ஜாதி, மத, மொழி, நாடு என்ற பேதமின்றி, இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு தாய் மக்களே.
அந்தத் தாய் யாரென்று அறிந்தால் மிகவும் ஆச்சரியமும், பெருமையும் கொள்வீர்கள். அந்தத் தாய் 'நட்சத்திரம்' தான். மனிதர்களுக்கு தாங்கள் நட்சத்திரத்தின் குழந்தைகள்தான் என்ற செய்தி பெருமையாகத்தானே இருக்கும்.
நாம் அனைவரும் எப்படி நட்சத்திரத்திலிருந்து வந்தோம் என்று விளக்கமாக பார்ப்போம்.
உயிர்கள் உருவாக பல தனிமங்கள் தேவை. மனிதர்களாகிய நமக்கு ரத்தம் சுத்தமாவதற்கு வேண்டிய ஆக்சிஜன், எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியம், ரத்தத்திற்கு வேண்டிய இரும்புச் சத்து, மற்றும் கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் என்று தனிமங்களும், கூடவே உப்பில் உள்ள சோடியம் மற்றும் பொட்டசியம், மக்னிசியம் போன்ற பல தனிமங்கள் தேவை. அவை இல்லை என்றால் உயிர் வாழ இயலாது என்பது அனைவர்க்கும் தெரியும்.
மேலும் தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்ற பல தனிமங்கள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன.
இந்தத் தனிமங்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி அறிவியலாளர்கள் ஓர் அட்டவணையை ஏற்படுத்தியுள்ளனர் (PERIODIC TABLE). இந்தத் தனிமங்களைப் பற்றி ஆராய்ந்து அதன் அமைப்பு, குணங்கள், பயன்கள் போன்றவற்றை அறிந்து, அவைகளைப் பயன்படுத்தி, நாம் வாழ்வை இனிதே நடத்த அறிவியலாளர்கள் வழி வகுத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு தனிமங்களின் குணங்களை வெகு நாள் ஆராய்ந்து அறிந்த அறிவியலாளர்கள் பணி தான் அவர்களுக்கு உதவியாயிருக்கின்றது.
இந்த தனிமங்கள் எல்லாம் பூமியில் கிடைக்கின்றன. சரி பூமிக்கு இவை எப்படி வந்தன?
நட்சத்திரங்களில் தான் முதலில் இவை எல்லாம் உருவாகின என்று அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். ஏன் பூமியில் நாம் காணும் அனைத்துப் பொருட்களும் மற்றும் நீர் கூட நட்சத்திரத்திலிருந்துதான் உருவாயின. நட்சத்திரத்திலிருந்து அவை பூமிக்கு எப்படி வந்தன?
நம் சூரியன் என்ற நட்சத்திரத்தில் இது போன்ற பொருட்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நம் சூரியனில் உருவாகும் பொருட்கள் நமக்குக் கிடைக்காது. நம்முடைய சூரியனுடைய தாத்தாவாகிய முதல் தலைமுறை நட்சத்திரம் உருவாக்கியதை நாம் அனுபவிக்கிறோம். முன்றாம் தலைமுறையைச் சேர்ந்த நமது சூரியன் உருவாக்கும் பொருட்கள் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கும், உயிர்களுக்குத்தான் உபயோகமாகும்.
சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, ஒரு பலூனைப் போல விரிவடைந்த இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இரண்டே இரண்டு தனிமங்கள் தான் இருந்தது. அவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்(சுமார் 75 சதவீதம் ஹைட்ரஜன், 25 சதவீதம் ஹீலியம்). வாயுக்களான இவை இரண்டுமல்லாமல் நாம் காணும் நட்சத்திரங்கள், கோள்கள் எதுவுமே, ஏன் எந்த தூசும் கூட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.
ஆச்சரியம் என்னவென்றால் அந்த இரண்டு தனிமங்கள் (வாயுக்கள்) தான் இப்போது நாம் காணும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், அதைச் சுற்றிவரும் கோள்களும், இந்த பூமியும், அதில் நாம் காணும் அனைத்துப் பொருட்களுமாக உருமாறின.
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் தோன்றிய ஹைட்ரஜன் அணுக்களின் ஈர்ப்புவிசையினால் ஏற்பட்ட பிணைப்பினால் தான் பிரபஞ்சத்தின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகின. பல கோடி வெப்பத்தைக் கொண்ட இந்த நட்சத்திரத்தின் உள்ளே, அந்த வெப்பத்தினால் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமம் புதிதாக உருவாகியது. இந்த இணைப்பில் தோன்றும் ஆற்றல் தான் ஒளியாகிறது. நட்சத்திரங்களுக்குள்ளே தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாக இந்த இணைப்பு நடந்துகொண்டே இருக்கின்றது.
நட்சத்திரதிற்குள்ளே இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஒரு ஹீலியம் அணு புதிதாக உருவாவதுபோல, கூடவே இன்னும் பல அணுச்சேர்க்கைகள் நடக்கின்றன. புதிதாக உண்டான இரண்டு ஹீலியம் அணுக்கள் இணைந்து 'பெரிலியம்' என்ற தனிமம் உண்டாகிறது. அதோடு நிற்காமல் ஒரு ஹீலியம் அணுவும் ஒரு பெரிலியம் அணுவும் சேர்ந்து உயிர்களுக்குத் தேவையான முக்கியமான தனிமம் 'கார்பன்' உருவாகிறது.
புதிதாக தோன்றிய அணுக்களின் இணைப்பு மேலும் தொடர்கிறது. இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிரின் ஆதாரமான பிராணவாயு (OXYGEN) உருவாகிறது. இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்து ஒரு 'மெக்னீசியம்' அணு உருவாகிறது. இப்படி பற்பல அணுச்சேர்க்கைகள் நடந்து ஒன்று, இரண்டு என்று தனிமங்களை வரிசைப்படுத்திய அட்டவணையில் உள்ள 26 என்ற எண் கொண்ட இரும்பு வரை நட்சத்திரங்களுக்கு உள்ளே பெருமளவில் உற்பத்தியாகிறது.
நட்சத்திரங்களுக்குள் உள்ள சுமார் 1கோடி டிகிரி வெப்பத்தில் தான் இந்த அணுச்சேர்க்கைகள் நடக்க முடிந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் புதிய தனிமங்களை உண்டாக்கும் பணியில் மனிதன் இறங்கி சில தனிமங்களை உண்டாக்கி வெற்றியும் பெற்றுள்ளான். முன்னதாக பூமியில் உள்ள தனிமங்களிலிருந்து தான் அவை உருவாக்கப்பட்டன. சிறிய அளவில் தான் இவைகளை உண்டு பண்ண முடியும். பெருமளவில் பூமியில் கிடைப்பவை நட்சத்திரங்களில் உற்பத்தியானவை.
தனிமங்களின் அட்டவணையில் இரும்பிற்கு மேல் உள்ள கடினமான தனிமங்களான தங்கம், வெள்ளி, யூரேனியம் போன்றவை உண்டாக, நட்சத்திரங்களில் உள்ள வெப்பத்தைக் காட்டிலும் லட்சம் மடங்கு வெப்பம் தேவை. அதனால் நட்சத்திரங்களுக்குள் தனிமங்கள் (இரும்பு ) உற்பத்தியுடன் கடைசியாக மூடப்பட்ட தொழிற்சாலை போல நின்று விடுகிறது... நட்சத்திரமும் இறந்து விடுகிறது ...
தங்கம் வெள்ளி யூரேனியம்.....
உற்பத்தி செய்பவர் யார்?