Dec 7, 2017

மனம் எனும் மாய தேவதை - பாகம் 9 : சில சூட்சமங்கள்

சிந்திக்கும் முறை என்பதை பற்றி என்றைக்காவது நாம் யோசித்தது உண்டா ?
நாம் குழந்தைகள் வளர்ப்பில் குழந்தைக்கு சாப்பிடுவது எப்படி , உட்காருவது எப்படி, நடப்பது எப்படி என்று சொல்லி கொடுக்கிறோமே அவனுக்கு சிந்திப்பது எப்படி என்று என்றைக்காவது சொல்லி கொடுகிறோமா என்றால் இல்லை. காரணம் அப்படி ஒன்னு இருப்பது நமக்கே தெரியாது..
எந்த செயலையும் அதை சிறப்பாக செய்வது எப்படி என்ற வழிமுறைகள் உள்ள போது சிந்திப்பது என்பதும் ஒரு செயல் தானே அதை சரியாக செய்ய வழிமுறைகள் நிச்சயம் இருக்க தானே வேண்டும்.
ஆம் நமது நாட்டில் பல ஞானிகள்... சான்றோர்கள்... மனம் ஆராய்ச்சி செய்தவர்கள்... வாழ்வை புரிந்தவர்கள் பல சூட்சமங்களை அவ்வபோது சொல்லி சென்று இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்..ஒரு வீட்டில் ஒரு சிறுவனுக்கு உடல் சரி இல்லை என்றால் அவனை வழக்கத்திற்கு அதிகமாக அன்பு காட்டி கவனிக்கின்றோம் அல்லவா ஆம் அது இயல்பு தான். ஆனால் அதே நேரம் ஆரோக்கியம் இன்மையை பற்றி அந்த குழந்தைக்கு நாம் ஏற்படுத்த வேண்டிய சிந்தனை ஒன்று இருக்கிறது . அதாவது உடல் நிலை சரியில்லாத போது அதிக கவனிப்பு கிடைப்பதால் அவர்களின் ஆழ்மனம் நோயை மறைமுகமாக விரும்புகிறது என்கிறார்கள். எனவே அவர்களை கவனித்து கொள்ளும் அதே நேரம் அவனுக்கு நாம் ' நீ இந்த மாதிரி நோய் நிலைல இருக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல... " என்கிற ரீதியில் சொல்ல வேண்டும் நாம் குணம் ஆனா தான் நமக்கு நல்ல பாராட்டு கிடைக்கும் போல என்று அவனை சிந்திக்க வைக்க வேண்டும். எனவே நோய் பற்றி அவன் தனக்குள் சிந்திக்கும் சிந்தனை " ஏய் நோயே உன்னை நான் அறவே வெறுக்கிறேன். உன்னை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல உனக்கு இடம் கொடுபதில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை " என்கிற ரீதியில் இருக்கும் படி செய்ய வேண்டும்.
நாம் குழந்தை வளர்ப்பில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத ஆனால் பெரும்பாலும் பெற்றோர் கொடுத்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயம் உள்ளது அது தான் குற்ற உணர்வு.
குற்ற உணர்வு குற்றங்களை குறைக்கும் என்று நாம் நம்புவது தான் காரணம். எனவே அவன் ஏதாவது தவறு செய்தால் அதை சொல்லி அவனுக்கு குற்ற உணர்வு ஏற்படுத்துகிறோம்.. ஒருவன் பல சப்ஜெக்டில் பெயில் ஆகி விட்டால் அவனை மட்டம் தட்டி திட்டி குற்ற உணர்வை ஏற்படுத்தினால் அவன் வளர்ச்சி அங்கேயே பாதிக்க படுகிறது. உனக்கு எல்லாம் கணக்கு ஜென்மத்துல வராது என்று அவன் கல்வி காலம் முடிவிற்குள் குறைந்தது 100 முறை ஒருவனை கூறும் ஆசிரியர் நிஜமாகவே அவனுக்கு கணக்கு வரும் சாத்தியத்தை குறைத்து
விடுகிறார்.
அப்போ தப்பு பண்ணா கண்டிக்க கூடாதா என்றால் அப்படி இல்லை அவன் மனம் செழுமையாக வளர்ச்சி கொள்ள வேண்டும் என்றால் அவனை ஒரு போதும் குற்ற உணர்வு கொள்ள அனுமதிக்க கூடாது.. உலகின் எவ்ளோ பெரிய குற்றத்தை செய்தாலும்
நம்மால் அதில் இருந்து வெளி வர முடியும் என்று நம்பிக்கையை அவனுக்கு ஏற்படுத்த வேண்டும்.
'கீழ்தரமானத்தில் இருந்து வெளி வர நாம் கீழ்தரமானதை பற்றி யோசிக்க கூடாது அதற்க்கு மாறாக வலிமையானதை பற்றி யோசிக்க வேண்டும்' என்கிறார் விவேகானந்தர்.
குற்றவுணர்வு ஒருவன் மனதின் வளர்ச்சியை கொல்கிறது... நல்ல செழிப்பான மனங்களை உண்டாக்க நினைத்தால் ஒரு போதும் நீங்கள் அந்த மனதிற்கு குற்ற உணர்வை கொடுக்க கூடாது.(இருளை போக்க வேண்டும் என்றால் நீங்கள் இருளை கையாள்வதன் மூலம் இருளை போக்க முடியாது. மாறாக அதற்க்கு எதிரான வெளிச்சத்தை கொண்டுவருதல் எப்படி என்று யோசிப்பது தான் பலன் தரும் )
இன்றும் கூட பல இளைஞர்கள் தேவையே இல்லாத விஷயத்திற்கு குற்றஉணர்வுக்கு ஆளாகி தன்னை தானே சுருக்கி கொள்கிறார்கள். அதில் முக்கிய பங்கு பெற்றோர் ,ஆசிரியர், மற்றும் நமது சமூகத்திற்கு உண்டு என்பது தான் அதிர்ச்சியான உண்மை.
பள்ளி என்பது மாணவனை கல்வி கற்று கொடுத்து அவன் வாழ்க்கையில் உயர உதவும் ஒரு இடம் என்ற மட்டில் தான் நமக்கு தெரியும் ஆனால் பள்ளிகள் மாணவர்கள் மனதின் மேல் ஏற்படுத்தும் அழுத்தம் டிப்ரஷன் எவ்ளோ என்பது நம்மில் பல பேர் அறியாத உண்மை. எப்போதும் அவனை பயத்திலேயே வைத்து அவனை நசுக்கி கொண்டிருப்பதில் பள்ளிகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அந்த பிஞ்சு மனம் மிக சுதந்திரமாக வாழ்வை அனுபவிக்க வேண்டிய வயது அது அதில் கொண்டு போய் பயம் ...கட்டுப்பாடு... மிரட்டல்... கெடுபிடி... குற்ற உணர்வு... என்று பல விஷ விதைகளை விதைகின்றோம். பொதுவாக நம்மை விட சிறுவர்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள் புதிதாய் ஒன்றை கற்பது என்றால் அவர்களுக்கு மிக பிடிக்கும்.
பள்ளிகள் புதியவைகளை கற்பிக்கும் இடம் என்றால் அவன் அங்கே விரும்பி அல்லவா செல்ல வேண்டும் இன்று சிறுவர்கள் காலையில் உற்சாகமாக பள்ளி செல்லவேண்டிய நேரம் பாருங்கள் ... போர் முடிந்து களைப்பாக வரும் போர் வீரன் போல தலையை தொங்க போட்டுகொண்டு செல்கிறார்கள். அதே பள்ளியில் நாள் முழுதும் களைத்து போய் வெளியே வரவேண்டிய நேரம் பாருங்கள்... ஏதோ காலையில் இப்போது தான் எழுந்து வருவதை போல அவ்வளவு உற்சாகமாக புத்துனர்ச்சியுடன் கத்தி கொண்டு ஓடி வருகிறார்கள். இந்த முரண்பாடு ஆச்சர்யமாக இல்லையா ?
நம்மை சிந்திக்க வைக்க வில்லையா ?
தனது கடைசி தேர்வு முடிந்த உடன் தான் வருடம் முழுவதும் படித்து வந்த புத்தகத்தை வன்மத்துடன் சுக்கு நூறாக கிழித்து காற்றில் பறக்க விட்டு மகிழும் செயல் உங்களை யோசிக்க வைக்க வில்லையா... வருடம் முழுவதும் புத்தகத்தை அவன் என்ன ஒரு மன நிலையில் பார்த்து கொண்டிருந்திருப்பான் யோசியுங்கள். எழுதி வைத்து கொள்ளுங்கள் ஒரு மானவன் என்றைக்கு பள்ளி என்றால் மிக உற்சாகமாக துள்ளி செல்கிறானோ அன்றைக்கு தான் நாம் மனதை செழுமையாக்கும் கல்வி கொடுத்து கொண்டிருக்கின்றோம் என்று பொருள்.
ஒரு நாட்டையே சிறந்த மனிதர்கள் உலவும் இடமாக மாற்றும் சக்தி பள்ளிகளுக்கு மட்டுமே உண்டு என்பதால் தான் இவ்வளவு சொல்கிறேன் பள்ளிகளை குறை கூறுவது ஒரு போதும் நோக்கம் அல்ல.
பள்ளியும் சரி சமூகமும் சரி ஒருவனுக்கு குற்ற உணர்வு வளர்க்குமேயாயின்
குற்ற உணர்வின் விளைவுகள் நாம் கற்பனை செய்வதை விட மிக அபாயமானவை ...இன்று சமூகத்தில் நடக்கும் கொடூர பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் மீதான பலாத்காரங்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது ஒரு சரியாக கையாள படாத மனம் தான் என்பதை மறக்க கூடாது..
" ஒரு "thought exprimant " கற்பனை சோதனை செய்து பாருங்கள்... ("மனம் எனும் மாய பிசாசு" தொடரில் இறுதியில் ஒரு ரோஜா பூ எக்ஸ்பிரிமெண்ட் செய்தோம் நியாபகம் இருக்கா...இந்த சோதனை கூட அந்த சோதனையின் மறுவடிவம் தான். படிக்காதவர்கள் அந்த கட்டுரை படித்து தெரிந்து கொள்ளுங்கள் ) இம்முறை நாம் பண்ண வேண்டிய சோதனை என்ன வென்றால். ஒரு மனிதனுக்கு வயிறு பசிப்பது மிக இயற்கையான ஒன்று அல்லவா... ஆனால் நாம் இதை தவறாக கற்பித்து ஒரு சிறுவனை வளர்க்க வேண்டும்.
அதாவது வயிறு பசித்தால் அது கடவுளுக்கு எதிரானது... தவறானது... என்று சொல்ல வேண்டும் எப்போது எல்லாம் அவனுக்கு பசி வந்து சாப்ட்டை பற்றி பேசுகிறானோ அப்போதெல்லாம் அவனை குற்றஉணர்வுக்கு ஆளாக்க வேண்டும். குறிப்பாக நமது மதங்கள் அதை தீவிரமாக கண்டிக்க வேண்டும்.
அவன் சாப்பிடுவதை பார்த்து விட்டால் அவனை குத்தி காட்ட வேண்டும். பசி என்ற உணர்வு அவனுக்குள் வரும் போது எல்லாம் அதை வெளி படுத்தினால் அதை நாம் கேவலமாக பார்க்க வேண்டும்.
இப்படி செய்தால் என்ன ஆகும் தெரியுமா ?
நிச்சயமாக சாப்பாட்டை அவன் திருட்டு தனமாக சாப்பிடுவான்..பிறகு அதற்க்கு வருத்த பட்டு மனம் ஓடிந்து சுருங்கி போவான். எல்லாவற்றையும் விட முக்கியமாக ஒரு நாளைக்கு 3 முறை வர வேண்டிய உணவு பற்றிய சிந்தனை அவனை 24 மணி நேரமும் ஆட்கொள்ளும்... எப்போதும் சாப்பாட்டை பற்றிய சிந்தனையிலேயே இருப்பான்... ரசித்து உணவை உண்ணுதல் என்பது அவனுக்கு என்ன வென்றே தெரியாமல் போகும். இப்படி பசி சாப்பாடு என்ற இயல்பான விஷயத்தையே அருவெறுபாக அசிங்கமாக மாற்ற முடியும். நல்ல வேலை சாப்பாட்டு விஷயத்தில் நாம் அப்படி செய்வது இல்லை ஆனால் வேறு பல இடங்களில் இதை செயகிறோம். ஒரு குறிபிட்ட பருவத்தில் வரும் இயற்கையான உணர்வு பற்றி சரியாக சொல்லி தர தவறுகிறோம். இப்படி இயற்கையில் அழகான விஷயங்கள் பல அசிங்கமாக அருவெறுபாக வக்கிரமாக பரிணாமம் அடைந்து இருக்கிறது.
ஒருவர் தனக்கு யூரின் வரும் போதெல்லாம் மன சோர்வும் குற்றஉணர்வும் தன்னை தாக்குவதாக சொன்னதை பற்றி சிக்மெண்ட் பிராய்ட் இன் மனோதத்துவ நூலில் படித்து இருக்கிறேன். இதனால் தனது வேலை பிஸினஸ் எல்லாமே பாதிக்க படுவதாக அவர் சொல்லி இருந்தார். அதிலிருந்து மீள அவருக்கு நீண்ட நாள் ஆயிற்றாம். அது உண்டான காரணம் அவர் சிறுவயதில் 'ஒண்ணுக்கு வருது சார் ' என்று வகுப்பில் கேட்டபோது எல்லாம் கடுமையாக கண்டித்த ஆசிரியராம். மேலும் இதற்க்கு பயந்து சிறுவயதில் பல நாள் வகுப்பு முடியும் வரை சிறுநீர் அடக்கி வைத்து இருபாராம்."சிறு நீர் கழிப்பது " என்ற மிக இயல்பான ஒரு செயல் ஒரு மனிதனை எவ்ளோ பாதிக்க முடியும் பாருங்கள்.
எனவே ஒரு வளரும் மனிதன் மிக ஒதுக்க வேண்டிய ஒன்று இந்த குற்ற உணர்வு. அதை தூக்கி எறிந்து எப்போதும் வலிமையானதை.... சிறந்ததை பற்றி சிந்திக்க நாம் கற்று கொடுக்க வேண்டும்.
வானத்தில் வெள்ளை மேகங்கள் இயல்பாய் வருவதை போல.. மனதில் எண்ண மேகங்கள் வருவது இயல்பு. அதில் நல்ல சிந்தனை கெட்ட சிந்தனை இரண்டும் அடக்கம் . அதில் தீய சிந்தனை வரும் போது நாம் சற்று விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
சரி.... மனதில் தீய எண்ணங்கள் உண்டாகும் போது நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி அதை கையாள வேண்டும் ?
அந்த நேரத்தில் நாம் சிந்திக்கும் வழிமுறை என்னவாக இருக்க வேண்டும் ?
இதை பற்றியும்... மனம் குறித்த எளிமையான சில டிப்ஸ் களை பற்றியும் இறுதி பாகத்தில் தொடர்ந்து சிந்திக்கலாம்.

No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you