வைத்து இருக்கிறாயோ அதுவே ஜெயிக்கும். நமக்குள் தீய எண்ணங்கள் இருப்பது இயல்பு ஆனால் நாம் அதற்க்கு ஊட்டம் கொடுக்காமல் நல்லதிற்கு ஊட்டம் கொடுப்பது நமது கையில் கொடுக்க பட்ட சுதந்திர வாய்ப்பு.
  மனம் என்பது கட்டவிழ்த்து விட்டு விட்டால் அடக்குவதற்கு கடினமான ஒரு காளை. ஆனால் அவிழ்த்து விடாமல் இருப்பது எளிது.
மனதை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் எண்ணங்களை உண்டாக்கி அலைய விட்ட பின் அதை அடக்குவது கடினம் ஆனால் அந்த எண்ணம் வர ஆரம்பிக்கும் போதே அதை உற்று கவனித்து வர விடாமல் செய்வது எளிது என்கிறார் ஓஷோ.
தீய எண்ணங்களில் இருந்து தப்ப ஒரு சிறந்த வழி அது வரும் போதே கவனித்து அதை வர விடாமல் செய்வது தான்.
  குற்ற உணர்வு உங்கள் மனதின் வளர்ச்சியை பாதிக்கும். ஒரு போதும் நாம் கொள்ள கூடாத ஒரு உணர்வு குற்ற உணர்வு.
இருட்டை எதிர்க்க நாம் இருட்டை பற்றி யோசிக்க கூடாது வெளிச்சத்தை பற்றி யோசிக்க வேண்டும் தீமையை எதிர்க்க நாம் நினைக்க வேண்டியது தீமையை பற்றி அல்ல. மாறாக வலிமையான நல்லதை பற்றி என்கிறார் விவேகானந்தர்.
  "உங்களால் ஒரு விஷயம் முடியும் என்று நினைத்தாலும் ...
உங்களால் ஒரு விஷயம் முடியாது என்று நினைத்தாலும் இரண்டும் உண்மை தான் "என்கிறார் ஒரு அறிஞர். எப்படி ??
அவர் கொஞ்சம் குள்ளம்.. இதில் கொஞ்சம் பெண் குரல் போன்ற கீச்சு குரல் வேறு. வாழ்க்கையில் எத்தனை இடத்தில் இதனால் தலை குனிவு ஏற்பட்டிருக்கும் யோசித்து பாருங்கள்.
ஆனால் உண்மையில் அப்படி நடக்க வில்லை அவரை பார்த்து அப்படி யாராவது குறைத்து பேசினால் பேசியவர் 10 பேரால் நகைக்க படுவார். காரணம் அவர் அப்படி ஒரு அசாத்திய மனிதர் .மக்கள் பொதுவாக சாதனையாளர் என்றாலே அவரை 'ரோல் மாடலாக 'காட்டும் அளவு தன்னை உயரமாக வைத்து இருக்கும் நபர் அவர். பணமும் புகழும் அவர் காலடியில்.
காரணம் நான் சொன்ன அந்த உயரம் குறைவான ...கீச்சு குரல் கொண்ட நபரின் பெயர் " சச்சின் டெண்டுல்கர் "
புதிதாக நடிப்பு துறைக்கு காலடி வைத்திருக்கும் புது நடிகன் அவர். சினிமா இன்டெஸ்ட்ரி அவரை நிராகரிக்கிறது அதற்க்கு 2 காரணங்கள் சொல்கிறது. ஒன்று அவர் மிக உயரமான இருக்கிறார் மக்கள் அவரை ஹீரோவாக ஏற்பது கடினம். இரண்டு.. அவர் கண்களில் ஆண்மை இல்லை மாறாக பெண்கள் போன்ற பெண்மை சாயல் கலந்த மயக்கும் கண்கள் அவர்களுக்கு.
என்ன நடந்தது என்றால் தடையை மீறி படத்தில் நடித்தார். வெற்றி பெற்றதோடு இல்லாமல் மக்களால் கொண்டாட படும் சூப்பர் ஸ்டாராக மாறினார். வெறி தனமான ரசிகர்களை உண்டாக்கினார். அவரது ரசிகர்களிடம் ஏன் அவரை அவ்வளவு பிடிக்கிறது என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இரண்டு ஒன்று அவர் உயரம் இனொன்று அவரோடைய வித்யாசமான கண்கள். அந்த நடிகர் ஹிந்தி சூப்பர் ஸ்டார்' அமிதாப் பச்சன்' இது வரை தனது மொழி தவிர வேறு மொழி படத்தில் நடித்திராமலே இந்தியா முழுதும் புகழ் அடைந்த ஒரே நடிகர்.
இவர்கள் தங்களால் முடியாது என்று நினைத்து இருந்தால் அதுவும் உண்மை தான்.
ஆனால் தன்னால் முடியும் என்று நினைத்தார்கள் அதுவும் உண்மை தான்.
  எந்த ஒரு கருவிக்கும் பராமரிப்பு கெடு இருக்கும் . ஒரு இண்டஸ்ட்ரியில் தினம் பார்க்க வேண்டியவை.. வாரம் தோறும் பராமரிக்க வேண்டியவை 6 மாதத்திற்கொருமுறை பராமரிக்க வேண்டியவை ...வருடம் ஒரு முறை பார்க்க வேண்டியவை என்று இருக்கும்.
மனம் தினம் கண்காணிக்க பட வேண்டிய ஒரு கருவி அதை பராமரிக்கும் செயலுக்கு பெயர் சுய ஆய்வு அல்லது சுய விமர்சனம்.
ஒவ்வொரு நாளும் தன்னை தானே ஆய்வு செய்து இன்று நாம் செய்ததில்
நல்லது என்ன கெட்டது என்ன மாற்ற வேண்டியது என்ன என்ற ஆய்வு முக்கியம்.
இது தவிர ஒவ்வொரு வினாடியும் தனக்குள் நிகழ்வதை கவனித்த வண்ணம் இருப்பது ஒரு நல்ல பயிற்ச்சி.
  நேர்மறை சிந்தனையும் வெற்றி மனோபாவமும் வெறும் பயிற்சிகள் மட்டுமே. மற்ற செயல்களை பழகுவதை போல இதை பழக்கத்தின் மூலம் நமது வாழ்வில் இதை கொண்டு வர முடியும்.

நண்பர்களே இந்த இயற்கை நமக்கு கொடுத்துள்ள மிக வலிமையானதொரு கருவி...ஒரு கொடை...ஒரு பரிசு இந்த மனம் .இது வரங்களை அள்ளி கொடுக்கும் தேவதை.. இதை தவறாக கையாண்டால் நம்மை அழித்தொழிக்கும் பிசாசு. இதை சரியாக புரிந்து கொண்டு சரியாக கையாண்டால் இந்த தேவதையை வசமாக்கி வாழ்வில் வெற்றி பெறலாம்.
என்று கூறி இத்தொடரை நிறைவு செயகிறேன்.
மனம் எனும் தேவதையை தரிசிக்க இணைந்து பயணம் செய்ததற்கு நன்றி.
அடுத்த முறை வேறு தலைபில் உங்களை சந்திக்கிறேன் அன்பு நண்பன் Rajan Kochimon
பின்னுரை :
இந்த மனம் எனும் மாய தேவதை குறித்து உலகளவில் நம் நாட்டினர் போல ஆழமாக அலசிய அறிஞர்கள் உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லை.
ஆனால் இன்று இவர்களின் கருத்துக்கள் இங்கே இருந்து அங்கே எடுத்து செல்லபட்டு அங்கே அலங்கரித்து மசாலா போடபட்டு மொழி மாற்றம் செய்யபட்டு மீண்டும் இங்கே வந்து ஏதோ நாம் அறியாத "ரகசியம் " போல சக்கை போடு போடுகிறது. நாமும் அதை வியந்து பார்க்கிறோம்.
மு. வரதராசனார் எழுதிய "நலவாழ்வு " என்ற புத்தகம் தொடங்கி சுகி சிவம் அவர்களின் மனசே நீ ஒரு மந்திர சாவி வரை
எம். எஸ் உதய மூர்த்தி அவர்கள் எழுதிய தன்னம்பிக்கை நூல்கள் முதல்.. விவேக்கானதர் புத்தகங்கள் வரை...
கீதையில் கண்ணன் முதல் (ஆம்... உங்களுக்கு தெரியுமா கீதை ஒரு பக்கா சைக்காலஜி புத்தகம் ) ஓஷோவின் புத்தகங்கள் வரை.....
இந்த மனம் எனும் மாய தேவதை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்கள்.
அப்படி நான் படித்த பல புத்தகங்களில் இருந்த நல்ல கருத்துகளை தான் நான் இந்த கட்டுரையில் எனது பாணியில் பகிர்ந்து உள்ளேன்.
தேவதையை காதலிக்க வேண்டும் என்றால் அப்புத்தகங்களை தேடி படித்து பாருங்கள் நிறைய தெளிவுகள் கிடைக்கும்.
உங்கள் அனைவருக்கும் மனம் எனும் மாய தேவதை வசமாகி வளமான மனமும் வாழ்க்கையும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
நன்றி.

1 comment:

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you