Feb 10, 2022

“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்"

 “சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” – (ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.)


1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன.


அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான்.


இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் .


ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன.


ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.


சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி.


முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன்.


நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.



அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்?


ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது?


யாருக்கும் தெரியாது.


ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான்.


சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.)இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம்.


கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது?


பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)


தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.


இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.


(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)

நீர்மூழ்கி கப்பல் (submarine)

 


புராணக் கதைகளின்படி ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே   போர் மூண்ட போது அசுரர்கள் அனைவரும் கடல்களுக்குள் போய் ஒளிந்து கொணடனராம். இதனால் தேவர்கள் குழப்பமடைந்தனராம். இது தப்பி ஓடி ஒளிந்து கொள்வதற்கு கடல்கள் நல்ல இடம் என்பதைக் காட்டுகிறது


 இதையே வேறு கோணத்திலிருந்து பார்ப்போம். நாம் கடல்களுக்குள் ஒளிந்தபடி  எதிரி நாட்டுக்கு அருகே சென்று எதிரி எதிர்பாராத நேரத்தில் எதிரி எதிர்பாராத திசையிலிருந்து தாக்கலாம். இதற்கான படை தான் அணுசக்தி சப்மரீன்கள். அதாவது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலகள்.


இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரின் ஜெர்மானிய சப்மரீன்கள் அட்லாண்டிக் கடலில் பிரிட்டிஷ் போர்க் கப்பல்களைத் தாக்கிப் பெரும் சேதம் விளைவித்தன. அதே போரின் போது ஜப்பான், ராட்சத சப்மரீன்களை உருவாக்கி அந்த சப்மரீன்களுக்குள் விமானங்களை வைத்து அமெரிக்காவின் மேற்குக் கரை வரை அனுப்பியது. இவையெல்லாம் அணுகுண்டுகளும் நீண்ட தொலைவு செல்லும் ஏவுகணைகளும் உருவாக்கப்பட்டதற்கு முன் நடந்தவை அப்போதைய சப்மரீன்கள் டீசலினால் இயங்கியவை.


மிதக்கும் நிலையில்

சப்மரீன்களில் டீசல் எஞ்சின்களைப் பயன்படுத்துவதில் பெரிய பிரச்சினை உண்டு. கடலில் மூழ்கியபடி அதிக தொலைவு செல்வதானால் மிக நிறைய டீசல் எண்ணெயைக் கையோடு கொண்டு சென்றாக வேண்டும். ஆகவே இவற்றினால் அதிகத் தொலைவு செல்ல இயலாது. தவிர, டீசல் எஞ்சின்கள் சத்தம் மற்றும் புகையை எழுப்புபவை. கடலுக்கு அடியில் எழும் ஒலிகளைப் பதிவு செய்ய நுட்பமான கருவிகள் உள்ளன. ஆகவே டீசலினால் இயங்கும் சப்மரீன்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.


ஆகவே மின்சார பாட்டரிகளால் இயங்கும் சப்மரீன்கள் உருவாக்கப்பட்டன. சப்மரீன் கடல் மட்டத்துக்கு வந்து மிதக்கும். அப்போது டீசல் எஞ்சின்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு பாட்டரிகள் சார்ஜ் செய்யப்படும். பின்னர் சபமரீன் நீருக்குள் மூழ்கி விடும். இதில் உள்ள பெரிய பிரச்சினை சப்மரீன் அடிக்கடி மேலே வந்தாக வேண்டும். இதன் மூலம் அந்த சப்மரீன் தான் இருக்கின்ற இடத்தைக் காட்டிக் கொள்ளும் நிலைமை உண்டு.



   இரண்டாம் உலகப் போர் முடியும் கட்டத்தில் முதல் தடவையாக அமெரிக்கா அணுகுண்டை உருவாக்கி அதை 1945 ஆம் ஆண்டில் வெடித்து சோதனை நடத்தியது.. இதைத் தொடர்ந்து சப்மரீன்களை இயக்க அணுசக்தியைப் பயன்படுத்தலாமே என்று அமெரிக்கா சிந்தித்து அவ்விதம் அணுசக்தியால் இயங்கும் சப்மரீன்களைத் தயாரிக்கலாயிற்று. சப்மரீன்களில் அணுசக்தியைப் பய்ன்படுத்துவதில் பல வசதிகள் உள்ளன.


இக்காலத்திய அமெரிக்க அணுசக்தி சப்மரீன்

சப்ம்ரீனில் இருக்கும் அணு உலையானது தொடர்ந்து 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு செயல்படக்கூடியது. ஆகவே போதுமான உணவுக் கையிருப்பு இருக்குமானால் அணுசக்தி சப்மரீன் தொடர்ந்து பல மாத காலம்  நீருக்குள் இருக்க முடியும். உலகின் கடல்களில் எந்த மூலைக்கும் செல்ல முடியும். அங்கிருந்தப்டி எதிரி நாட்டைத் தாக்க முடியும்.


அணுசக்தி சப்மரீன்கள் பொதுவில் 800 அடி ஆழம் வரை தான் செல்கின்றன.அதற்கு அதிகமான ஆழத்துக்குச் செல்வதில்லை.தங்களது அணுசக்தி சப்மரீன்கள் எந்த ஆழம் வரை செல்லக்கூடியவை என்பதை அணுசக்தி சப்மரீன் வைத்துள்ள நாடுகள் ரகசியமாக வைத்துக் கொண்டுள்ள்ன.

  

அணுசக்தியால் இயங்கும் சப்மரீன்கள் வடிவில் பெரியவை. அவற்றினுள் பல ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளைப் பொருத்தலாம்.   ஏவுகணைகளின் முகப்பில் பல அணுகுண்டுகளைப் பொருத்தலாம்.  . நீருக்குள் மூழ்கியிருந்தபடியே இந்த ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.


அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் ( ரஷியா தலைமையில் ஒன்றிணைந்திருந்த கூட்டமைப்பு) இடையே 1990 வரை கடும் விரோதப் போக்கு நிலவிய காலகட்டத்தில் இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு பல நவீன அணுசக்தி சப்மரீன்களைத் தயாரித்தன.

   

இன்னமும் சரி, அமெரிக்காவிடமும் ரஷியாவிடமும் தான் நிறைய அணுசக்தி சப்மரீனகள் உள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் உள்ள அணுசக்தி சப்மரீன்களின் எண்ணிக்கை அதிகமில்லை. சீனாவிடமும் அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. இப்போது இந்தியாவும் சொந்தமாக அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளது. உலகில் அணுசக்தி சப்மரீனைப் பெற்றுள்ள ஆறாவது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.


இந்தியா  தயாரித்துள்ள அணுசக்தி சப்மரீனின் பெயர் அரிஹந்த் என்பதாகும். ’எதிரியை நிர்மூலமாக்குபவன் ’ என்பது இதன் பொருள். இந்த சப்மரீன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் செயல் நிலையை எட்டியது. அதாவது இந்த சப்மரீனில் இடம் பெற்றுள்ள அணு உலை தொடர்ந்து செயல்பட ஆரம்பித்தது. இனி இது கடலுக்குள் இருந்தபடி பல சோதனைகளை நடத்தும். எல்லாம் முடிந்து அரிஹந்த் இந்தியக் கடற்படையில் இடம் பெற இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.


அரிஹந்துக்கான அணு உலை கல்பாக்கத்தில் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டதாகும். இது இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் நிறுவப்பட்ட அணுமின் நிலையங்களில் இடம் பெற்றுள்ள அணு உலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.




இந்தியாவின் அரிஹந்த் அணுசக்தி சப்மரீன்

இந்திய அணுமின் நிலையங்களில் இடம் பெற்றுள்ள ( தாராப்பூர் அணுமின் நிலைய முதல் யூனிட், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை நீங்கலாக்) அணு உலைகள் அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்துபவை.


இயற்கை யுரேனியத்தால் அவ்வளவாகப் பயன் இல்லை. யுரேனிய உலோகத்தில் அடங்கிய அணுக்களில் யுரேனியம்- 235 எனப்படும் அணுக்களும் உள்ளன்.  அவை  தான் முக்கியமாகத் தேவை. இந்த வகை அணுக்களே பிளவு பட்டு தொடர்ந்து ஆற்றலை அளிக்கும். வெப்பத்தை அளிக்கும். அதைக் கொண்டு  நீராவியை உண்டாக்கி மின்சாரம் தயாரிக்கலாம்.


 இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் யு-235 அணுக்கள் 0.7 சத விகித அளவுக்கே உள்ளன. மீதி அணுக்கள் யு-238 வகையைச் சேர்ந்தவை. எனினும் பெரும் செலவு பிடிக்கிற, அத்துடன் மிகவும் சிக்கலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி யுரேனியக் கட்டியில் யு-235 அணுக்களின் அளவை அதிகரிக்கலாம். இதை செறிவேற்றுதல் (enrichment) என்று கூறுவார்கள்.


 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் யு-235 அணுக்களின் அளவு அதாவது செறிவேற்றப்பட்ட யுரேனியம் சுமார் 4.5 சதவிகித அளவுக்கு உள்ளது. ஆனால் அணுசக்தி சப்மரீனில் இடம் பெறுகிற அணு உலையில் யு-235 அளவு குறைந்தது 25 சதவிகித அளவுக்கு இருந்தாக வேண்டும். அரிஹந்த் சப்மரீனில் இத்தகைய அணு உலை இடம் பெற்றுள்ளது. இது கல்பாக்கத்தில் கட்டப்பட்டதாகும்.


 இந்த அளவுக்கு செறிவேற்றப்பட்ட யுரேனியத்தைப்  பயன்படுத்தும் அணு உலை இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். செறிவேற்றப்பட்ட யுரேனியத்தைத் தயாரிபபதில் இந்தியா காலம் தாழ்ந்து ஈடுபட்டது என்பதைக் கவனிக்கும் போது இது பெரிய சாதனையே.


  சப்மரீனுக்காக அணு உலையைத் தயாரிப்பது சிக்கலானது. அது நிறைய இடத்தை அடைத்துக்கு கொள்ளக்கூடாது. வடிவில் சிறியதாக இருக்க வேண்டும். தவிர, சபமரீன் நீருக்குள் செல்லும் போது மேலும் கீழுமாக அசையும். சில சமயம் திடீரென வேகம் அதிகரிக்கும். ஆகவே சப்மரீனில் இடம் பெறுகின்ற அணு உலையானது எல்லாவித ஆட்டங்களுக்கும் அசைவுகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டும்.


இது ஒரு புறம் இருக்க, சப்மரீன் என்பது விசேஷ கலப்பு உருக்கினால் தயாரிக்கப்படுவதாகும். அமெரிக்கா ஒரு கால கட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விதித்த தடை காரணமாக எந்த நாடும் இப்படியான விசேஷ உருக்கை இந்தியாவுக்கு விற்க முன் வரவில்லை. இந்திய நிபுணர்கள் பெரும் பாடுபட்டு இவ்வித விசேஷ கலப்பு உருக்கைத் தயாரிப்பதில் வெற்றி க்ண்டனர். அதைத் தொடர்ந்தே அரிஹந்த் சப்மரீனை உருவாக்குவது சாத்தியமாகியது.


அரிஹந்துக்கான அணு உலையை கல்பாக்கத்தில் வைத்து பல பரிசோதனைகளுக்கு ஈடுபடுத்தி அதன் செயல்பாடு குறித்து நிபுணர்கள் திருப்தி அடைந்த பிறகே அது விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்த அரிஹந்த் சப்மரீனில் இடம் பெற்றது.


அணு உலை என்பது கதிரியக்கத்தைத் தோற்றுவிப்பதாகும். அந்த கதிரியக்கம் சப்மரீனில் பணியாற்றும் மாலுமிகளைப் பாதிக்காதபடி விசேஷ ஏற்பாடுகள் உள்ளன. சில கார்களில் எஞ்சின் பின்புறம் அமைந்திருக்கும். அது போல அரிஹந்தின் பின்புறத்தில் தான் அணு உலை இடம் பெற்றுள்ளது. அதை அடுத்து ஏவுகணைகள் இடம் பெறுகின்றன. சப்மரீனில் செங்குத்தாக அமைந்த நீண்ட குழல்களில் இந்த ஏவுகணைகள் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும். ஏவுகணைகள் சுமார் மூன்று மாடி உயரம் கொண்டவை. இவற்றின் முகப்பில் அணுகுண்டுகள் இடம் பெற்றிருக்கும். அரிஹந்த் மூழ்கிய நிலையில் இருந்தாலும் ஏவுகணைகளை எதிரி இலக்கை நோக்கிச் செலுத்த முடியும்.


 ஆரம்ப கட்டத்தில் அரிஹந்த் சப்மரீனில் சில நூறு கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். பின்னர் 3500 கிலோ மீட்டரில் உள்ள எதிரி இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட  அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறும். விசாகப்பட்டினத்தில் அரிஹந்த் மாதிரியில் மேலும் மூன்று அணுசக்தி சப்மரீன்களைக் கட்டும் வேலை ஏற்கெனவே ந்டந்து வருகிறது.


இந்தியா 1998 ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டுகளை வெடித்து சோதனை நடத்திய போதே அது அணு ஆயுத வல்லரசு என்ற அந்தஸ்தைப் பெற்றதாகியது. ஆனால் ஒரு நாடு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைப் பெற்றால் மட்டும் போதாது.


அணுகுண்டுகளை நிலத்திலிருந்து (ஏவுகணைகள் மூலம்)  வான வழியாக (விமானங்கள் மூலம்), கடல் மார்க்கமாக (அணுசக்தி சப்மரீன்கள் மூலம்)  என   மூன்று வழிகளிலும் எதிரி நாட்டை நோக்கிச் செலுத்தும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். இது அணு ஆயுத முத்திறன் (Nuclear Triad)  எனப்படும்.


 இப்போதுள்ள அளவில் அமெரிக்காவும் ரஷியாவும் இத்திறனைப் பெற்றுள்ளன. சீனாவுக்கும் இத்திறன் உண்டு. அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளதன் மூலம் இந்தியாவும் இத்திறனைப் பெற்று விட்டது. அணுகுண்டுகளைச் செலுத்துவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டத்தை பிரான்ஸும் பிரிட்டனும் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு விட்டன. ஆகவே இந்த இரு நாடுகளுக்கும் அணு ஆயுத முத்திறன் கிடையாது. பாகிஸ்தானுக்கும் கிடையாது.


சீனாவும் சரி, பாகிஸ்தானும் சரி, இந்தியாவிடம் நட்புறவு காட்டுவதாகச் சொல்ல முடியாது. பாகிஸ்தான் நான்கு முறை இந்தியா மீது ஆக்கிரமிப்பு நடத்திய நாடு. சீனா ஒரு தடவை தாக்கியுள்ளது. இந்த இரண்டுமே அணுகுண்டுகளை வைத்துள்ளவை. இப்படியான சூழ் நிலையில் தான் செலவைப் பாராமல் இந்தியா அணு ஆயுத முத்திறனைப் பெறுவதில் முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளது

நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன?




அண்டைவெளியில் நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள இடத்தில் ஒன்றுமில்லை என்று தோன்றலாம். உண்மையில் அப்படியில்லை. நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையிலுள்ள காலியிடங்களில் வாயு, தூசு போன்ற பொருட்களும் மண்டிக் கிடக்கின்றன. இதனைத் தூசு முகில் என்று குறிப்பிடலாம். 


இவ்விதத் தூசு முகிலிலிருந்துதான் நட்சத்திரம் பிறக்கிறது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இத்தூசு முகில் இப்பொருட்களின் இடையிலான ஈர்ப்புச் சக்தி காரணமாகச் சுருங்க ஆரம்பிக்கிறது. தூசு முகிலில் அடங்கிய பொருட்கள் மையத்தை நோக்கித் திரள ஆரம்பிக்கின்றன. அப்படி ஏற்படும் போது அத்திரளில் வெப்பம் அதிகரிக்கிறது. அக்குறிப்பிட்ட கட்டத்தில் வெப்பம் சுமார் 10 மில்லியன் டிகிரி செண்டிகிரேட்டை எட்டுகிறது. 


ஆரம்பத் தூசு முகிலில் அடங்கிய வாயுவில் பெரும் பகுதி ஹைட்ரஜனே. எனவே, இம்மிகுந்த வெப்பத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் அணுச்சேர்க்கை (Nuculear Fusion) மூலம் ஹீலியமாக மாறுகின்றன. அப்போது பிரம்மாண்டமான சக்தியும் ஒளியும் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. இவ்விதமாக நட்சத்திரம் தோன்றுகிறது. 


சூரியனில் அணுச்சேர்க்கை மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுவதன் விளைவாகத்தான் சூரியனிடமிருந்து நாம் வெப்பத்தயும் ஒளியையும் பெறுகிறோம்.


ஒரு நட்சத்திரத்தில் முதலில் ஹைட்ரஜன் ஹீலியமாகிறது. ஹைட்ரஜன் அனைத்தும் தீர்ந்த பிறகு அந்த நட்சத்திரம் உள் ஒடுங்கி, கொஞ்சம் கொஞ்சமாக உட்தளர்ந்து அதன் பரிமாணமும் ஒடுங்கிப் போகும். அதனால் உட்புற அழுத்தம் அதிகரிக்கும். அழுத்தம் அதிகரிப்பதால் வெப்பம் உயரும். பிரகாசம் அதிகரிக்கும். அக்கட்டத்தில் ஹீலியம் அணுக்கள் வேறு அணுக்களாக மாறும். அதன் வாயிலாக நட்சத்திரம் சக்தியையும் வெப்பத்தயும் பெறும்.


இப்படி நடந்து வருகையில் நட்சத்திரம் தன் நடுத்தர வயதைத் தாண்டி முதுமையை நெருங்கும். பின் மடியும். இவ்வாறு மடிகின்ற நட்சத்திரங்கள் "குள்ள"(Dwarf) நட்சத்திரங்களாக அல்லது நியூட்ரான் (Neutron), பல்சார் (Pulsars), கருப்பு ஓட்டை நட்சத்திரம் (Black Holes Stars) என இவைகளில் ஒன்றாக மாறும். 


கிட்டத்தட்ட சூரியனின் அளவுள்ள நட்சத்திரம் இறுதியில் "வெள்ளைக் குள்ளன்" (White Dwarf) நட்சத்திரமாகி விடும். சூரியனை விட பெரிதாக உள்ள, ஆனால் சூரியனை விட இரு மடங்கு பரிமாணத்திற்கு மேல் இராத நட்சத்திரங்கள் நியூட்ரான் அல்லது பல்சார் நட்சத்திரங்களாக மாறும். சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் கருப்பு ஓட்டைகளாக மாறும். 


சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தில் உள்ள பொருட்கள் அணுச் சேர்க்கை மூலம் மேலும் மேலும் எரிந்து பொருட்கள் குறையும் போது அது உள் ஒடுங்குகிறது. அதாவது அதன் பரிமாணம் குறைகிறாது. வெள்ளைக் குள்ளன் நட்சத்திரம் ஒன்றின் பரிமாணம் பூமியின் அளவே இருக்கலாம். ஆனால் அந்நட்சத்திரம் அடர்த்தி அதிகமுடையதாயிருக்கும். ஒரு ஸ்பூன் பொருளின் எடை ஒரு டன் அளவில் இருக்கும். 


வெள்ளைக் குள்ளன் நட்சத்திரம் பொதுவில் அதிகப் பிரகாசம் கொண்டது. அதன் மேற்புற வெப்பம் மிக அதிகமாயிருக்கும் வெள்ளைக்குள்ளன் அதே வடிவில் பல லட்சம் ஆண்டுகள் நீடிக்கும். இறுதியில் அது வெப்பத்தை இழந்து அவிந்து போய் விடும். அதன் பின் அதில் சாம்பல்தான் மிஞ்சி நிற்கும். ஒளியற்ற அது கருப்புக் குள்ளனாக (Black Dwarf) தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும். 


நியூட்ரான் நட்சத்திரங்கள் அனேகமாக முற்றிலும் நியூட்ரான்களைக் கொண்டதாகும். இந் நட்சத்திரத்தின் ஒரு ஸ்பூன் பொருள் பல கோடி டன் எடையுள்ளதாயிருக்கும். இதன் ஈர்ப்புச் சக்தி பூமிக்குள்ள ஈர்ப்புச்சக்தியை விடப் பல நூறு கோடி மடங்கிற்கு இருக்கும். நமது அண்டத்திலிலுள்ள கோடான கோடி நட்சத்திரங்களில் நியூட்ரான் நட்சத்திரங்கள் சுமார் 10 லட்சம் உள்ளதாய் மதிப்பிடப்பட்டுள்ளது. 


இறுதியில் கறுப்பு ஓட்டைகளாக மடியும் நட்சத்திரங்கள் உண்மையில் ஓட்டைகளல்ல. அவை மிக மிக அடர்த்தி கொண்டவை. மிகவும் ஒடுங்கியவை. சூரியனை விட மிகப் பெரிய நட்சத்திரங்கள் கறுப்பு ஓட்டைகளாக முடிகின்றன. இவற்றின் ஈர்ப்புச் சக்தியும் மிக அதிகம். இந் நட்சத்திரத்திலிருந்து ஒளி கூட வெளியே போக முடியாத அளவுக்கு இவ்வித நட்சத்திரம் ஈர்ப்புச் சக்தி கொண்டது. 


நட்சத்திரங்களிலேயே இவைதான் மிகச் சிறியவை. மிக அடர்த்தி கொண்டவை. இந் நட்சத்திரம் தனது பயங்கர ஈர்ப்புச் சக்தியால் அருகிலிருக்கக் கூடிய நட்சத்திரத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு அதனை விழுங்க ஆரம்பித்து விடும். சுற்றிலும் உள்ள பொருட்கள் ஓட்டையில் விழுவது போல அதில் விழுவதால் "ஓட்டை" எனப் பெயர் ஏற்பட்டது. 


சூரியன் ஒரு கறுப்பு ஓட்டையாக இருந்தால் அதன் குறுக்களவு இரண்டு மைல்கள்தானிருக்கும். 


சூரியன் ஒரு ஒற்றை நட்சத்திரம் ஆகும். மொத்தமுள்ள நட்சத்திரங்களில் 25 சதவிகிதம் ஒற்றை நட்சத்திரங்கள், 33 சதவிகிதம் இரட்டை நட்சத்திரங்கள் ஆகும். மீதி நட்சத்திரங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட குழுவைக் கொண்டிருக்கும். 


நட்சத்திரங்களின் நிறங்களை வைத்துத்தான் அவற்றை ஓ, ஏ, பி, எப், ஜி, கே, எம் என வகை பிரித்துள்ளனர். ஒரு நட்சத்திரத்தின் நிறத்துக்கும் அதன் மேற்புறமுள்ள வெப்பத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை வைத்து இவ்வகைகள் பிரிக்கப்படுகிறது. நட்சத்திரத்தின் அதாவது ஓ ரக நட்சத்திரத்தின் மேற்புற வெப்பம் மிக அதிகம். அதாவது 63 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட். பி ரகத்தின் வெப்பம் அதை விடச் சற்றுக் குறைவு. இப்படிப் படிப்படியாகக் குறைகிறது. மேலே கூறிய வரிசையில் எம் ரக நட்சத்திரத்தின் மேற்புற வெப்பம் சுமார் 6 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட். 


ஓ முதல் எம் வரையிலுள்ள நட்சத்திரங்கள் பிரதான வரிசையை (Main Sequence) சேர்ந்த வகையாகக் குறிப்பிடப்படுகிறது.


சூரியன் ஜி வகையைச் சேர்ந்த நட்சத்திரமாகும். சூரியன் மஞ்சள் நிறமுடையது. மேற்படி பட்டியலில் அடங்காமல் விதிவிலக்காக இருக்கிற நட்சத்திர வகைகலும் உள்ளன. 


"செம்பூத நட்சத்திரங்கள்" (Red Giants) இவ்வகையைச் சேர்ந்தவை. செம்பூத நட்சத்திரங்கள் அவற்றின் பெய்ருக்கேற்றாற் போல் சிகப்பு நிறம் கொண்டவை. வடிவத்திலும் மிகப் பிரம்மாணடமானவை. "பிடால்ஜீஸ்" (Betalgeuse) என்னும் நட்சத்திரம் ஒரு செம்பூத நட்சத்திரமாகும். 


"வெள்ளைக் குள்ளன்" (White Dwarf) நட்சத்திரங்களும் பிரதான வரிசையில் அடங்காதவை. பரிமாணத்தில் சுருங்கிப் போன இவை வெண்மை ஒளியை விடுகிறது.


"மங்கிப் பொங்கும் நட்சத்திரம்" என ஒரு வகை நட்சத்திரம் (Variable Stars) உள்ளது. இவைகளில் குறிப்பிடத்தக்கது இவ்வகையினைச் சேர்ந்த டெல்டா செஃபை (Delta Cephei) எனும் நட்சத்திரம். இவ்வகை நட்சத்திரம் செஃபைடஸ் என்றும் கூறப்படுகின்றன.


நோவா(Novae) வகை நட்சத்திரங்களின் ஒளி சில நாள் இடைவெளியில் மிகவும் அதிகரித்துப் பிறகு மங்குகிறது. இவைகளில் சூப்பர் நோவா நட்சத்திரங்களின் ஒளி பல மடங்கு அதிகமாய் மங்குகிறது. ஒரு நட்சத்திரம் வெடிக்கும் போது சூப்பர் நோவா காணப்படுகிறது. கி.பி.1054, 1572, 1604 ஆண்டுகளில் இந்த சூப்பர் நோவா நட்சத்திரங்கள் தெரிந்தன. 


பல்சார் வகை நட்சத்திரங்கள் சக்தி மிக்க ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. மிகப் பெரிய பல்சாரின் அளவு (குறுக்காக) 12 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமில்லை. மிகச் சிறிய பல்சாரின் குறுக்களவு 1200 கிலோ மீட்டர்.

குவாசார்கள் (Quasars) எனும் நட்சத்திரம் அல்ட்ரா வயலட் வரிசையிலும், ரேடியோ அலை வரிசையிலும் சக்தியை வெளிப்படுத்துகிறது. Quassi-Stellar Radio Sources எனும் நீண்ட ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமே குவாசர். இதுவரை 350 குவாசர்களிருப்பதாகத்தான் தெரிகிறது. குவாசரிலிருந்து கிளம்பும் ஒளி பூமியை வந்தடைய சுமார் 200 கோடி ஆண்டுகளாகும்.

Feb 7, 2022

பிரபஞ்சத்தின் விளிம்பை நோக்கிய பயணம்

 


நாம் ஒவ்வொரு முறை வானை நோக்கும் போதும், நமது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா, எப்படி இயங்குகிறது என்ற கேள்விகளுடன் வியப்புடனே நோக்குகிறோம். இக்கேள்விகளுக்கு விடைதர முயற்சிக்கிறது, நேசனல் ஜியாக்ரபியின் “பிரபஞ்சத்தின் விளிம்பை நோக்கிய பயணம்” என்ற ஆவணப்படம்.


ஒளியை விட அதிகமான வேகத்தில் செல்லும் இப்பயணம் கற்பனை தான் எனினும் அறிவியலில் இது வரை அறியப்பட்ட உண்மைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், சோதனைகளால் உறுதி செய்யப்பட்ட விதிகளினடிப்படையில், ஹப்பிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படங்களுடன், கணினியின் வரைகலை தொழில்நுட்பமும் கைகோர்த்ததில் இப்பயணம் சாத்தியமாகியிருக்கிறது.


இப்பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது. நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பல பத்தாண்டுகளாக அழியாதிருக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தடங்களை கடந்து பாய்ச்சலில் செல்லும் பயணம் 4.2 கோடி கிலோமீட்டர்களில் பண்டைய கிரேக்கர்களின் காதல் தேவதையான வீனஸை (வெள்ளி ) அடைகிறது. தினமும் நமது நாட்களை காலை வரவேற்று, மாலையில் விடை கொடுக்கும் வெள்ளி கோளானது மனிதர்கள் வாழ தகுதியற்றதாக, வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு மிகுந்ததாக, அதாவது சீற்றம் மிகுந்ததாக காணப்படுகிறது. அதைக் கடந்தால் 9.1 கோடி கிலோமீட்டர்களில் முற்றிலும் இரும்பினாலான சிறிய கோளான புதனையும் (மெர்க்குரி) அதை சுற்றி வந்து கொண்டிருக்கும் மெசஞ்சர் (messenger) விண்கலத்தையும் நாம் காண்கிறோம்.


பின்னர் பயணத்தில் 15 கோடி கிலோமீட்டர்களில் நமது நட்சத்திரமான சூரியனை அடைகிறோம். சூரியன் நமது புவியைப் போலவோ மற்ற கோள்களைப் போலவோ திடநிலையில் இல்லை. அது ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் மைய ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து பதிமூன்று லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடுமளவு பெரிதாக பிரமாண்டமான பந்தாக இருக்கிறது. ஈர்ப்புவிசை கொடுக்கும் அழுத்தம் காரணமாக மையக்கருவில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு மிக அதிக அழுத்தமும் அதனால் அதிக வெப்பமும் அடைவதால் அங்கு பூமியிலிருக்கும் மொத்த அணு உலைகளையும், அணு ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் வெடிக்க செய்வதை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான ஆற்றலுடன் அணுக்கரு பிணைப்பு நடைபெறுகிறது. அணு வினை ஒளியையும் வெப்ப ஆற்றலையும்  வெளியிடுவதுடன் வாயுக்களை வெளிநோக்கித் தள்ளுகிறது. அதே வேளை மைய ஈர்ப்புவிசை வாயுக்களை உள்ளிழுக்கிறது. இவ்விரு எதிர் விசைகளின் சமநிலையில் சூரியன் மாபெரும் எரியும் வாயுக்கோளமாக இருக்கிறது. இந்த கணத்தில் சூரியன் தனது இயக்கத்‌தை நிறுத்திக்கொண்டால் அதை நாம் அறிய 8 நிமிடங்கள் ஆகும்.


மையக்கருவின் வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியசும், மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 5,700 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் இந்நட்சத்திரம் புவியில் உயிர்களின், ஆற்றலின், ஒளியின் மூலாதாரமாக இருக்கிற அதே வேளை நமது பூமியிலிருக்கும் அனைத்து உயிர்களையும் அழித்துவிடுமளவு அதிக ஆற்றலுள்ள, அயனியாக்கப்பட்ட வாயுக்கள்(பிளாஸ்மா) அடங்கிய மிகப்பரந்த சூரியக்கதிர் அலைகளை வெளியிடுகிறது. ஆனால் நமது பூமியின் காந்தப்புலம் நம்மை இப்பேரழிவிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகிறது.


அடுத்து நாம் ஒரு வால் நட்சத்திரத்தை பார்க்கிறோம். வால் நட்சத்திரங்கள், உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசியை உள்ளடக்கிய அண்ட பனிக்கட்டிகளாகும். இவற்றில்உயிர் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை இல்லையெனினும், இவை தன்னகத்தே நம் பூமியில் உயிர்கள் உருவாவதற்கு அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் பூமியில் மோதி அங்கு தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை விட்டு சென்ற நிகழ்வு இங்கு உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கலாம். அதே போல முன்னர் பூமியில் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தான் டைனோசர் இனமே அழிந்து போனது. அவ்வகையில் இவை படைக்கும் சக்தியாகவும், மீப்பெரும் அழிவு சக்தியாகவும் இருக்கின்றன.


இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நிகழ்ச்சிப் போக்குக்குள்ளும் இடையறாமல் நடக்கும் எதிர்மறைகளின் போராட்டம், ஒற்றுமையால் தான் இப்பிரபஞ்சம் முழுவதுமே இயங்குகிறது. சூரியக் குடும்பத்தின் மையமான சூரியனிலிருந்து திரும்பி பயணித்தால் 22.7 கோடி கிலோ மீட்டர்களில், (அதாவது பூமியிலிருந்து சுமார் 7.5 கோடி கிலோமீட்டர்கள்) நாம் பார்க்கும் செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.


செவ்வாயை கடந்து சென்றால் எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம். இவற்றில் சில நூற்றுகணக்கான மைல்கள் நீள-அகலம் கொண்டவையாகும். சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதிரியான விண்கற்கள் ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து தான் பூமியை, நிலவை போல் கோள்களாகியிருக்கக் கூடும். எனில் இப்போது இவை தமக்கிடையிலான ஈர்ப்பு விசையால் ஒன்றிணையாமல் தடுத்து வைத்திருப்பது எது?


அது நமது சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளும் சூரியனிலிருந்து 77.8 கோடி கிலோமீட்டர் தொலைவிலிருப்பதுமான வியாழனாகும். இதில் 1,321 பூமிகளை உள்ளடக்கி விடலாம். பூமியின் அளவை விட மூன்று மடங்கும் பல நூற்றாண்டுகளாக நீடித்திருப்பதுமான செம்புயலில் ஏற்படும் இடி-மின்னல்கள் நம் பூமியில் ஏற்படுவதை விட 10,000 மடங்கிற்கும், அதிக சக்தியுடையதாகும். சற்று திரும்பினால் வியாழனின் நிலவுகளை- அதில் பனிபடர்ந்த யுரோபாவையும் – நாம் காண்கிறோம்.


அங்கிருந்து பாய்ச்சலில் முன்னேறினால் 142 கோடி கிலோமீட்டர்களில் சனிக்கோளை அடைந்து அதன் அற்புதமான வளையங்களை அவை எப்படி உருவாகின என நாம் வியந்து கொண்டிருக்கும் போது சனியின் துணைக்கோளான (நிலவான) டைட்டனை நோக்கி நம் பார்வை தொடர்கிறது. டைட்டனில் நமது புவியிலுள்ள பருவநிலை போலவே மழை, மின்னல் ஏற்படுவதுடன் நமக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தேவைப்படும் பெட்ரோலியம், மீத்தேன் படலம் இருக்கிறது.


அதன் பின் 287 கோடி கிலோமீட்டர்களில் நமது சூரியக் குடும்பத்திலேயே அதிகமான அச்சு சாய்வுடன் இருக்கும் பெரிய வாயுக் கோளமான யுரேனசை கடந்து செல்கிறோம். தொடர்ச்சியாக யுரேனசைப் போலவே இருக்கும் நெப்டியூனையும் அதன் நிலவான டிரைட்டனையும் கடக்கிறோம். பின்னர் 590 கோடி கிலோமீட்டர்களில் தொலைதூர பனிக்கோள் (இப்போது கோள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது) புளூட்டோவைக் காண்கிறோம். இது சூரியனை சுற்றிவர 248 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. நமது சூரியக் குடும்பம் இத்துடன் முடிந்து விட்டதா? இன்னும் நமது சூரியனை சுற்றிவரும் கோள்கள், விண்கற்கள் இருக்கின்றனவா?


இப்போது நாம் 1977-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட வோயேஜர் விண்கலத்தை காண்கிறோம். இது தற்போது சூரியக் குடும்பத்தை தாண்டி நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியில் தனது பயணத்தை தொடர்கிறது.


அதையடுத்து தொலை தூர சிறு கோள் ஒன்று சூரியனை சுற்றுகிறது. சேத்னா (sedna) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனிலிருந்து சுமார் 930 கோடி மைல்கள் தொலைவில் இருப்பதுடன் சுற்றிவர 10,000 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்கிறது.


நமது சூரியன் எப்படி தோன்றியது, இப்படியே நீடித்திருக்குமா? அழிந்தால் அதன் பின் என்னவாகும், நமது பூமியின் நிலை என்னவாகும், என்பவற்றை அறிய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.


இப்போது நம் குடும்பத்திலிருக்கும் அனைத்து கோள்களையும் சந்தித்து விடை பெற்றுக்கொண்டு, நமது வீட்டிலிருந்து வெளியில் காலடி எடுத்து வைக்கிறோம். தொடரும் நமது பயணம் நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியை அடைகிறது. இங்கு நமது சூரியனைப் போல கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன. இவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?


இப்பிரபஞ்சம் எல்லையில்லா சாத்தியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.


அடுத்து சுமார் 45 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் (4.5 ஒளிஆண்டுகள்) தொலைவில் இருக்கும் நமது அண்டை நட்சத்திர மண்டலமான ஆல்பா சென்சூரி என்ற நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இது மூன்று விண்மீன்கள் அடங்கிய அமைப்பாகும். மூன்று நட்சத்திரங்களும் ஈர்ப்புவிசையால் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன.


இந்த தொலைவுக்குபின் நீளத்தின் அளவைகளான கிலோமீட்டரும், மைல்களும் மீச்சிறு அளவாகி பொருளற்றதாகி விடுகிறது. இதன்பின் தொலைவை அளக்க ஒளிஆண்டு என்ற வேறு அளவை பயன்படுத்தவேண்டும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் ஒளி, ஓராண்டில் கடக்கும் 9.46 லட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவே ஒரு ஒளியாண்டு எனப்படுகிறது.


நமது பயணம் 10.5 ஒளிஆண்டுகளை அடையும் போது எப்சிலோன் எரிடனி என்ற இளம் நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இந்நட்சத்திரத்தின் தூசியும், பனியும் கலந்த பிரமிக்கத்தக்க வளையங்களில் கோள்கள் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற செயல்முறையால்தான் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நமது சூரியக் குடும்பம் உருவானது. மேலும் பயணிக்கும் போது 20.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது சூரியனை ஒத்த வயதுடைய கிலீஸ்-581 (Gliese581) என்ற நட்சத்திரத்தை காண்கிறோம். இந்த நட்சத்திர மண்டலத்தில் ஏறக்குறைய நமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலான அதே தூரத்தில் ஒரு கோள் இருக்கக் காண்கிறோம். இக்கோள் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகளை பெற்றிருக்கலாம், இங்கு உயிரினங்களும் இருக்கலாம். அவை தமது தொலைக்காட்சிகளை இயக்கி நாம் பூமியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை இப்போது இங்கு பார்த்துக் கொண்டிருக்கலாம்.


நாம் இதுவரை பார்த்ததிலேயே அதிக பிரகாசமான வானில் மிகப்பிரகாசமான  விண்மீன்களில் 9-ம் இடத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தை (betelgeuse star) பார்க்கிறோம். ஆனால் இது நட்சத்திரம் அல்ல, நட்சத்திரத்தின் அடுத்த நிலை, இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red SuperGiant) எனப்படுகிறது. இது நமது சூரியனை விட 600 மடங்கு பெரியது. இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் இவ்விண்மீன் வெடித்து சிதறிவிடும்.


1344 ஒளியாண்டுகள் தொலைவில் நாம் ஒரு விண்மீன் தொழிற்சாலையை காண்கிறோம். ஓரியன் இருண்ட மேகத்திரள், அதன் ஆழத்தினுள் ஒரு ஒளித்துளி அதைச் சுற்றியுள்ள வாயுக்களை உள்ளிழுத்து அழுத்தி வெப்பமடைய செய்கிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் அணுவினையை தூண்டுவதற்கு போதுமானதாக இருக்கிறது. ஒரு நட்சத்திரம் பிரசவிக்கிறது. ஓரியன் நெபுலா – இங்குதான் நமது சூரியனைப் போல் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உருவாகி கொண்டிருக்கின்றன- பிறக்கின்றன. இப்போது ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம். பிரபஞ்சத்தின் மூலப் பொருட்களான ஹைட்ரஜனும், ஹீலியமும் பச்சை, ஊதா நிறங்களிலும், உயிர்கள் தோன்ற, உயிர் வாழ அடிப்படையான ஆக்சிஜனும், நைட்ரஜனும் சிவப்பு, நீல நிறங்களில் காட்சியளிக்கின்றன. கோள்களும், அவற்றில் உயிரினங்களும் தோன்ற விண்மீன்கள் தமது நிலையை மறுத்து வெடித்து சிதற வேண்டும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை. அந்தவகையில் நம்முடைய குடும்ப கிளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. விண்மீன்கள் தான் நம்முடைய மூதாதையர்.


இந்நிற முகிழ்களின் நடுவில்-வெள்ளை குள்ளன் (White Dwarf) ஒருவன் இருக்கிறான். இதில் ஒரு தேக்கரண்டி அளவு நமது பூமியில் ஒரு டன் எடை இருக்குமளவு அடர்த்தி மிகுந்ததாகும்.


சூரியனைப் போலுள்ள நட்சத்திரங்களில் மையக்கருவில் உள்ள எரிபொருளான ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டு தீர்ந்த பின் மேல் அடுக்கில் உள்ள ஹைட்ரஜனில் அணுப் பிணைப்பு வினை நடைபெறத் துவங்கும். இப்போது அது அளவில் 100 மடங்குக்கும் மேல் விரிவடைந்து அது தனது நட்சத்திர நிலையிலிருந்து மாறி சிவப்பு அசுரன் நிலைக்கு செல்கிறது. எரிபொருளின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் விண்மீனின் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றிலிருந்து சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் நமது சூரியன் தற்போது இருக்கும் அளவை விட 100 மடங்கு பெரிதாகி பூமியை விழுங்கி செவ்வசுரன் நிலையை அடையும். அப்போது வியாழனின் நிலவு அல்லது சனிக்கோளின் நிலவு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை வந்தடையக் கூடும். நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரஜனும் தீர்ந்து மொத்தமும் ஹீலியமான பின் ஹீலியம் அணுக்கரு பிணைப்பிற்கு உள்ளாகி கார்பனாக மாறத்துவங்கும். காலப்போக்கில் எல்லா ஹீலியம்  எரி பொருளும் தீர்ந்த பின்னர் படிப்படியாக குளிர ஆரம்பிக்கும் போது செவ்வசுரன் நிலையை மறுத்து வெள்ளைக் குள்ளன் நிலையைப் பெறுகிறது. சூரியனை ஒத்த மற்றும் அதைவிட குறைவான நிறையுள்ள விண்மீன்கள் இந்நிலையைப் பெறுகின்றன. இன்றிலிருந்து சுமார் 600 கோடி ஆண்டுகளுக்கு பின் நமது சூரியனும் வெள்ளைக் குள்ளன் நிலையை வந்தடையும். அப்போது சூரியக் குடும்பத்தின் கோள்கள் அனைத்தையும் சூரியன் விழுங்கியிருக்கும்.


சூரியனை விட  மூன்றிலிருந்து ஐந்து மடங்கு நிறையுள்ள விண்மீன்களில் ஹீலியம் எரிபொருளும் தீர்ந்து கார்பன் ஆன பின் மேலும் அணுப்பிணைப்பு நடக்க அதன் நிறையும் – ஈர்ப்பு விசையும் போதுமானதாக இருப்பதால் தொடர்ந்து அணுப்பிணைப்பு நடந்து அதிக நிறையுள்ள தனிமங்கள் உருவாகின்றன. இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red Super Giant) எனப்படுகிறது. நாம் சற்று முன்பு பார்த்த திருவாதிரை நட்சத்திரம் பெரும் சிவப்பு அசுரன் நிலையில் தானிருக்கிறது.


இச்செயல் முறையால் தொடர்ந்து நிறை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஒரு கட்டத்தில் ஈர்ப்பு விசை அதிகரிக்கிறது. அதனால் அது தன் சொந்த எடையை தாங்க முடியாமல் வெடித்து சிதறும். இது சூப்பர் நோவா எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் முழுவதுமே இதைப்போல் ஒரு சூப்பர் நோவா வெடித்து சிதறி வெளியிட்ட வாயுக்கள், துகள்களிலிருந்து தான் தோன்றியது.


வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் மையக் கருவில் உள்ள அணுத் துகள்கள் ஒன்றிணைந்து அடர்த்தியான நியூட்ரான்களாகின்றன. இது நியூட்ரான் நட்சத்திரம் எனப்படுகிறது. இதில் இருக்கும் துகள்களின் அடர்த்தி மிக மிக அதிகம். இதில் ஒரு தேக்கரண்டி, நமது பூமியில் ஒரு லட்சம் டன் எடையிருக்கும். இங்கு நாம் பல்சார் (Pulsar) என்ற ஒரு வகை நியூட்ரான் நட்சத்திரத்தை பார்க்கிறோம். இது நமது பூமியின் காந்தப்புலத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமான காந்தப்புலத்தையும், ரேடியோ மின்காந்த அலைகளையும் வெளியிடுகிறது. விண்மீன்களின் அளவில் இருக்கும் வேறுபாடும் அதன் அடுத்த நிலைப் பண்பை தீர்மானிக்கிறது. நட்சத்திரம் சூரியனை விட ஐந்து மடங்கிற்கு அதிக நிறையுடன் இருக்கும் பட்சத்தில் இந்நியூட்ரான் நட்சத்திரங்களின் அளவும் நிறையும் அதிகமாக இருக்கும் அதனால் அதன் மையம் மேலும் மேலும் சுருங்குகிறது. அதன் அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் மிக மிக அதிகரித்து வேறு நிலையை அடைகிறது. இந்நிலை கருந்துளை (Black Hole) எனப்படுகிறது.


இவ்வாறு விண்மீன்களில் அளவில் இருக்கும் வேறுபாடும், அவற்றின் அடுத்த நிலைப் பண்பையும் நிகழ்ச்சிப் போக்கையும் தீர்மானிக்கிறது.


இப்பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களுமே ஒளியை பிரதிபலிக்கின்றன. அப்பிரதிபலிப்பையே நாம் கண்ணால் காண்கிறோம். இக்கருந்துளையின் ஈர்ப்புவிசை ஒளியின் துகளையும் வெளியிடாமல் ஈர்த்து விடுமென்பதால், இதைக் காண இயலாது. இதன் ஈர்ப்பிலிருந்து விண்மீன்கள் உட்பட எதுவும் தப்பிச்செல்ல முடியாது. இதில் ஒரு குண்டுமணியளவு பூமியில் ஒரு கோடி டன் எடையிருக்கும்.


நாம் இப்போது நமது விண்மீன் திரளான பால்வெளியைப் பார்க்கிறோம். இதன் நடுவில் மிகப் பிரமாண்டமான மீப்பெரும் கருந்துளை இருக்கிறது. அதை சுற்றி தான் நம் சூரியன் உள்ளிட்ட எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், பல சிறு கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும், பிறவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  பால்வெளியில் 1000-லிருந்து 4000 விண்மீன்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.


நாம் இப்போது 25 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் நாம் நமது அண்டை விண்மீந்திரளான அன்ட்ரோமெடாவை (Andromeda) காண்கிறோம். இங்கிருந்து பூமியை பார்த்தால் குரங்கிலிருந்து பரிணமித்த நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதை காண முடியும். இப்போது இரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்டு அளப்பரிய ஆற்றலை வெளியிடுகிண்றன. விண்மீன் திரள்கள் அழிகின்றன. ஆனால் அதன் இயக்கம் நின்றுவிடுவதில்லை. புதிய திரள்கள் புதிய வடிவத்தில், புதிய நட்சத்திரங்களுடன் மீண்டும் பிறக்கிறது. பிறப்பு-இறப்பு, படைப்பு-அழிவும் கொண்ட முடிவில்லா சுழற்சியே பிரபஞ்சம் முழுவதையும் பிணைக்கும் இழையாக இருக்கிறது. இதைப்போல் கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் நமது பிரபஞ்சத்தில் இருக்கின்றன.


நமது பயணம் மேலும் தொடர்கிறது. 200 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் கோடிக் கணக்கான சூரியன்களின் நிறையைக் கொண்ட மீமீப்பெரும் கருந்துளையைக் காண்கிறோம். அது அதைச் சுற்றியுள்ள  நட்சத்திரங்களை பிய்த்து உள்ளிழுத்து விழுங்குகிறது. மொத்த விண்மீன் திரளையும் இது விழுங்கி விடக்கூடும். இப்போது 1400 கோடி ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கிறோம். இப்போது திரும்பி பார்த்தால் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருவெடிப்பை காணமுடியும். இப்பெருவெடிப்பிலிருந்து தான் மீச்சிறு கோளத்தில் அளப்பறிய அழுத்ததுடன் இருந்த அளப்பறிய ஆற்றல் வெடித்து கிளம்பியது. அதிலிருந்து தான் நமது இடம், காலம், வெளி, பிரபஞ்சம் அனைத்தும் தோன்றின. இது வரை பிரபஞ்சம் முழுவதிலும், பொருள் ஆற்றலாக மாறுவதை கண்ட நாம் இங்கு ஆற்றல் பொருளாக மாறுவதை காண்கிறோம்.


பெருவெடிப்பின் ஒளி அண்டம் முழுமையும் இன்றும் விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது. பூமியில் அதை நாம் தொலைக்காட்சி இரைச்சலாக பார்க்கிறோம். நமது பயணத்தில் கண்ட கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் முதலான அனைத்து அற்புதங்களும், பெருவெடிப்பிலிருந்து சிதறி பயணிக்கும் துகள்கள்தான். இப்போதுதான் நாம் நினைத்ததை விட எவ்வளவு சிறியவர்கள், பலவீனமானவர்கள் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், இந்த பயணத்தின் ஊடாக நாம் இந்த அண்டத்தின் அற்புதங்களை அனுபவித்தோம். அந்த சாதனையை கொண்டாடுவோம்


(நன்றி: நேஷனல் ஜியாகிரபிக்)

கழுகு

 கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம் !! 



பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை.பறவை இனத்தில் கழுகுகள் 70 ஆண்டு கள் வரை உயிர் வாழ்கின்றன. 40ஆவது வயதிலிருந்து பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

அலகுகள் பெரிதாக வளர்ந்து உணவினை உண்ண முடியாத நிலை ஏற்படும். கால் நகங்கள் நீளமாக வளர்ந்துவிடும். இறக்கைகள் அடர்த்தியாக வளர்ந்து பறக்க முடியாது சிரமப்படும். 

 அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.


குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.

குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை..


நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் 


படக்கூடாது" - இது நல்லதா ?

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள். அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.

இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.


இப்படியொரு சூழ்நிலையில் ...


கழுகுகள்  தனது  

பெரிய அலகுகளைப் பாறைகளில் தேய்த்து உடைத்தும், தேவையற்ற நகங்களைப் பிய்த்து எறிந்தும், அடர்ந்த இறக்கைகளை உரித்தும் தன்னைத்தானே சரிசெய்து கொள்கின்றன. யாரும் சொல்லிக் கொடுக்காமல், எந்தப் பயிற்சியும் இல்லாமல், பிறருடைய உதவியுமில்லாமல் போராடி வெற்றி பெற்று, மீண்டும் 30 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.