Jan 30, 2022

சூப்பர் மார்க்கெட் தந்திரங்கள்



இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.


20 வருடங்களுக்குமுன் மேலை நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருந்த சூப்பர் மார்க்கட்கள் இப்போது ஆசிய நாடுகளிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் வந்துவிட்டன. ஒருகாலத்தில் இந்தியப் பாவனையாளர்களின் தேவைகளை முழுமையாக கவர் செய்தவை சிறிய மளிகைக் கடைகள்தான். இப்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன சூப்பர் மார்க்கெட்கள். சிறிய நகரங்களில்கூட வந்துவிட்டன.


உலகின் பிரபல சூப்பர் மார்க்கெட் செயின்கள் இந்தியாவில் கடைவிரிக்கத் தொடங்குகின்றன. அல்லது, ஒரு இந்தியப் பார்ட்னருடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் செயின்களை அமைத்திருக்கின்றன. இதைத்தவிர இந்திய வர்த்தகர்களும் அச்சு அசலாக மேலைநாட்டுப் பாணியில் சூப்பர் மார்க்கெட்களைத் திறந்திருக்கிறார்கள்.


மொத்தத்தில் நீங்கள் வசிப்பது ஐரோப்பாவோ, வட அமெரிக்காவோ, அவுஸ்திரேலியாவோ அல்லது ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றோ, சூப்பர் மார்க்கெட்கள் உங்கள் வாழ்க்கையில் அவசியமான ஒன்றாகி விட்டது.


வட அமெரிக்காவில் வசிப்பவராக நீங்கள் இருந்தால் உங்கள் குடும்ப வருமானத்தில் சுமார் 25 சதவீதம் வரை நீங்கள் செலவு செய்வது சூப்பர் மார்க்கெட்களில் என்கிறது கனேடிய பாவனையாளர் அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரம். இது ஒரு ஆவரேஜ் சதவீதம். ஐரோப்பாவிலும் மற்றய மேலை நாடுகளிலும் இருப்பதும் கிட்டத்தட்ட இதே ஆவரேஜ்தான். ஆசியாவில் வசித்தால் நீங்கள் செலவு செய்வது இதைவிடச் சற்று அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.


இந்தக் கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவராக நீங்கள் இருந்தால், ஒரு காரியம் செய்யுங்கள். – அடுத்துவரும் 1 மாத காலத்திற்கு ஒவ்வொரு தடவையும் நீங்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குப் போய் ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போதும், ரசீதுகளை ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். 1 மாதம் முடிந்ததும் அவற்றிலுள்ள டாலர், யூரோ, அல்லது ரூபா பெறுமதியைக் கூட்டி வரும் தொகையை 12 ஆல் பெருக்குங்கள்.


வரும் விடை அல்லது நீங்கள் செலவு செய்யும் பணத்தின் தொகை ஆயிரக் கணக்கில் இருக்கும். உங்களுக்குத் தலைசுற்றும்.


இந்தத் தொகைதான் நீங்கள் வருடமொன்றுக்கு சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்களுக்கு செலவு செய்யப்போகும் ஆவரேஜ் தொகை.


நான் ஏற்கனவே கூறியதுபோல இந்தத் தொகை ஆளாளுக்கு அல்லது வேறு வேறு குடும்பங்களுக்கு வேறுபடும். சிலருக்கு வருட வருமானத்தில் 30 சதவீதமாக இருக்கலாம். வேறு சிலருக்கு வருட வருமானத்தில் 20 சதவீதமாக இருக்கலாம். புள்ளிவிபரப்படி கனேடிய ஆவரேஜ் 25 சதவீதம்.


“சரி. இதற்கு என்ன செய்வது? வாழ்க்கைச் செலவு அப்படி” என்று வழமைபோல செலவு செய்துகொண்டு இருப்பதானால், நீங்கள் இதைப் படிக்க வேண்டியது அவசியமல்ல. அவசியம் எங்கே வருகிறது என்றால், கனேடியப் புள்ளிவிபரம் கொடுக்கும் மற்றொரு தரவில்!


அந்தத் தரவு என்ன? மொத்த வருமானத்தின் 25 சதவிகித தொகையை சூப்பர் மார்க்கெட்டில் செலவு செய்யும் ஒரு குடும்பத்தில் செலவு செய்யும் முழுத்தொகையின் 80 சதவீதம்தான் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மிகுதி வேஸ்ட் ஆகப் போய்விடுகிறது. அடடா!


அதாவது நீங்கள் 5000 டாலருக்கு ஷாப்பிங் செய்திருந்தால் 4000 டாலருக்கு வாங்கும் பொருட்களைத்தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். மிகுதி 1000 டாலர் பெறுமதியான பொருட்களை வீணடிக்கிறீர்கள் அல்லது உபயோகிக்காமல் எறிகிறீர்கள். இதில் பத்து நாட்களுக்குமேல் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு அழுகி எறியும் தக்காளி முதல், 2 வாரம் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருந்த பாதிப் பாக்கட் பால் எக்ஸ்பயரி தேதி முடிந்து எறிவது வரை அடங்கும்.


விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. கனேடியப் புள்ளிவிபரத்தில் மேலும் ஒரு தரவு இருக்கிறது. அதன்படி, நீங்கள் செலவு செய்யும் தொகையின் 10 சதவீதம், நீங்கள் தேவையில்லாமல் வாங்கும் பொருட்களில் செலவாகின்றது. அதாவது வருடத்திற்கு 5000 டாலர் செலவு செய்தால், சுமார் 500 டாலர் பெறுமதியான பொருட்களை நீங்கள் தேவையில்லாமல் அல்லது அவசியமில்லாமல் வாங்குகிறீர்கள்.


கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் இந்தக் கணிப்பு சரி என்பது புரியும்.


மலிவாகப் போட்டிருக்கிறார்கள், அல்லது இந்த வாரம் மாத்திரம் இந்தப் பொருள் தள்ளுபடி விலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வாங்கப்படும் பொருட்கள் இந்த வகை. அதே நேரத்தில், புதிதாக அறிமுகம் செய்கிறோம் என்று விளம்பரம் செய்யப்படும் பொருட்களின் விளம்பரத்தால் கவரப்பட்டு வாங்கப்படும் பொருட்களும் இந்த வகையில் வரும்.


இந்த 10 சதவீத பொருட்களின் தள்ளுபடி விலை விளம்பரங்கள் உங்கள் கண்ணில் தட்டுப்படாதிருந்திருந்தால், சூப்பர்மார்க்கெட்டில் இவை உங்களின் கைகளில் தட்டுப்பட்டிருக்காது. உங்கள் வீடுவரை வந்துமிருக்காது.


மேலேயுள்ள தரவுகள் இரண்டையும் கூட்டினால், சூப்பர் மார்க்கெட்களில் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் சுமார் 30 சதவீதத்தை வேஸ்ட் செய்கிறீர்கள். இது ஒருபுறம் இருக்க, மிகுதி 70 சதவீதம் செலவு செய்து நீங்கள் வாங்கிவரும் பொருட்களின் நிஜமான பெறுமதி அதுதானா? – அதை வேறுவிதமாகக் கேட்டால், நீங்கள் வாங்கிய பொருட்களை அதைவிட மலிவாக வாங்கியிருக்க முடியாதா?


நீங்கள் எந்தளவுக்கு ஷாப்பிங் புலி என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு சராசாரி வட அமொரிக்கப் பாவனையாளர் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் சாதாரணமாக வாங்கும் அதே பொருட்களை 15 சதவீதம் குறைவான விலையில் வாங்குவது சாத்தியம் என்கிறது அதே கனேடியப் புள்ளிவிபரம்.


இதைச் சொல்வது ஃபிளெக்ஸ் ப்ரைசிங் என்று. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் இங்கு சொல்லப் போகின்றோம்.


நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு கடைசியாக எப்போது போனீர்கள்? இன்று? நேற்று? கடந்த வாரம்? அது எப்போதாக இருந்தாலும், அந்த சூப்பர் மார்க்கெட்டின் உட்புறத்தை உங்கள் மனக்கண்ணில் கொண்டுவாருங்கள்.


வழமையாக சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும், அது எந்த நகரத்தில் இருந்தாலும், பொதுவான சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? கவனித்திராவிட்டால் நாங்கள் இப்போது சொல்லப்போகும் சில அம்சங்கள் நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும் இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.


1) சூப்பர் மார்க்கெட்களுக்கு செல்லும் ஆட்களில் அனேகமானவர்கள் வைத்திருக்கும் ஷாப்பிங் லிஸ்டில் இருக்கும் ஒரு அவசியப் பொருள் பால். இது நீங்கள் பயன்படுத்தும் பாலாகவோ, அல்லது குழந்தைகளுக்கான பாலாகவோ இருக்கலாம். சூப்பர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் தமது வருகையின் 70 சதவீதமான ட்ரிப்களில் பால் வாங்குகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம்.



அதை வேறுவிதமாகச் சொன்னால், நீங்கள் 10 தடவைகள் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் அதில் 7 தடவைகள் உங்களது ஷாப்பிங் லிஸ்ட்டில் பால் இருக்கிறது. சரி. கேள்வி என்னவென்றால், இப்படி அதிகமானவர்களால் வாங்கப்படும் பால், ஏன் சூப்பர் மார்க்கெட்டின் வாயிலருகேயோ காஷியருக்கு அருகேயோ வைக்கப்பட்டிருப்பதில்லை?


2) அநேக சூப்பர் மார்க்கெட்களின் உள்ளே வாத்திய இசை ஒலிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அப்படி ஒலிக்கும் இசை எந்த வகையான இசை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா. கவனித்திருந்தால் அதை இப்போது ஞாபகப்படுத்திப் பாருங்கள்.


3) நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட், சிப்ஸ், பாப்கார்ன் சூயிங்கம் போன்றவை உள்ளே ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால் அதே பொருட்கள் நீங்கள் பணம் செலுத்தும் கேஷியருக்கு அருகிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்திருப்பீர்கள். ஒரே பொருட்கள் ஏன் இரண்டு வேறு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


மேலே குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் ஏதோ தற்செயலாக சூப்பர் மார்க்கெட்களில் அமைந்து விடுவதல்ல. இவை காரணமாக அமைக்கப்பட்டடிருப்பவை. காரணம் -சைக்காலஜி. மனோத்ததுவம். மனோதத்துவ ரீதியாக உங்களை மடக்குவதுதான் திட்டம்.


சூப்பர் மார்க்கெட் ஒன்றின் விற்பனையில் மிகப்பெரிய பங்கு வகிப்பது இந்த மனோத்துவ தந்திரங்கள். Consumer psychological Tricks.


முதலாவதாகக் கூறப்பட்ட பால் விவகாரத்தையே பாருங்கள். சூப்பர் மார்க்கெட்கள் பாவனையாளர்களின் வசதிக்கே முக்கியத்துவம் கொடுப்பதானால், கடைக்குள் நீங்கள் நுழைந்தவுடன் கையில் எடுக்கும் விதத்தில் அவை வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் சூப்பர் மார்க்கெட்டுக்கு நீங்கள் 10 தடவைகள் சென்றால், 7 தடவைகள் பால் வாங்கச் செல்கிறீர்கள்.


ஆனால் பால் வைக்கப்பட்டிருப்பது சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெகுதொலைவில் வைக்கப்பட்டிருப்பதன் காரணம், உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே அதிகதூரம் நடக்கவைப்பது.


ஏன் நடக்க வைக்கிறார்கள்? ஏதாவது பாதயாத்திரை பயிற்சியா?


இல்லை. அதிக நேரம் உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்குள் தங்க வைக்க விரும்புகிறார்கள். அப்படிச் செய்தால்தான் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகநேரம் உங்கள் கண்களில் படும். அதிகநேரம் கண்களில் படும்போது, அந்தப் பொருட்கள் உங்கள் மனதில் பதியும். இதுதான் இலவச விளம்பரம்.


ஒரு புத்திசாலித்தனமான சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் வாயிலில் இருந்து பால் இருக்கும் இடத்துக்கு நடந்து செய்லும் பாதையின் இருபுறமும் பரொமோஷனல் ஐட்டம்கள், உங்களின் கண்ணைக் கவரும் விதத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.


சூப்பர் மார்க்கெட்டில் பால் வைக்கப்பட்டிருப்பது எங்கே?


ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்த புரொமோஷனல் ஐட்டம்கள் குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கின்றன என்று பாவனையாளருக்குத் தெரியப்படுத்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? விளம்பரம் செய்ய வேண்டும்.


பத்திரிகையிலோ, டிவியிலோ, ரேடியோவிலோ, இணையத்தளத்திலோ அதை விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும். அப்படிப் பணம் கொடுத்து விளம்பரம் செய்தாலும், அந்த விளம்பரத்தை உங்களைப் பார்க்க வைத்து, சூப்பர் மார்க்கெட்டுக்கு வரவைக்கவும் வேண்டும். ஒருவேளை விளம்பரத்தைப் பார்த்து 3 நாட்களின்பின் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும்போது, அந்த விளம்பரம் உங்களது மனதிலிருந்து மறைந்தும் விட்டிருக்கலாம்.



ஆனால், இதோ நீங்கள் பால் எடுக்கச் செல்லும் பாதையில் அவர்கள் விளம்பரப்படுத்தப்பட வேண்டிய பொருட்களையே கவர்ச்சிகரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். விளம்பரச் செலவு கிடையாது. பத்திரிகை விளம்பரத்தை நீங்கள் பார்த்துவிட்டு 3 நாட்களில் அதை மறந்து விடுவது போல இல்லாமல், விளம்பரப்படுத்தப்படும் பொருள் உங்கள் கைக்கெட்டிய தொலைவிலேயே இருக்கிறது.


இலவச விளம்பரம்! உடனடி விற்பனை!!


இரண்டாவது பாலை மாத்திரம் வாங்கும் உத்தேசத்துடன் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தால், அவை வாயிலுக்கு அருகே வைக்கப்பட்டடிருந்தால் அவற்றை எடுத்து, காசைக் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்து விடுவீர்கள். சூப்பர் மார்க்கெட்டில் டிஸ்பிளே செய்யப்பட்டிருக்கும் மற்ற எந்தப் பொருளும் உங்கள் கண்களில் பட்டிருக்காது.


அதனால்தான் பாவனையாளர் அதிக தடவைகள் கட்டாயம் வாங்கியே தீரவேண்டும் என்றிருக்கும் பொருட்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே தொலைவில் வைக்கிறார்கள். அதை எடுக்கப் போகும்போது நீங்கள் மற்றைய பொருட்களையும் பார்க்கப் போகின்றீர்கள். அப்போது உங்கள் மனதில் சில எண்ணங்கள் தோன்றுப் போகின்றன.


“அட இந்தப் பொருளைத்தானே வீட்டில் மறக்காமல் வாங்கிவரச் சொன்னார்கள். நல்லவேளை இப்போது கண்களில் பட்டதே”


“இந்தப் பொருள் பார்க்க நன்றாக இருக்கிறதே. சும்மா ஒரு தடவை வாங்கிப் பார்க்கலாமா?”


“ஓகோ இந்தப் பொருளும் இங்கே விற்பனையாகிறதா? எங்கே வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.”


“வாவ். இந்தப் பொருளின் விலை இவ்வளவுதானா, மலிவாக இருக்கிறதே. வாங்கிப் பார்க்கலாமா?”


பால் பாக்கட்டை எடுப்பதற்கு சூப்பர் மார்க்கெட்டின் கடைசி ஷெல்ஃப்வரை நடக்கும் பத்துக்கு இரண்டு பேருக்காவது மேற்கண்ட யோசனைகளில் ஏதாவது தோன்றினால் சூப்பர் மார்க்கெட்காரருக்கு வெற்றி. பத்துக்கு நான்கு பேருக்கு தோன்றினால் அதிஷ்டம். அதற்குமேல் தோன்றினால் தீபாவளி!!


பார்த்தீர்களா? எல்லாமே மனோத்துவ ரீதியான தந்திரம்தான்.


அடுத்ததாக சூப்பர் மார்க்கெட்டில் ஒலிக்கும் இசை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். இப்போது யோசித்துப் பாருங்கள். அந்த இதை மிகவும் மென்மையான, ஸ்லோ மியூசிக்காக இருந்திருக்கும்.


அதற்குக் காரணம் என்ன? எல்லா சூப்பர் மார்க்கெட்காரர்களுக்கும் வேகமான தடாங் படாங் இசை பிடிப்பதில்லையா? அப்படியல்ல.


விஷயம் என்னவென்றால், மனோதத்துவ அடிப்படையில் மென்மையான ஸ்லோவான இசை உங்களின் மனசை இலோசாக்குவதுடன், உங்களது இயங்கு திறனையும் குறைக்கின்றது.


நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் கார்ட் ஒன்றைத் தள்ளியபடி ஒவ்வொரு ஷெஃப்பாகப் போய் உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வகை ஸ்லோவான இசை உங்களது நடையையும் ஸ்லோவாக்கிவிடும்.


ஷாப்பிங் கார்ட்டைத் தள்ளியபடி அங்கு ஒலிக்கும் இசையைக் கேட்டபடி நடந்து பாருங்களேன்!


சாதாரணமாக நீங்கள் நடக்கும் வேகத்தில் சூப்பர் மார்க்கெட்டின் ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃப்பை நீங்கள் கடக்க எடுக்கும் நேரத்தைவிட, அதிக நேரம் எடுக்கப்போகின்றீர்கள். உங்களையறியாமல் அதிக நேரம் ஒவ்வொரு பொருளையும் பார்க்கப் போகின்றீர்கள். அதிக நேரம் பார்க்கும்போது, அவை அதிகநேரம் உங்கள் மனதில் பதியப் போகின்றன.


இந்த வேகக் குறைவால், வழக்கத்தைவிட ஓரிரு பொருட்களை நீங்கள் அதிகமாக வாங்குவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகின்றது. இல்லையா.


அதேபோல சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே சொக்லட், சூயிங்கம் போன்ற பொருட்கள் உள்ளே ஒரு இடத்தில் இருக்கும். அதே போருட்கள் நீங்கள் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டு பணம்செலுத்த தயாராக கேஷியருக்கு முன்னால் நிற்கும்போதும் வைக்கப்பட்டிருக்கின்றன அல்லவா.


அதிலும் ஒரு சிறிய மனோதத்துவ தந்திரம் இருக்கின்றது.


அது என்னவென்றால், கேஷியரிடம் பணம் செலுத்த வருமுன்னர் நீங்கள் ஆக்டிவ்வாக நடந்து நடந்து பொருட்களை எடுத்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். எல்லாம் முடிந்து கேஷியருக்கு முன்னே வரும்போது அங்கே வரிசையாக ஆட்கள் பணம் செலுத்த நிற்பார்கள். நீங்களும் அந்த வரிசையில் போய் இணைந்து கொள்வீர்கள்.


ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் இருந்து எப்போதாவது தாவி இறங்கியிருக்கிறீர்களா? அப்படி இறங்கியிருந்தால், நீங்களும் பஸ் செல்லும் திசையில் சிறிது தூரம் ஓடித்தான் நிற்க முடியும் என்பது தெரிந்திருக்கும். இங்கு நடப்பதும் கிட்டத்தட்ட அதே ரிஃப்ளெக்ஷன்தான்.


கடந்த பல நிமிடங்களாக சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஆக்டிவ்வாக நடந்து நடந்து பொருட்கைள எடுத்து ஷாப்பிங் கார்ட்டுக்குள் போட்ட உங்கள் கைகள் கேஷியருக்கு முன்பு ஓரே இடத்தில் காத்திருக்கும்போது துறுதுறுக்கும். அப்போது நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து எட்டக்கூடிய தொலைவில் எதையாவது எடுக்கும்படி உங்கள் மனம் தூண்டும்.


கேஷியருக்கு அருகேயுள்ள ஷெல்ஃபில் இருக்கிறது உங்களுக்கான இரண்டாவது வலைவிரிப்பு!


ஆனால் எட்டக்கூடிய தொலைவில் இருக்கும் பொருள் விலையுயர்ந்த பொருளாக இருந்தால் நீங்கள் கைவைக்க மாட்டீர்கள். விலை அதிகமில்லாத நொறுக்குத்தீனி அருகே இருந்தால் அதிலும் ஒன்றை எடுத்துக் கொள்வீர்கள்.


அதைத் தவிர நீங்கள் குழந்தைகளுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தால், அவர்களை கேஷியருக்கு முன்னாலுள்ள வரிசையில் சில நிமிடங்கள் காத்திருக்க வைத்தபடி நிற்கையில், குழந்தைகளின் கண்களில் படும்படி சாக்லெட் போன்ற பொருட்கள் இருந்தால் என்னாகும்?


அடுத்த தடவை நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் கேஷியருக்கு முன்னால் நிற்கும்போது, அங்கே உங்களுக்கு முன்னால் நிற்பவர்களில் எத்தனைபேர் அருகிலிருக்கும் சிறு பொருட்களை வாங்குகிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். பத்தில் இரண்டு பேராவது வாங்குவார்கள்.


இவர்களில் யாரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே தின்பண்டங்கள் விற்கும் பிரிவில் இதே பொருட்கள் இருந்தும், அங்கே எடுக்காமல் தவிர்த்துவிட்டு, கேஷியர்வரை வந்தவர்கள். கடைசிக் கிளைமாக்ஸில் மாட்டிக் கொண்டார்கள்.


சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்களில் இவை ஒரு சிறு துளிதான்.

நியூட்ரான் நட்சத்திரம்


இரவு வானில் நட்சத்திரங்கள்

நிலவற்ற நாளில் இரவில் வானத்தைப் பார்த்தால் ஏராளமான நட்சத்திரங்கள் தெரிகின்றன. எல்லாமே ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. உற்றுக் கவனித்தால் சில நட்சத்திரங்கள் நல்ல நீல நிறத்தில் இருக்கின்றன. வெண்மையான நட்சத்திரங்களும் உண்டு. இங்குமங்குமாக சிவந்த நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.


அஸ்ட்ரானமி எனப்படும் வானவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு அவற்றின் நிறத்தை வைத்தும் அதன் பருமனை வைத்தும் விதவிதமான பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

செம்பூதம். இது ஒரு வகை நட்சத்திரத்தின் பெயர். சிவப்பாக இருக்கும். வடிவில் மிகவும் பெரியது.   திருவாதிரை(Beteguese)  நட்சத்திரம் மற்றும் கேட்டை(Antares) நட்சத்திரம் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த இரண்டுமே சூரியனை விடப் பல மடங்கு பெரியவை. 


வெள்ளைக் குள்ளன்(White Dwarf). இது வேறு வகை நட்சத்திரத்தின் பெயர். வெண்மையாக இருக்கும்.வடிவில் சிறியது. சிவப்புக் குள்ளன்(Red Dwarf) என்ற பெயரைத் தாங்கிய நட்சத்திரங்களும் உண்டு. நியூட்ரான்(Neutron Star) நட்சத்திரம் இவற்றிலிருந்து வேறுபட்டது. அதற்கு நிறம் கிடையாது. சொல்லப்போனால் அதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. அது அருவ நட்சத்திரம்.


சாதாரண நட்சத்திரத்துக்கும் நியூட்ரான் நட்சத்திரத்துக்கும் என்ன வித்தியாசம்.? சாதாரண நட்சத்திரம் பஞ்சு மிட்டாய் என்றால் நியூட்ரான் நட்சத்திரம் கமார்கட் போன்றது. சாதாரண நட்சத்திரத்தை பசக் என்று அமுக்க முடிந்தால் அது நியூட்ரான் நட்சத்திரமாகி விடலாம்.


இது பற்றி  மேலும் விளக்குவதற்கு முன்னால் நாம் பழைய கதைக்குப் போக வேண்டும். இங்கிலாந்தில் 1897 ஆம் ஆண்டில் தாம்சன் என்ற ஆராய்ச்சியாளர் எலக்ட்ரான் என்னும் நுண்ணிய துகள் இருக்கிறது என்று கண்டுபிடித்தார். இதற்காக அவருக்குப் பின்னர் நோபல் பரிசு வ்ழங்கப்பட்டது. உலகில் இன்று கம்ப்யூட்டர் உட்பட நூறாயிரம் எலக்ட்ரானிக் க்ருவிகள் அதாவது மின்னணுக் கருவிகள் இருக்கின்றன. இவற்றுக்கு எலக்ட்ரான்களே அடிப்படை.


தாம்சன் தமது கண்டுபிடிப்பைச் செய்த அதே காலகட்டத்தில் நியூசீலந்து நாட்டிலிருந்து ரூதர்போர்ட் என்ற இளைஞர் மேல் படிப்புக்காக  இங்கிலாந்து வந்து சேர்ந்தார். அவர் தாம்சனிடம் சிஷ்யனாகச் சேர்ந்தார். அணுவைப் பற்றி ஆராய்ச்சி பண்ணுமாறு ரூதர்போர்டிடம் தாம்சன் கூறினார்.


அணுவைப் பற்றி அனேகமாக எதுவுமே அறியப்படாத காலம் அது. ரூதர்போர்ட் தமது ஆராய்ச்சியில் அணுவின் அமைப்பு எப்படிப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தார். அதற்கு அவர் பயன்படுத்திய சிறிய கருவிகளை சின்ன அட்டைப் பெட்டியில் போட்டு மூடி விடலாம்.

 அணுவின் மையத்தில் அணுவை விடச் சிறியதான புரோட்டான் என்ற துகள் இருப்பதாக 1911 ஆம் ஆண்டில் ரூதர்போர்ட் கண்டுபிடித்தார். 


பின்னர் 1932 ஆம் ஆண்டில் சாட்விக் என்ற விஞ்ஞானி அணுவுக்குள் புரோட்டானுடன் நியூட்ரான் என்ற துகளும் இருப்பதாகக் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து அணு என்பது உடைக்க முடியாத நுண்ணிய உருண்டை அல்ல என்பது தெளிவாகியது. அதாவது அணுவின் நடு மையத்தில் புரோட்டானும் நியூட்ரானும் சேர்ந்து இருக்கின்றன என்பதும் இவற்றை எலக்ட்ரான்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன என்பதும் தெரியவந்தது. ரூதர்போர்ட், சாட்விக் இரண்டு பேருமே பின்னர் நோபல் பரிசு பெற்றனர்.


எல்லா அணுக்களிலும் புரோட்டான் எண்ணிக்கை அல்லது நியூட்ரான் எண்ணிக்கை ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஹைட்ரஜன் அணுவின் உள்ளே பெரும்பாலும் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். அபூர்வமாக சில ஹைட்ரஜன் அணுக்களில் புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் இருக்கும்.


அணுக்களிலேயே மிக சிம்பிளான அணு ஹைட்ரஜன் அணுவே. இத்துடன் ஒப்பிட்டால் கார்பன் அணுவின் உள்ளே ஆறு புரோட்டான்களும் ஆறு நியூட்ரான்களும் இருக்கும். அவற்றை ஆறு எலக்ட்ரான்கள் சுற்றிக் கொண்டிருக்கும்.


கார்பன் அணு

இத்துடன் ஒப்பிட்டால் தங்க அணு ஒன்றில் 79 புரோட்டான்களும் 118 நியூட்ரான்களும் இருக்கும். 79 எலக்ட்ரான்களும் இருக்கும். இரும்பு அணு, நிக்கல் அணு, தாமிர அணு போன்ற வேறு வகை அணுக்களில் இவற்றின் எண்ணிக்கை வேறு விதமாக இருக்கும்.


இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த அணுவாக இருந்தாலும் அதில் நிறைய காலியிடம் உண்டு. ரூதர்போர்ட் ஆரம்பத்தில் நடத்திய பரிசோதனைகளிலேயே இது தெரிய வந்தது.


உதாரணமாக கார்பன் அணு ஒன்று பெரிய கால்பந்து ஸ்டேடியம் அளவுக்குப் பெரிதாக இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம். அந்த ஸ்டேடியத்தின் நடுமையத்தில் ஆறு புரோட்டான்களும் ஆறு நியூட்ரான்களும் நெருக்கியடித்துக் கொண்டு நட்ட நடுவே இருக்கும். இந்த இரண்டும் சேர்ந்து கால்பந்து சைஸில் இருப்பதாக வைத்துக் கொண்டால் ஆறு எலக்ட்ரான்களும் ஸ்டேடியத்தின் பவுண்டரியில் இருக்கும்.


நடுவே வைக்கப்பட்ட கால்பந்துக்கும் ஸ்டேடியத்தின் பவுண்டரிக்கும் நிறைய காலியிடம் இருக்கிற மாதிரியில் கார்பன் அணுவில் நிறையக் காலியிடம் இருக்கும். எல்லா அணுக்களிலும் இப்படிக் காலியிடம் உண்டு.


இப்போது நாம் மறுபடி வானத்து நட்சத்திரத்துக்கு வருவோம். அண்டவெளியில் பல  கோடி கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாக ஹைட்ரஜன் வாயுக் கூட்டம் ஒரு மொத்தை போல அல்லது மேகக் கூட்டம் போல பரவி அமைந்திருக்கும். அந்த மேகக்கூட்டத்தில் 90 சதவிகிதத்துக்கு மேல் ஹைட்ரஜன் வாயு இருக்கும். எங்கோ ஏதோ ஒரு நட்சத்திரம் வெடித்தது என்றால் அதனால் ஏற்படும் அதிர்ச்சி அலை அண்டவெளியில் பரவும்.


அந்த அதிர்ச்சி அலையின் விளைவாக ஹைட்ரஜன் வாயு அடங்கிய மேகக் கூட்டம் மெல்லச் சுழல் ஆரம்பிக்கும். பிறகு அது சற்றே வேகமாகச் சுழலும். இவ்விதம் சுழலச் சுழல அது உருண்டை வடிவம் பெறும். அதன் வடிவம் சுருங்க ஆரம்பிக்கும். அவ்விதம் சுருங்கச் சுருங்க சுழற்சி வேகம் அதிகரிக்கும். அடர்த்தி அதிகரிக்கும்.


அடர்த்தி அதிகரிக்கும் போது வெளிப்புறத்திலிருந்து மையம் நோக்கி அமுக்கம் அதிகரிக்கும். இதன் விளைவாக அந்த ஹைட்ரஜன் வாயு உருண்டையின் மையத்தில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பம் பல மிலியன் டிகிரியை எட்டும் போது ஹைட்ரஜன் அணுக்களின் எலக்ட்ரான்கள் பிய்த்துக் கொண்டு பறக்கும். அந்த நிலையில் ஹைட்ரஜன் அணுக்களின் புரோட்டான்கள் மட்டும் தனியே அலைபாயும். ஒரு கட்டத்தில் இந்த புரோட்டான்கள் ஒன்றோடு ஒன்று சேரும். இதுவே அணுச்சேர்க்கை ஆகும். (Nuclear fusion)


இந்த அணுச்சேர்க்கையின் பலனாக ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் என்ற வேறு அணுக்களாக மாறும். பல மிலியன் டிகிரி வெப்பம், அமுக்கம் இருக்கும் போது தான் அணுச்சேர்க்கை நிகழும். அப்போது பெரும் ஆற்றல் வெளிப்படும். வெப்பமும் ஒளியும் தோன்றும். ஒரு நட்சத்திரம் இப்படியாகத் தான் உண்டாகிறது.


ஆரம்பத்தில் இருந்த வாயு மொத்தை எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதைப் பொருத்து நட்சத்திரம் பெரியதாக அல்லது சிறியதாக அமையும்.


எல்லா நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளமை, வளர்ச்சிக் கட்டம்,முதுமை மடிவு என எல்லாம் உண்டு. அந்த அளவில் ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் பல கோடி ஆண்டுகளாகும். ஆனால் எல்லா நட்சத்திரங்களின் ஆயுளும் ஒரே மாதிரியானது அல்ல.முடிவும் ஒரே மாதிரியிலானது அல்ல.

நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சூரியன் நமக்கு ஒப்புநோக்குகையில் அருகாமையில் உள்ளதால் சூரியனாகத் தெரிகிறது. இதே சூரியன் இப்போதுள்ளதைப் போல பல நூறு மடங்கு தொலைவில் இருந்தால் நட்சத்திரமாகத்தான் தெரியும்.


நிலவற்ற நாளில் இரவு வானில் தெரிகின்ற நட்சத்திரங்கள் மிக மிகத் தொலைவில் இருக்கின்ற காரணத்தால் தான் அவை வெறும் ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. சூரியன் அந்த தொலைவுக்கு நகர்ந்து சென்று விட்டால் சூரியனும் ஒரு நட்சத்திரமாகத் தெரிய ஆரம்பிக்கும்.

நம்து சூரியன் பூமியைப் போல பல நூறு மடங்கு பெரியது என்றாலும் மற்ற பல நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டால் சூரியன் நடுத்தர சைஸ் கொண்டதே.


நமது சூரியன் தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன. அது இன்னமும் 500 கோடி ஆண்டுகளுக்கு இருந்து வரும். ஆக சூரியனின் மொத்த ஆயுள் சுமார் 1000 கோடி ஆண்டுகள்.


ஆனால் சூரியனை விட பல மடங்கு பெரியதாக ஒரு நட்சத்திரம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் ஆயுள் சூரியனின் ஆயுளை விடக் குறைவாகத்தான் இருக்கும். சூரியனை விட வடிவில் மிகப் பெரியதான திருவாதிரை நட்சத்திரத்தின் மொத்த ஆயுளே ஒரு கோடி ஆண்டுகள் தான். அதற்குக் காரணம் உண்டு.


ஒரு நட்சத்திரத்தில் அணுச்சேர்க்கை நிகழும் போது ஐன்ஸ்டைன் கூறிய தத்துவப்படி பொருளானது ஆற்றலாக மாறுகிறது. அதாவது பொருள் எரிந்து தீரும் போது தவிர்க்க முடியாதபடி பொருள் குறைந்து கொண்டே போகும். நமது சூரியனில் ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன் அணுச்சேர்க்கை வடிவில் எரிந்து தீர்ந்து கொண்டிருக்கிறது.

சூரியனை விட மிகப் பெரிய நட்சத்திரத்தில் பொருளானது இதை விட வேகமாக எரிந்து தீர்ந்து கொண்டிருக்கும்.


நமது அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் சிறிய குடும்பமாக இருந்தால் சமையல் காஸ் சிலிண்டர் அதிக நாள் வரும். பத்து பதினைந்து பேர் இருக்கிற பெரிய குடும்பமாக இருந்தால் காஸ் சிலிண்டர் வேகமாகத் தீர்ந்து போகும்.


அது மாதிரியில் பெரிய நட்சத்திரத்தில் பொருளானது பயங்கர வேகத்தில் தீர்ந்து கொண்டிருக்கும். எனவே தான் சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரத்தின் ஆயுள், சூரியனின் ஆயுளை விடக் குறைவாகவே இருக்கும்.


ஒரு நட்சத்திரத்தில் என்ன நிகழ்கிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். நட்சத்திரத்தின் வெளிப்புறப் பொருள் உள் நோக்கி அமுக்கும். அதே நேரத்தில் உட்புறத்தில் நிகழும் அணுச்சேர்க்கையால் ஏற்படும் ஆற்றல் வெளியே வரப் பார்க்கும். இந்த இரண்டும் சரிசமமாக இருக்கின்ற வரையில் நட்சத்திரம் காலம் தள்ளிக் கொண்டிருக்கும்.


 ஒரு நட்சத்திரத்தில் வெளிப்புறத்திலிருந்து உள் நோக்கி அமுக்கும் சக்தியின் அளவு பெருமளவு குறையும் போது அந்த நட்சத்திரம் வெடித்து விடும். இப்படி வெடிக்கின்ற நட்சத்திரத்துக்கு சூப்பர்நோவா என்று பெயர். நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே பல லட்சம் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் எப்போதாவது இப்படி நட்சத்திரம் வெடிப்பது உண்டு.  இதை ஒரு நட்சத்திரத்தின் சாவுக் கட்டம் என்றும் சொல்லலாம்.


அப்படி சூப்பர் நோவா தோன்றும் போது இரவு வானில் அது பிரகாசமாகத் தெரியும். கி.பி 1054 ஆம் ஆண்டில் இப்படி ஒரு சூப்பர் நோவா தென்பட்டது. வானில் சூப்பர் நோவா காட்சி பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். இரவில் பல நாட்களுக்கு சூப்பர் நோவா நட்சத்திரம் தெரிந்து கொண்டிருக்கும். ஆனால் சூப்பர் நோவா வெடிப்பின் போது மிக ஆபத்தான கதிர்கள் தோன்றும். இவை பூமியைத் தாக்கினால் உயிரினத்துக்கு ஆபத்து. பூமியிலிருந்து சுமார் 50 ஒளியாண்டு தொலைவுக்கு அப்பால் சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்டால் நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் 50 ஒளியாண்டுக்குக் குறைவான தூரத்தில் சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்டால் மனித இனத்துக்கே ஆபத்து.


வானில் எப்போதோ சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்ட இடத்தை நோக்கினால் மெல்லிய புகை மண்டலம் இருப்பது போன்று காட்சி அளிக்கும். அங்கு ஏற்கனவே நட்சத்திரம் இருந்த இடத்தில் அதாவது நட்சத்திரம் மடிந்து போன இடத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கும். அதுவே நியூட்ரான் நட்சத்திரமாகும். வெடிப்புக்குப் பிறகு மிஞ்சுவதே நியூட்ரான் நட்சத்திரம்.


சூரியனைப் போல   எட்டு முதல் 15  மடங்கு பெரியதான நட்சத்திரங்களே   அவற்றின் இறுதிக் கட்டத்தில் இவ்விதம் வெடித்து நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதற்கு ஏன் நியூட்ரான் நட்சத்திரம் என்று பெயர் வந்தது? நாம் பழையப்டி அணு சமாச்சாரத்துக்கு வருவோம். அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை இருக்கும் என்று சொன்னோம். நியூட்ரான் நட்சத்திரத்தில் நியூட்ரான்கள் மட்டுமே இருக்கும். 


அந்த நட்சத்திரத்தில் அதுவரை இருந்த புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் சூப்பர்நோவா வெடிப்பின் போது தோன்றும் பயங்கர வேகத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஐக்கியமாகி  நியூட்ரான்களாகி விடும். அதாவது ஒரு புரோட்டானுடன் ஒரு எலக்ட்ரான் சேர்ந்து கொண்டால் அது நியூட்ரான் ஆகிவிடும். 


அந்த நட்சத்திரத்தில் அதுவரை அடங்கியிருந்த அணுக்கள் அனைத்திலும் புரோட்டான்களிலிருந்து எலக்ட்ரான்கள் விலகி இருந்தன. அதாவது அந்த அணுக்களில் நிறையக் காலியிடம் இருந்தது. புரோட்டான்களுடன் எலக்ட்ரான்கள் ஐக்கியமான பிறகு அதுவரை இருந்த காலியிடம் மறைந்து போய்விட்டிருக்கும்.


எனவே அந்த நட்சத்திரம் வடிவில் சுருங்கி நியூட்ரான் நட்சத்திரமாகி விடுகிறது.  பஞ்சு மிட்டாயை பசக் என்று அமுக்கினால் அது சிறிய உருண்டையாக மாறி விடுவது போல அது வரை வடிவில் பெரியதாக் இருந்த நட்சத்திரம் வடிவில் சுருங்கி நியூட்ரான் நட்சத்திரமாக உருவெடுக்கிறது..


எனவே ஒரு நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பொருளை எடுத்து எடை போட்டால் அது ஒரு மலையின் எடைக்குச் சமமாக இருக்கும்.


ஒரு பஞ்சு மூட்டையை ஒருவரால் எளிதில் தூக்க முடியும். அதே கோணியில் பஞ்சுக்குப் பதில் புளியை அடைத்தால் அந்த மூட்டையை எளிதில் தூக்க முடியாது. அதே கோணியில் சிமெண்டை அடைத்தால் அந்த மூட்டையை கையால் நகர்த்துவதே கஷ்டம். நியூட்ரான் நட்சத்திரம் என்பது புளி அடைத்த கோணிப்பை போன்றது. அதுவும் கூட சரியில்லை. ஒரு மூட்டை புளியை ஒரு ஹாண்ட் பேக்கில் அடைக்க முடிந்தால்  எப்படியோ அது மாதிரியில் நியூட்ரான் நட்சத்திரம் உள்ளது. 


ஆரம்பத்தில் பல ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருந்த அந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமான பிறகு அதன் குறுக்களவு 20 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கலாம்.


ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் காண முடியாது. பெரும்பாலான நியூட்ரான் நட்சத்திரங்கள் பல்சார் எனப்படும் நட்சத்திரங்களாக விளங்குகின்றன. அதாவது ஒரு நியூட்ரான் நட்சத்திரம் ரேடியோ அலைகள் வடிவில் துடிப்புகளை வெளிவிடுவதாக இருந்தால் அது பல்சார் எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை pulsating star என்பார்கள். அதுவே சுருக்கமாக பல்சார் எனப்படுகிறது.


எல்லா நட்சத்திரங்களும் தமது அச்சில் சுழலும். நமது சூரியனும் தனது அச்சில் சுழல்கிறது. அது ஒரு முறை சுழன்று முடிக்க சுமார் 30 நாட்கள் ஆகின்றன. பல்சார் நட்சத்திரங்கள் வடிவில் மிகச் சிறியது என்பதால் அசுர வேகத்தில் சுழலும். ஒரு வினாடியில் 20 முறை சுழல்கின்ற பல்சார் நட்சத்திரங்கள் உண்டு. அபூர்வமாக ஒரு பல்சார் வினாடிக்கு 1122 முறை சுழ்ல்கிறது. நமது ஆகாய கங்கை அண்டத்தில் இதுவரை ஆயிரம் பல்சார் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


பல்சார் நட்சத்திரங்கள் ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. எனவே ரேடியோ டெலஸ்கோப்புகள் மூலம் பல்சார்கள் இருக்குமிடங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது.

  அண்டவெளியில் நியூட்ரான் நட்சத்திரங்கள் இருக்க வேண்டும் என 1930 களிலேயே கொள்கை அளவில் விஞ்ஞானிகள் கூறினர். ஆனால் 1967 ஆம் ஆண்டில் தான் முதல் நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் ஜோசிலின் பெல் என்னும் கல்லூரி மாணவி தான் அந்த நியூட்ரான் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார்


பூமிக்கு அதாவது நமது சூரியனுக்கு அருகில் நியூட்ரான் நட்சத்திரம் எதுவும் இல்லை. நமக்கு மிக அருகில் இருப்பதாக சொல்லப்படும் நியூட்ரான் நட்சத்திரம் 500 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இது சப்த ரிஷி மண்டலத்துக்கு அருகே உள்ளது. இதற்கு ஆங்கில சினிமா ஒன்றில் வரும் வில்லனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


சினிமாவில் ஹீரோக்களுக்குத் தான் கிரேட் ஸ்டார், டாப் ஸ்டார் என்றெல்லாம் பட்டம் சூட்டுகிறார்கள். அதன்படி பார்த்தால் இந்த நியூட்ரான் நட்சத்திரத்துக்கு ஹாலிவுட் சினிமா ஹீரோவின் பெயர் வைக்கப்பட்டிருக்க வேண்டும். எப்படி வில்லனின் பெயர் வைத்தார்கள் என்பது புரியவில்லை.


( இது அகில இந்திய வானொலி சென்னை நிலையம் மூலம்  டிசம்பர் 23 ஆம் தேதி இரவு 8-45 மணிக்கு நிகழ்த்திய உரையாகும். நன்றி: சென்னை வானொலி நிலையம்)

Jan 29, 2022

GPS – Global Positioning System

ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் ஆப்பிரிக்க வெளிகளிலும், ஐரோப்பிய மலை மேடுகளிலும், ஆசியக்காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறான். காலம், காலமாகவே அவனுக்கு தேடல் இருந்திருக்கிறது. ஆனால் புதிய இடங்களைச் சேரும் போதும், அங்கே தனது தேடல்களை மேற்கொள்ளும் போதும், மிகப்பெரிய பிரச்சினை – எங்கே இருக்கிறோம் என்பதும், தொலைந்துவிடாமல் மீண்டும் அவனது குழுவிடம் மீண்டும் வரவேண்டுமே என்பதும் ஆகும்.


பழக்கப்பட்ட இடங்களில் இந்த பிரச்சினை இல்லை, ஆனால் புது இடங்களில்? ஏன் நானே இதுவரை சிறுவயதில் மூன்று முறை தொலைந்திருக்கிறேன்! இன்றும் புதிய இடங்களுக்கு போகும் போது, செல்லும் பாதையை ஒரே தடவையில் ஞாபகம் வைத்துக் கொள்வதென்பது  முடியாத காரியமாக தான் இருக்கிறது, என்ன செய்ய ??!!


ஆதிகாலத்தில் பல்வேறு இயற்கை அமைப்புக்களை வைத்து அவன் இருக்கும் இடங்களை அடையாளப் படுத்திய மனிதன், பிற்காலத்தில் திசைகாட்டியை கண்டறிந்து பயன்படுத்தினான். தொடர்ந்து வந்த தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று செயற்கைக் கோள்களின் உதவியுடன் GPS என்ற ஒன்றை உருவாக்கிவிட்டான். வானத்தில் இருந்து பார்க்கும் ஆபத்பண்டவர் போல 24 செயற்கை கோள்கள் (satellites) பூமியை சுற்றி வந்துகொண்டே இருக்கிறது, அது எந்த நேரமும் நாம் இருக்கும் இடத்தை  மிகத் துல்லியமாக தெரிவித்துவிடும்.



இந்த GPS / புவியிடங்காட்டி பற்றிதான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும், அது வேலை செய்ய தேவையான கருவிகளைப் பற்றியும் பார்ப்போம். மேலதிகமாக அதைவிடவும் வேறு என்ன தொழில்நுட்பங்கள் இடத்தை அறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் பார்ப்போம்.


இன்று நாம் வாழும் உலகம் தொழில்நுட்ப மயமாகிவிட்டது. அதிகளவான தொழில்நுட்ப வளர்ச்சி, நாம் என்னென்ன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம் என்பதை தெரியாமலே பயன்படுத்த வழிவகுத்துவிட்டது. இன்று சர்வசாதாரணமாக நம் எல்லோரது கையிலும் ஐபோன், ஆண்ட்ராய்டு போன்ற செல்பேசிகள் உண்டு. ஸ்மார்ட்போன் என அழைக்கப்படும் இவ்வகை செல்பேசிகள் தனக்குள்ளே தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கு தேவையான கருவிகளை விடவும், மேலும் சில பல கருவிகளை உள்ளடக்கியுள்ளது.


நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி முகப்புத்தகத்தில் சாட் (chat) செய்யும் போது உங்களது தகவலுக்கு கீழே, நீங்கள் எங்கிருந்து இந்த சாட் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் ஊரின் பெயரும் தெரியும். எப்போதாவது இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்தது உண்டா? இது என்ன பெரிய விஷயம், நான் எங்கே இருக்கிறேன் என்பது இலகுவாக கண்டுபிடித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு வாசியுங்கள். இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் முறை உங்களை ஆச்சரியப் படவைக்கும் – அது மட்டுமல்ல, அது நீங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதும் அவ்வளவு இலகுவான காரியமில்லை! ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி அதை சாத்தியப்படுத்தியுள்ளது. பார்ப்போம் எவ்வாறு என்று!


உங்கள் ஸ்மார்ட்போன்களில் உலக இடைநிலை உணர்வி / GPS – Global Positioning System


நாம் முதலில் GPS பற்றிப் பார்க்கலாம், மிகத்துல்லியமாக (3.5 மீட்டருக்குள்) நாம் இருக்கும் இடத்தை GPS ஐ வைத்து அறிந்துவிடலாம். உங்கள் ஸ்மார்ட்போன்கள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் GPS வாங்கி (GPS Receiver) இருக்கும். இதனால் தான் உங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி கூகிள் மேப்ஸ் மூலம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பார்பதற்கும், மற்றும் வீதி வழிச்செல்லுவதற்கான வழிகாட்டியாகவும் அது பயன்படுகிறது.


GPS ஐ நாம் எல்லோரும் எல்லா நாடுகளிலும் பயன்படுத்துவதால் அது உலகநாடுகளுக்கு சொந்தமான ஒன்று இல்லை. GPS அமெரிக்க வான்படைக்கு சொந்தமான ஒரு தொழில்நுட்பம். அதை உருவாக்கி, பராமரிப்பது அமெரிக்க இராணுவமே. ஆனால், GPS வாங்கி வைத்திருக்கும் யார் வேண்டும் என்றாலும் அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.


மத்திய புவிச் சுற்றுப் பாதையில் (medium earth orbit), அதாவது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 20,200 கிலோமீட்டர்கள் உயரத்தில் 24 செயற்கை கோள்கள் பூமியை தினமும் இரண்டு முறை சுற்றி வருகின்றன. இந்த செயற்கை கோள்களே GPS இன் அடிப்படைக் கட்டமைப்பாகும்.


இந்த 24 செயற்கை கோள்களும், சம இடைவெளி கொண்ட ஆறு அச்சுக்களில், ஒவ்வொன்றிலும் 4 செயற்கை கோள்கள் வீதம் பூமியை சுற்றுகின்றன. இந்த 24 செயற்கை கோள்கள் சுற்றும் இடங்கள்/ அச்சுக்கள், அடிப்படை அச்சுக்கள் (baseline slots) என்று அழைக்கப்படும். இந்த செயற்கை கோள்களின் சுற்றுப் பாதை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்றால், பூமியில் எந்தவொரு இடத்தில் இருந்து கவனித்தாலும், குறைந்தது 4 GPS செயற்கை கோள்கள் தெரியும்.


ஆனாலும் அமெரிக்க வான்படை 24 இக்கும் அதிகமான செயற்கை கோள்களை GPS தொழில்நுட்பத்துக்கு பயன்படுத்துகிறது. இந்த மேலதிக செயற்கை கோள்கள், 24 செயற்கை கோள்களில் எதாவது பிழை ஏற்பட்டால் அல்லது அவற்றின் வாழ்வுக்காலம் முடிந்தால் அவற்றுக்கு பதிலாக பயன்ப்படும்விதமாக பயன்படுத்தபட்டது. ஆனால் 2011 ம் ஆண்டில் இருந்து 24 செயற்கை கோள்கள் கொண்ட அமைப்பாக இருந்த GPS ஐ 27 செயற்கை கோள்கள் கொண்ட அமைப்பாக அமெரிக்க வான்படை மேம்படுத்தியது. இதன் மூலம் GPS இன் துல்லியத்தன்மை மற்றும் பூமியில் GPS ஐ பயன்படுத்தக்கூடிய எல்லைகளை விரிவாக்கியது. ஆக இன்று இந்த 27 செயற்கை கோள்களோடு மேலதிக 4 செயற்கை கோள்களுமாக (backup) மொத்தமாக 31 செயற்கை கோள்களை இந்த GPS கொண்டுள்ளது.


எப்படி GPS வேலை செய்கிறது?


இந்த GPS செயற்கை கோள்கள் தொடர்ந்து ரேடியோ சமிக்ஞைகளை பூமியைநோக்கி பரப்பிக்கொண்டே இருக்கிறது. இந்த சமிக்ஞைகளில் அந்த குறிப்பிட்ட செயற்கை கோளின் தற்போதைய இடம், அதன் நிலை மற்றும் துல்லியமான நேரம் என்பன அடங்கும்.

ஒவ்வொரு GPS செயற்கை கோளும் அணுககடிகாரங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.



இந்த ரேடியோ சமிக்ஞைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்.

நம்மிடம் இருக்கும் GPS வாங்கி (GPS receiver) இந்த சமிக்ஞைகளை பெற்றுக்கொள்ளும். இப்படி பெற்றுக்கொள்ளும்போது அந்த சமிக்ஞைகள் வந்தடைந்த மிகத்துல்லியமான நேரத்தையும் குறித்துக்கொள்ளும்.

இப்படி குறைந்தது 4 செயற்கை கோள்களில் இருந்து சமிக்ஞைகளை பெற்றுக்கொண்டால் டிரைலேடரஷன் என்னும் கணிதவியல் முறையைப் பயன்படுத்தி அந்த GPS வாங்கி இருக்கும் இடத்தை அதனால் கணிக்கமுடியும்.


இந்த டிரைலேடரஷன் மூலம் எப்படி இடத்தை கண்டு பிடிக்கலாம் என்று சுருக்கமாக பார்ப்போம். நீங்கள் ஒரு இடத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் இருக்கும் இடம் என்ன என்று உங்களுக்கு தெரியாது, ஆனால் உங்கள் நண்பர்கள் சிலரிடம் சில தகவல்கள் உண்டு அதுமட்டுமலாது உங்கள் நண்பர்கள் இருக்கும் இடமும் உங்களுக்கு தெரியும். நண்பர் A இற்கு அவரிடம் இருந்து நீங்கள் 10km தூரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். அதே போல நண்பர் B, நீங்கள் அவரிடம் இருந்து 15km தூரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். நண்பர் C யும் நீங்கள் அவரிடம் இருந்து 12km தூரத்தில் இருப்பதாக கூறினால், இப்போது இந்த டிரைலேடரஷன் முறையைப் பயன்படுத்தி மிகத்துல்லியமாக உங்களால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கண்டுபிடித்துவிடலாம்.


இந்த நண்பர்கள் போலதான் GPS செயற்கை கோள்களும் செயல்படுகின்றன. உங்கள் GPS வாங்கி இந்த செயற்கை கோளின்களிடம் இருந்து வரும் சமிக்ஞைகள் மூலம் ஒவ்வொரு செயற்கை கோளும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்று கணக்கிடுகிறது. இதேபோல மூன்று செயற்கை கோள்களின் தகவல் கிடைத்தவுடன் அது நீங்கள் இருக்கும் இடத்தை கணித்துவிடும். நான்காவது செயற்கை கோள் இந்த இடம் சார்ந்த தகவலின் துல்லியத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.


இந்த செயற்கை கோள்கள் எவ்வாறு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று அறிவது? நமது உதாரணத்தின் படி, நண்பர்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்று நமக்கு சொன்னார்கள் ஆனால் இந்த செயற்கை கோள்கள்? எப்படி அது சாத்தியம்?


தூரம் = வேகம் x நேரம்


இந்த எளிய சமன்பாடுதான் இங்கு பயன்படுகிறது. இங்கு GPS இன் சமிக்ஞைகள் ரேடியோ அலைகள் என்பதனால் அதன் வேகம் செக்கனுக்கு 299,792,458 மீற்றர்கள். நேரம் – இங்கு இந்த நேரக்கணிப்பு தான் மிக முக்கியமானது. இதற்குதான் இந்த GPS செயற்கை கோள்கள் மிகத்துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்ட அணுக்கடிகாரங்களை பயன்படுத்துகின்றன. செயற்கை கோள்களில் இருந்து சமிக்ஞைகள் எவ்வளவு நேரத்தில் வந்தடைகின்றன என்பதை இந்த கடிகார நேரத்தை வைத்துக் கணக்கிடமுடியும், அதன் பின் தெரிந்த வேகம், நேரத்தை வைத்து ஒவ்வொரு செயற்கைகோளும் இருக்கும் தூரம் கணக்கிடப்படும். இவ்வாறு மூன்று செயற்கை கோள்களின் தூரம் கணக்கிடப்பட்டால், GPS வாங்கியின் இருப்பிடம் துல்லியமாக அறியப்பட்டுவிடும்.


GPS இலும் ஐன்ஸ்டீன்


ஐன்ஸ்டீன் இங்கு எப்படிவந்தார் என்று சிந்திக்கிறீர்களா? சொல்கிறேன். நீங்கள் ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக் கோட்பாடுகள், பொதுச் சார்புக் கோட்பாட்டை பற்றி தெரிந்திருந்தால், பூமியின் ஈர்ப்புவிசை எவ்வாறு நேரத்தில் செல்வாக்கு செலுத்தும் என்று அறிந்திருப்பீர்கள். 


பூமியில் இருந்து கிட்டத்தட்ட 20000 கிலோமேடர்கள் உயரத்தில் இந்த GPS செயற்கை கோள்கள் சுற்றுவதாலும், மணிக்கு 14000 கிலோமீட்டர்கள் வேகத்தில் அவை பூமியை சுற்றி வருவதாலும், பூமியில் இருந்து நோக்கும் போது இந்த செயற்கை கோள்களில் நேரம் சிறிது வேகம் குறைவாகவே துடிக்கிறது. GPS மிகத்துல்லியமாக் வேலை செய்ய நேரமானது 20 இல் இருந்து 30 நானோசெக்கனுக்குள் துல்லியமாக அளக்கப்படவேண்டும்.


ஐன்ஸ்டினின் சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் படி, இந்த GPS செயற்கை கோள்களின் நேரம் ஒரு நாளுக்கு 7 மைக்ரோசெக்கன்கள் வீதம் பூமியை விட குறைவாகவே இருக்கும் (அவை பூமியில் இருப்பவரோடு ஒப்பிடும் போது மிகவேகமாக பயணிப்பதால்). அப்படி என்றால் இந்த செயற்கை கோள்களில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு நாளைவிட 7 மைக்ரோசெக்கன்கள் குறைவு. நிற்க இன்னும் இருக்கிறது.


அனால் ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கோட்பாடு இன்னுமொரு குண்டைத் தூக்கிப் போடுகிறது. அதாவது ஈர்ப்புவிசையால் நேரத்தின் வேகத்தை மாற்றமுடியும். ( சென்ற பதிவில் விரிவாக விளக்கியுள்ளேன் ) திணிவு அதிகமாக இருக்கும் பொருளுக்கு அருகில் நேரம் துடிப்பதை விட தூரத்தில் நேரம் வேகமாக துடிக்கும், ஆக பூமியில் உள்ள கடிகாரத்தைவிட இந்த செயற்கை கோள்களில் கடிகாரம் சற்று வேகமாக துடிக்கும். பொ.சா.கோ இந்த செயற்கை கோள்களில் உள்ள கடிகாரம் பூமியில் உள்ளதை விட 45 மைக்ரோசெக்கன்கள் வேகமாக துடிக்கும்! அப்படியென்றால் இந்த செயற்கை கோள்களில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு நாள் என்பதைவிட 45 மைக்ரோசெக்கன்கள் அதிகம்.


ஆக சி.சா.கோ மற்றும் பொ.சா.கோ ஆகியவற்றை சேர்த்துக் கருதினால் பூமியில் இருந்து பார்க்கும் போது இந்த செயற்கை கோள்களில் நேரமானது 38 மைக்ரோசெக்கன்கள் (38000 நானோசெக்கன்கள்) வேகமாக துடிக்கிறது (45-7=38). இந்த நேர வித்தியாசத்தை கணக்கில் எடுக்காவிடில் வெறும் இரண்டு நிமிடங்களிலேயே GPS மூலம் பெறப்படும் இருப்பிடம் பிழையாகிவிடும். ஒரே நாளில் GPS மூலம் பெறப்படும் இருப்பிடத்தின் தகவலும் உண்மையான இருப்பிடத்தின் தகவலுக்கும் இடையில் 10km இடைவெளி வந்துவிடும். ஆக நாட்கள் செல்லச் செல்ல இந்த பிழையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும் அதோடு இந்த GPS பயனற்ற ஒரு விடயமாகிவிடும்.


இதற்காக இந்த GPS செயற்கைகோளை உருவாக்கிய அறிவியலாளர்கள், இதில் உள்ள அணுக்கடிகாரம் வேகம் குறைவாக துடிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், பூமியைச் சுற்றும் இந்த GPS செயற்கை கோள்களில் உள்ள கடிகாரங்கள் பூமியில் உள்ள கடிகாரங்களைப் போலவே இயங்கும் இதனால் இந்த சார்புக் கோட்பாடுகளால் உருவான நேர வேகமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்தது!  – மாபெரும் இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது!


சரி பிறகு?!


இப்படித்தான் GPS வேலைசெய்கிறது என்று இப்போது உங்களுக்கும் தெரிந்திருக்கும், புரிந்திருக்கும். இன்று இந்த GPS தொழில்நுட்பம் பல்வேறு பட்ட துறைகளில் பயன்படுகிறது. மற்றும் நம் வாழ்விலும் ஒரு முக்கிய அம்சமாக திகழ்கிறது – உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அது வேறு விடயம்!


GPS அமெரிக்க தொழில்நுட்பம் என்று முன்னரே கூறினேன். இது இலவசமாக பயன்படுத்தக்கூடியதாக இருந்தாலும் முழு கட்டுப்பாடும் அமெரிக்க இராணுவத்திடமே இருக்கிறது. இதனால் வேறு சில நாடுகளும் தங்களுக்கென்றே தனித் தனியான அமைப்புக்களை உருவாகியுள்ளன.


GLONASS – ரஸ்சியாவின் முழு உலகிற்குமான புவியிடங்காட்டி


Galileo – ஐரோப்பிய ஒன்றியத்தின் புவியிடங்காட்டி – 2014 இல்  தொடங்கியது, 2019 இல் பூரணப்படுத்தப்படும்.


Beidou – சீனாவின் புவியிடங்காட்டி – ஆசியாவுக்கும் மேற்கு பசுபிக் நாடுகளுக்கும் மட்டும்.


IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி – இந்தியா மற்றும் வடக்கு இந்து சமுத்திரப் பரப்புக்கு மட்டும்.


இப்போது GPS அல்லது இந்த புவியிடங்காட்டி என்பது பற்றி சற்று விளங்கி இருப்பீர்கள் என்று நினைகிறேன். GPS மற்றுமின்றி உங்கள் செல்பேசியின் சமிக்ஞை கோபுரம் மற்றும் WIFI போன்ற வேறுபட்ட தொழில்நுட்பங்களை வைத்தும் நீங்கள் இருக்கும் இடத்தை கண்டறியமுடியும்.

திருவோடு மரம்




வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பார்கள்.


 இந்த திருவோடு எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்று தெரியுமா? அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். 


இந்த மரம் ‘மெக்ஸிகன் காலாபேஷ்’ என்று அழைக்கப்படுகிறது. ‘பிக்கோனியசேஸி’ என்ற வாகை மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து தெற்கில் உள்ள கோஸ்டா ரிக்கா வரையுள்ள பகுதிகள்.


இந்தியாவைச் சேர்ந்த தாவரவியலாளர் ஸ்ரீகாந்த் இங்கல்ஹலிகர், மலர்களின் பல்வகை பெருக்கத்திற்காக ‘மெக்ஸிகன் காலாபேஷ்' மரத்தை வளர்க்க ஆரம்பித்தார். புனேவில் உள்ள 'ஆந்த்' என்னுமிடத்தில் இப்போது அது மரமாக வளர்ந்து நிற்கிறது.அத்துடன் பல்வேறு மடங்களிலும் இதனை வளர்த்து வருகின்றனர்.


இந்தியாவில் இந்த மரத்தின் அறிமுகம் பற்றி பேசிய இங்கல்ஹலிகார், "முக்தா கிர்லோஸ்கர் என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்தார். பிறகு அங்கிருந்து இடம் மாற்றப்பட்டு 500 வகையான தாவர இனங்களோடு சேர்த்து புனேவில் உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டது.


இதுவொரு சிறிய மரம். 8 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. இந்த மரம் பெரிய மலர்களை தண்டு மற்றும்கிளைகளுக்கு அடிப்பகுதியில் கொண்டது. மாலை நேரத்தில் பூக்கள் பூத்து, நறுமணத்தை வீசும் தன்மை கொண்டது. இந்த வாசனைக்கு சிறிய வகை வௌவால்கள் வந்து, இந்த மலர்களிலிருந்து தேன் எடுத்து பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகிறது.


மலரின் அமைப்பு, அளவு, நிறம், மணம், பூக்கும் நேரம் மற்றும் தேனை உமிழும் தன்மை ஆகியவற்றால் வௌவால்களை கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மை இந்த பூக்களுக்கு உண்டு. அதிக நறுமணமுள்ள தேனை பூக்களிலிருந்து உமிழ்வதால், வெளவால்களின் கோடை கால தாகத்தை தீர்க்கும் தன்மை இம்மரத்தின் பூக்களுக்கு உண்டு.


கடினத்தன்மை வாய்ந்த இந்த மரத்தின் பழங்கள் உடைப்பதற்கு கூட மிகக்கடினமாக இருக்கும். இதன் சுற்றளவு 7-10 செ.மீ. நாகலிங்க மரத்தில் இருக்கும் காய்களை போன்று தோற்றமுடையது. இந்த பழம் தன்னையே பாதுகாத்து கொள்ளும் குணாதிசயத்தை கொண்டது. இருந்தாலும் மற்ற பழங்களை போன்று நிலத்தில் போட்டால் எளிதாக வளர்ந்துவிடாது. பழத்திற்குள் இருக்கும் விதைகளை (சி-அலாட்டா) குதிரையாலோ அல்லது மனிதர்கள் எவராலுமோ சாதாரணமாக பிரித்தெடுத்துவிட முடியாது. யானையை போன்ற விலங்குகளை வைத்து முயற்சி செய்யலாம்.


விதையை மூடியுள்ள பழத்தோடு நிலத்தில் போடும்போது இது வளராது. கடினத்தன்மை வாய்ந்த ஓடுகளால் இதன் விதைகள் மூடப்பட்டுள்ளதால் காடுகளில் கூட பரந்து வளராமல் போய்விட்டது. அதனாலே இது ஒரு அரிதான மரமாகவும், மாறுபட்ட குணாதிசயத்தோடும் இருந்து வருகின்றன.


மரத்திலிருந்து விழும் இந்த பழங்கள் இருக்கும் இடத்திலிருந்தே முளைக்கும் திறனை இழந்ததால், ஓரிடத்திலிருந்து இன்னொரு பரவுவதும் அரிதாகி போனது. உள்ளூர் குதிரைகள் தன்னுடைய கால் பாதங்களால் இந்த பழத்தை உடைத்து பழத்திலிருக்கும் சதைப்பற்று மற்றும் விதைகளை சாப்பிடும் என்று இதை கவனித்தவர்கள் சொல்கின்றனர். உள்ளூர் குதிரைகளால் இந்த மர இனம் காக்கப்பட்டு நாம் பார்க்கக்கூடிய அளவில் இருந்து வருகிறது.


இந்த மரம் ஒன்றும் அரிதான ஒன்று அல்ல. பல திறந்தவெளி இடங்கள், புல்வெளிகள், ஆடு, மாடுகள் மேயும் இடங்களில் பார்த்திருக்கலாம். இதன் காய் மற்றும் பழங்கள் உடைக்கப்பட்டு உணவு, பானங்கள் அடைக்கும் பொருள்களில் மூடியாக பயன்படுத்தப்படுகிறது.



பழத்தின் கெட்டியான ஓடுகள் பிச்சைக்காரர்கள் பயன்படுத்தும் பாத்திரமாகவும் இருந்து வருகிறது. அதனாலேயே இந்த மரம் ‘திருவோடு மரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் விதைகளில் காணப்படும் புரதச் சத்தோடு இணைந்த லிக்கோரைஸ், இனிப்புச் சுவை வாய்ந்தது; சாப்பிடுவதற்கு ஏற்றது. ஹோண்டுராஸ், எல்சல்வடார் மற்றும் நிகாரகுவா போன்ற லத்தீன்-அமெரிக்கா நாடுகளில் ‘செமிலா டெ ஜிகாரோ’ என்ற பெயரில் உணவுபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

Jan 28, 2022

சிறப்பு மிக்க சிறு தானியங்கள்!



பல காலமாக ஏழைகளின் உணவாகவே பார்க்கப்பட்ட கம்புக்கும் கேழ்வரகுக்கும், இப்போது நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருக்கிறது. ஆமாம்... நட்சத்திர ஓட்டல்களின் மெனு பட்டியலில் இடம்பெறுகிற அளவுக்கு இவற்றின் அந்தஸ்து உயர்ந்திருக்கிறது இன்று. கையேந்தி பவன்களில் தொடங்கி கார்பரேட் கம்பெனிகளின் உணவுத் தயாரிப்புகள் வரை எல்லா இடங்களிலும் சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பார்க்க முடிகிறது. நோயற்ற வாழ்க்கைக்கும் நீடித்த இளமைக்கும் சிறுதானியங்களில் தீர்வு இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை!


கேழ்வரகு

நமது உடல் நன்றாக இயங்குவதற்கு ஊட்டச்சத்துகள் மிகவும் முக்கியம். சிறு குழந்தை முதல் வயதானவர் வரை எல்லோருக்கும் அந்தந்த வயதில் தேவையான சத்துகளில் முக்கியமானவற்றை கேழ்வரகில் இருந்து பெற இயலும். அரிசி சாதம் புழக்கத்தில் வருவதற்கு முன், நமது தமிழ்நாட்டில் கம்பையும் கேழ்வரகையும்தான் தினமும் உண்டார்கள். அவற்றில் நமது உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துகளுமே கிடைத்தன. அதிக நேரம் பசிக்காமலும் இருந்தது. ஆரோக்கியமாக இருந்தார்கள்.  காரணம், இதில் உள்ள 

அபரிமிதமான சத்துகள்!


100 கிராம் கேழ்வரகில் உள்ள சத்துகள் 

கலோரிகள் (ஆற்றல்) - 336 கிராம், மாவுச் சத்து - 72.6 கிராம், புரதம் - 7.7 கிராம், நார்ச்சத்து - 3.6 கிராம், கொழுப்பு - 1.5 கிராம், கால்சியம் - 350 கிராம், இரும்புச்சத்து - 3.9 மில்லி கிராம், நயாசின் - 1.1 மில்லி கிராம், தயாமின் - 0.42 மில்லி கிராம். ரிபோஃப்ளோவின் - 0.19 மில்லி கிராம்.


புரதம் 

பிறந்தது முதல் உடல் வளர்ச்சியடைய, திசுக்கள், செல்கள் உருவாக, எலும்புகள் பலமுடன் இருக்க, மூளை நன்றாக இயங்க புரதச்சத்து மிக அவசியம். பல முக்கிய அமினோ அமிலங்களின் சேர்க்கையையே புரதம் என்கிறோம். பொதுவாக ‘முழுமையான புரதம்’ என்பது சைவ உணவில் கிடைப்பது கடினம். கேழ்வரகிலோ மற்ற தானியங்களை விட புரதம் சிறந்த சேர்க்கையில் உள்ளது. கேழ்வரகை முளைகட்டும் போதும், வறுக்கும் போதும் புரதம் சுலபமாக ஜீரணமாகும் அளவில் மாற்றப்படுகிறது. 9 முக்கிய அமினோ அமிலங்களும் ஒரே உணவில் கிடைக்கும்போது கேழ்வரகை முழுமையான உணவு என்றுதானே சொல்ல வேண்டும்? இந்த அமினோ அமிலங்கள் இருக்கும் போது, பிற அமினோ அமிலங்களை நமது உடலே உற்பத்தி செய்து கொள்ளும்.


மாவுச்சத்து 


நமது உடல் நன்றாக வேலை செய்ய  தேவையான சக்திக்கு ஆதாரமாக உள்ளது மாவுப்பொருளே. ‘கார்போஹைட்ரேட்’ எனப்படும் இந்த மாவுப் பொருள் வேறு பல தானியங்களில் ‘குளூட்டன்’ (Gluten) எனும் பசைத் தன்மை உடையதாக இருக்கிறது. இது அதிகம் இருக்கும் போது சுலபமாக எடை கூடி விடும் (தேவைக்கு அதிகமாக உண்ணும்போது, இந்த மாவுச்சத்து கொழுப்பாக சுலபமாக மாற்றப்படும்). கேழ்வரகிலோ இதுபோன்ற மாவுச்சத்து அறவே இல்லை. எடையை அதிகரிக்கச் செய்யாத நல்ல மாவுச்சத்தை நாம்சிறுதானியங்கள் மூலம் பெற இயலும். கேழ்வரகில் இருக்கும் மாவுச்சத்து கரையும் தன்மை உடைய நார்ப்பொருளுடன் கூடி இருப்பதால், ரத்தத்தில் குளூக்கோஸை மெதுவாகவே ஏற்றும். 


கொழுப்பு 

வைட்டமின்கள் உட்கிரகிக்கப்படுவதற்கு மட்டுமல்ல... பல முக்கிய வேலைகள் நன்கு நடைபெறத் தேவையான நல்ல கொழுப்பும் கேழ்வரகில் இருக்கிறது.


வைட்டமின்கள்

நீரில் கரையும் வைட்டமின்களான - பி காம்ப்ளெக்ஸில் முக்கியமான - தயாமின், ரைபோஃப்ளேவின், நயாசின், ஃபோலிக் அமிலம் போன்றவை கேழ்வரகில் உள்ளன. நரம்புகளின் உறுதிக்கும், உடலில் மாவுச்சத்து சீராக பயன்படுத்தப்படுவதை கவனிக்கும் பணிக்கும், பல முக்கிய வேதிவினைகள் நடைபெறவும், செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் இந்த வைட்டமின்கள் அவசியம். கேழ்வரகை முளைகட்டும்போது வைட்டமின் ‘சி’ கிடைக்கும். நோய் எதிர்ப்புத் திறனுக்கும், உடலில் இரும்புச் சத்து உட்கிரகிக்கப் படுவதற்கும் இந்த வைட்டமின்  தேவை.


தாது உப்புகள் 

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து  உள்ளிட்ட பல முக்கிய தாது உப்புகள்  கேழ்வரகில் உள்ளன.   


கால்சியம் 

நமது ஒரு நாளையத் தேவை 400 மில்லிகிராம் கால்சியம். 100 கிராம் கேழ்வரகில் 350 மில்லி கிராம் கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பின் வளர்ச்சிக்கும் அடர்த்திக்கும் பலமான பற்கள் வளருவதற்கும் கால்சியம் முக்கியமாகத் தேவை. தாய்ப்பாலுக்கு அடுத்து நல்ல கால்சியத்தை பெறுவதற்கு கேழ்வரகுதான் நமது முன்னோருக்குஉதவியது. பால் அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு கேழ்வரகை ஊறவைத்து, பாலெடுத்து வடிகட்டி, தண்ணீர் ஊற்றி காய்ச்சி தரும்போது, அவர்களுக்குத் தேவையான கால்சியம் சுலபமாகக் கிடைக்கும். பிறந்து 28 நாட்களே ஆன குழந்தைகளுக்குக்கூட இதைத் தரலாம். 


6 மாதம் ஆன குழந்தைகளுக்கு கேழ்வரகு சத்துமாவு ஒரு முழுமையான உணவாக அமைகிறது.கர்ப்பம் தரித்த பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், அதிக அளவில் கால்சியம் தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு கேழ்வரகு மிகவும் உதவியாக இருக்கும். மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு கால்சியம் சுலபமாக உறிஞ்சப்படாமல் இருக்கும். கேழ்வரகில் இருந்து பெறப்படும் கால்சியம் நன்கு உறிஞ்சப்படும். இதை வாரம் 3 நாட்களாவது உட்கொண்டால், ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் பலமிழந்த நிலையைத் தவிர்க்க இயலும்.


இரும்புச்சத்து 


உடலில் ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாவதற்கும் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைத் தரும் ‘ஹீமோகுளோபின்’ குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் இரும்புச்சத்து மிக அவசியம். இந்த தானியத்தோடு இணை உணவுகளை சேர்த்து தயாரிக்கும் போது சுலபமாக உட்கிரகிக்கப்படும் நிலையில் நமக்கு இரும்புச்சத்து கிடைக்கும். ரத்தசோகை வராது.


பாஸ்பரஸ் 

நமது உடலில் திசுக்கள் உருவாகி  இயங்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் உருவாக்கத்துக்கும் அவசியமான பாஸ்பரஸ் சத்து கேழ்வரகில் தேவையான அளவு கிடைக்கிறது.


நோய் நீக்கும் தானியம்!

இப்போது மிகவும் பரவலாக இருக்கும் உடல் இயக்கக் குறைபாடுகள் வராமல் இருக்க உதவி புரியும் கேழ்வரகை நாம் அடிக்கடி உண்ண வேண்டும். நோய்களை விட இந்தப் பிரச்னைகள் உள்ளவர்களே அதிகம். வராமல் தடுப்பது நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவில்தான் இருக்கிறது. இந்த உடல் இயக்கக் குறைபாட்டில் மிகவும் அதிகமாக உள்ளது நீரிழிவு.


* நீரிழிவு (சர்க்கரை நோய்)க்கு... 

ரத்தத்தில் குளுக்கோஸை உடனே உயர்த்தாமல் மெதுவாக ஏற்றும் தன்மை கேழ்வரகில் உள்ளது. ‘க்ளைஸிமிக் இண்டெக்ஸ்’ (Glycemic index) மிகக்குறைவாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மற்ற தானியங்களுக்கு நல்ல மாற்றாக அமையும்.


* உடல் எடை குறைய...

இதில் உள்ள ட்ரிப்டோபன் (Tryptophan) என்னும் அமிலம் பசியைத் தூண்டும் உணர்ச்சியை குறைக்கும்.


* கொலஸ்ட்ரால் குறைய... 

இதிலுள்ள லெசிதின், மித்யோனைன் எனப்படும் அமினோ அமிலங்கள் கொலஸ்ட்ராலை குறைக்கும்.


* கொழுப்பு படியாத கல்லீரலுக்கு...

இதிலுள்ள த்ரியோனைன் எனப்படும் அமினோ அமிலம் கல்லீரலில் கொழுப்பு படியும் தன்மையை குறைப்பதால் ‘கொழுப்பு படிந்த கல்லீரல்’ எனப்படும் பிரச்னை வராமல் இருக்கும்.


* பக்கவாதம், உயர் ரத்த அழுத்தத்துக்கு...

ரத்தக்குழாயில் படியும் கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளதால் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வராமல் தடுக்கும்.


* தூக்கமின்மை, மனச் சோர்வுக்கு...

இதில் உள்ள ‘ட்ரிட்டோபன்’ என்னும் அமினோ அமிலம் மூளைக்குச் செல்லும்செல்களுக்கு நல்ல சக்தியைத் தரும். அதனால் உடல் சோர்வு, மனச் சோர்வு, தூக்கமின்மை குறையும்.


* யாருக்கு ஓ.கே? யாருக்கு நோ?

கோதுமை அலர்ஜி, பால் அலர்ஜி உள்ளவர்கள் அதற்குப் பதிலாக கேழ்வரகை தினமும் உண்ணலாம். பாதிப்பு ஏற்படாது. சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இந்த தானியத்தை அதிகமாகவும் தினமும் சாப்பிடக் கூடாது.


கேழ்வரகு பெருமைகள் கேளீர்!

கேழ்வரகு பயிரிட அதிகத் தண்ணீர் விட தேவையில்லை. பஞ்ச காலங்களில் கூட பயிரிட இயலும். வருடம் முழுவதும் சுலபமாக வளரும் தன்மை உடையது. உடலில் கட்டிகள் வராமல் பாதுகாக்கும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு. அதிகமாக வியர்க்கும் தன்மை உடையவர்கள் கேழ்வரகை அடிக்கடி சேர்ப்பதால் குணம் தெரியும். அதிகம் வியர்க்காது. வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று தோஷங்களையும் சமன்படுத்தும் திறன் உடையது கேழ்வரகு. வெயில் காலத்தில் அடிக்கடி உண்ணலாம். குளிர்ச்சியை தரக்கூடிய உணவு. கி.மு. 2300க்கு முன்பிருந்தே இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் கேழ்வரகை உண்டார்கள். கேழ்வரகு கர்நாடகாவில் அதிகம் பயிரிடப் படுகிறது. கேழ்வரகின் மேல் தோலை மற்ற தானியங்களைப் போல் நீக்க இயலாது. பாலீஷ் செய்ய இயலாது. கேழ்வரகு மாவை சலிக்காமல் பயன்படுத்தும் போது முழுமையாக நார்ச்சத்து கிடைக்கும்.


சத்துமாவு செய்வது எப்படி?

1 கிலோ கேழ்வரகை முளை கட்டி, நிழலில் உலர்த்தி, கடாயில் நல்ல மணம் வரும் வரை வறுக்கவும் (கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வறுக்க வேண்டும்). 200 கிராம் பஞ்சாப் கோதுமையை நன்றாக வறுக்கவும். 50 கிராம் பொட்டுக்கடலை, 200 கிராம் பயத்தம் பருப்பை தனியாக நன்கு வறுக்கவும். இவை எல்லாவற்றையும் ஒன்றாக மாவாக அரைக்கவும். இனிப்புச் சுவையுடன் பால் சேர்த்து அருந்துபவர்களானால் இதோடு பாதாமும் குங்குமப்பூவும் சேர்க்கலாம். கஞ்சியாகக் காய்ச்சி உப்பும் மோரும் கலந்தும் குடிக்கலாம்.

உயிரினங்களைத் தேடி நீண்ட பயணம்


பூமியில் இருந்து விண்வெளியை நோக்கி ஒரு கல்லை எறிந்தால் கடலில்லாத கோளில் அது விழுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக்குறைவு என காமடியாகக் கூறுமளவிற்கு கடந்த தசாப்தத்தில் கோள்களைப் பற்றியும், துணைக்கோள்களைப் பற்றியும் நாம் கண்டறிந்த விடையங்கள்  மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன.


ஒரு காலத்தில் பூமியில் மட்டுமே திரவநிலையில் நீர் இருக்கிறது என்று நாம் கருதியதற்குக் காரணம் இருக்கிறது. சூரியனில் இருந்து பூமி சரியான தொலைவில் இருக்கிறது, அதனால் நீரை திரவநிலையில் வைத்திருக்கப் போதுமானளவு வெப்பநிலை பூமிக்குக் கிடைக்கிறது. மிக அருகில் இருந்தாலும் நீர் ஆவியாகிவிடும், அதேபோல தொலைவில் இருந்தாலும் நீர் உறைந்து பனிக்கட்டியாகிவிடும். எனவே செவ்வாய்க்கு அப்பால் இருக்கும் கோள்களிலும், துணைக்கோள்களிலும் நீர் திரவநிலையில் இருப்பதற்கு சத்தியம் இல்லை என கருதப்பட்டது. ஆனால் தொண்ணூறுகளில் இருந்து நாம் கண்டறிந்த விடயங்கள் சூரியத்தொகுதியின் நிலை அப்படியல்ல என்று  பறைசாற்றியது.


உறைந்த பனிப்பாறைகளுக்கு கீழே உப்புநீர் சமுத்திரம் யுரோப்பாவில் இருக்கிறது. வியாழனின் துணைக்கோள் யுரோப்பா, சனியின் துணைக்கோள் என்சிலாடஸ் என நாம் கண்கூடாக பார்த்த நீர் திரவநிலையில் இருப்பதற்கான சான்றுகளை வெளிப்படையாகக் கொண்ட துணைக்கோள்கள், அவற்றின் அண்ணன் தங்கைகளும் திரவநிலையில் நீரைக் கொண்டிருக்கலாம் என  ஒரு புதிய வழியைக் காட்டுகின்றன.


சனியின் துணைக்கோள் என்சிலாடசை எடுத்துக்கொண்டால், அதன் தென் துருவத்தில் இருக்கும் பனிப்பாறைகளின் வெடிப்பின் ஊடாக பனிப்பாறைகளுக்கு கீழே திரவநிலையில் இருக்கும் நீர், வெந்நீர் ஊற்றுப்போல விண்வெளியை நோக்கி டியுப்பில் இருந்து வேகமாக பாயும் தண்ணீர் போல பீச்சியடிக்கப்படுகிறது.


இதற்கும் 2020 இற்குப் பிறகு தனிப்பட்ட ஒரு விண்கலத்தை அனுப்ப திட்டம் இருந்தாலும், சனியின் என்சிலாடசை விட வியாழனின் யுரோப்பா மீதே விஞ்ஞானிகளின் கண்கள் வட்டமிடுகின்றன. அதற்குக் காரணம், என்சிலாடசைவிட யுரோப்பா பெரியது. நிறைய நீர், நிறைய வெப்பம், சேதன மூலக்கூறுகள் மற்றும் இதனையெல்லாம் விட முக்கியமான அதன் பூகோள செயற்பாடு யுரோப்பா வெறும் உறைந்த உலகமில்லை என்பதை எமக்கு தெளிவாகவே வெளிப்படுத்துகிறது.


நமது நிலவைவிடச் சிறிய சைஸ் யுரோப்பா, பூமியில் இருந்து நோட்டமிடும் போது அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை. ஆனால் அருகில் இருந்து பார்ர்க்கும் போது பனிப்பாறையால் உருவான மேற்பரப்பில் இருக்கும் பிரவுன் நிற வெடிப்புகளும், கசிவுகளும், யுரோப்பாவின் செறிவான கனிமங்கள் இருப்பதை தெளிவாக விளக்குகிறது. ஆனாலும் மிக முக்கியமான கேள்வி, சூரியனிலிருந்து 780 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கும் வியாழனைச் சுற்றிவரும் யுரோப்பாவில் எப்படி நீர் திரவநிலையில் இருக்கமுடியும் என்பதுதான். அதற்கான விடை வியாழனின் ஈர்ப்புவிசையில் இருக்கிறது.


வியாழனை 670,900 கிமீ தொலைவில் சுற்றிவரும் யுரோப்பா வியாழனின் மிதமிஞ்சிய ஈர்ப்புவிசையால் ஒரு ரப்பர் பந்துபோல நெருக்கப்படுகிறது. இந்த நெருக்கல் மற்றும் நெருடலால் உருவாகும் உராய்வு விசை மற்றும் மையப்பகுதியின் வெப்பம் என்பன ஒன்று சேர்ந்து கோள் முழுதுமான சமுத்திரத்தை மேலே மிதக்கும் பனிக்கட்டிகளுக்கு கீழே உருவாக்கியுள்ளது.


1990களில் கலிலியோ விண்கலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கண்டுபிடிப்புகளில் இருந்து தடிப்பான பனிப்பாறைகளுக்கு கீழே திரவநிலையில் நீர் இருக்கவேண்டும் என்று  நிச்சயமாகத் தெரியும். யுரோப்பாவின் சமுத்திரம் தோராயமாக 80-170 கிமீ வரையான ஆழத்தைக் கொண்டிருக்கலாம். அப்படியாயின் பூமியில் இருக்கும் மொத்த சமுத்திர நீரைவிட இரண்டு மடங்கு அளவான நீர் யுரோப்பாவில் திரவநிலையில் இருக்கிறது!


யுரோப்பாவின் மேற்பரப்பில் காணப்படும் பனிப்பாறைகளில் பல வெடிப்புகள் காணப்படுவதை கலிலியோ விண்கலம் கவனித்தது.

உயிரினம் தோன்ற திரவநிலையில் நீர் மட்டும் போதாது, யுரோப்பாவில் நுண்ணங்கிகளை உருவாக்கத் தேவையான ரசாயன சக்திமுதல்களும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே சூரியத் தொகுதியில் உயிரினத்தை தேடிச்செல்லும் வழியில் முதலாவது நிறுத்தமாக யுரோப்பா அமையும்.


யுரோப்பாவை ஆய்வு செய்வதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. முக்கிய பிரச்சினை பல கிமீ தடிப்பான பனிப்பாறைக்கு கீழே தான் யுரோப்பாவின் சமுத்திரம் இருக்கிறது. ஆகவே நேரடியாக சமுத்திரத்தை பார்வையிட முடியாது. சராசரியாக 15 கிமீ ஆழத்திற்கு துளையிடுவது என்றாலும் கூட அதற்கு புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியப்படவேண்டும். மேலும் பூமியில் அவ்வளவு ஆழத்திற்கு துளையிடுவதே கடினமான காரியம், ஆளில்லாமல் ரோபோக்களை வைத்து மட்டுமே யுரோப்பாவில் அதனை நடத்தி முடிப்பது என்பது சயின்ஸ் பிக்சன் கதைகளில் மட்டுமே தற்போதைக்கு சாத்தியமான விடையம்.


அப்படியென்றால் யுரோப்பாவின் சமுத்திரத்தை ஆய்வு செய்வது முடியாத காரியமா? அதிர்ஷ்டவசமாக யுரோப்பாவின் சமுத்திரம், மேற்பரப்புடன் தொடர்பை வைத்திருக்க பல வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, கோளின் மையம் மூலம் கடத்தப்படும் வெப்பம் காரணமாக, பேற்பரப்பு பாறையின் அடியில் இருக்கும் சிறிய பனித்துண்டுகள் மேலெழும்பி மேற்பரப்பை நோக்கி வரும், எனவே யுரோப்பாவின் மேற்பரப்பை தெளிவாக கற்பதன் மூலம் தடிப்பான பனிப்பாறைக்கு கீழே என்ன நடக்கிறது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.


2022 இல் Europa Clipper எனும் அருகில் பறந்துசெல்லும் விண்கலத்தையும், அதன் பின்னர் தரையிறங்கும் விண்கலத்தையும் அனுப்பும் திட்டத்தை தற்போது நாசா மேற்பார்வை செய்கிறது. இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கம், யுரோப்பாவில் உயிர்வாழக்கூடிய அம்சங்கள் இருக்கின்றதா என்று அறிவதே, அதாவது திரவ நீர் மற்றும் நிலத்தடி ரசாயன செயற்பாடுகள் என்பன பற்றி ஆய்வு நடத்துவது.


நாசாவின் யுரோப்பா Clipper விண்கலம்.

Clipper விண்கலம் ஒன்பது விதமான ஆய்வுக்கருவிகளை கொண்டுசெல்லும். அவற்றில் மேற்பரப்பை படமிட காமரா, ஊடுபனி ரேடார் மூலம் முப்பரிமாணத்தில் பனிப்பாறைகளை படமிடும் கருவி, அடுத்ததாக காந்தமானி மூலம் பனிப்பாறைக்கு கீழே இருக்கும் சமுத்திரத்தின் பண்புகளை கண்டறியும் கருவி என்பன உள்ளடங்கும்.


யுரோப்பாவின் சமுத்திரத்தின் அடியில் இருக்கும் நிலத்தடி எரிமலைத் துவாரங்கள், வெப்பம் மற்றும் ரசாயன செயற்பாடுகள் இடம்பெறக்கூடிய முக்கிய புள்ளிகளாக இருக்கும். பூமியிலும் இப்படியான இடங்களில் இருந்தே முதலாவது உயிரினங்களும் உருவாகியிருக்கலாம். எனவே இப்படியான பகுதிகள் யுரோப்பாவில் இருப்பது அங்கே உயிரினங்கள் தோன்றியிருக்கக்கூடிய வாய்ப்பை அதிகரிக்கும்.


சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றைய சமுத்திரக்கோள்களை விட யுரோப்பா எப்படி வேறுபடுகிறது என்றால், அதற்குக் காரணம் அது சுற்றிவரும் அரக்கன் வியாழன். யுரோப்பாவின் பயணப்பாதை வியாழனின் காந்தப்புல எல்லைக்குள் வரம்புமீறி செல்கிறது. இதனால் யுரோப்பாவில் இருக்கும் அணுத்துணிக்கைகள் முடுக்கப்படுகின்றன. மோட்டார் ஒன்று இயங்குவதை கற்பனை செய்துபாருங்கள்.


இந்தக் காந்தப்புலக் கதிர்வீச்சு, யுரோப்பாவின் மேற்பரப்பில் ஆக்சிஜனேற்றிகளை உருவாக்குகிறது. பூமியில் இப்படியான ஆக்சிஜனேற்றிகளை ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தி உயிருக்குத் தேவையான சக்தி உருவாக்கப்படுகிறது. ஆனால் யுரோப்பாவின் மேற்பரப்பில் உருவாக்கப்படும் ஆக்சிஜனேற்றிகள், தடிப்பான பனிப்பாறைகளை கடந்து உள்ளிருக்கும் கடலிற்குள் சென்றால் மட்டுமே அங்கே இருக்கும் ஒரு செல் உயிரினங்கள் அவற்றைப் பயன்படுத்த முடியும்.


நாம் மேலே பார்த்தது போல எப்படி வெப்பக்காவுகை மூலம் பனிப்பாறையின் அடிப்பகுதிகள் மேலே வருமோ, அதே செயற்பாடு, இந்த ஆக்சிஜனேற்றிகளை கடலுக்குள் கொண்டுசெல்லும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.



வியாழனின் மிதமிஞ்சிய காந்தப்புலக் கோளத்தினுள் யுரோப்பா சுற்றுவதால், விண்கலங்களை நீண்ட காலத்திற்கு ஆராய்ந்து அனுப்புவதிலும் சிக்கல் இருக்கிறது. எப்படி யுரோப்பாவின் அணுக்களை இந்தக் காந்தப்புலம் பாதிக்கிறதோ, அதேபோல விண்கலங்களின் மின்னணுக்கருவிகளையும் அதே காந்தப்புலம் பாதிக்கிறது. எனவே, சில வாரங்கள், அல்லது சில மாதங்கள் என்பதுதான் இங்கே அனுப்பப்படக்கூடிய விண்கலங்களின் வாழ்வுக்காலம்.


எப்படியிருப்பினும், யுரோப்பவை நோக்கி தனிப்பட்ட கவனத்துடன் ஒரு திட்டத்தை அனுப்பினால் மட்டுமே அங்கே உயிர்கள் இருக்கிறதா, இருந்தால் எப்படியான உயிரினங்கள் அங்கே தோன்றியிருகின்றன என்று கண்டறிய முடியும் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.


வியாழனை நோக்கி 90களில் கலிலியோ விண்கலத் திட்டத்தை அனுப்பும் போதே, யுரோப்பாவையும் ஆய்வு செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் 00 களில் வியாழனின் பனியால் உருவான துணைக்கோள்களான கனிமெட் மற்றும் யுரோப்பா ஆகியவற்றுக்கு அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் சேர்ந்து விண்கலங்களை அனுப்ப திட்டம் தீட்டப்பட்டாலும், பணப்பற்றாக்குறை காரணமாக அந்தத்திட்டம் கைவிடப்பட்டது.


அந்தத் திட்டத்தை தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் JUICE (Jupiter Icy Moons  Explorer) என்கிற திட்டமாக 2022 இல் அனுப்ப தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்தத் திட்டம் 2030 இல் வியாழனை அடையும். அதன் பின்னர் அடுத்த மூன்று வருடங்களுக்கு வியாழன், கனிமெட், களிஸ்ட்டோ மற்றும் யுரோப்பா ஆகியவற்றை ஆராயும்.


இங்கிருக்கும் பெரும்பாலான விஞ்ஞானிகளுக்கு யுரோப்பா மீதே பார்வை இருக்கிறது. நாசாவின் பெரிய திட்டங்களான காசினி மற்றும் கியுரியோசிட்டி ஆகிய திட்டங்களை விட யுரோப்பாவை ஆய்வு செய்ய அதிகளவு செலவிடவேண்டி வரும் என்பதும் அவர்களுக்கு நன்றே தெரிந்திருக்கிறது.


தற்போது யுரோப்பா நோக்கி செல்லத் தயாராகிக்கொண்டிருக்கும் Clipper, வியாழனின் மிதமிஞ்சிய கதிர்வீச்சுக்கும் காந்தப்புலத்திற்கும் ஆளாகும். ஆகவே அதற்கென தனிப்பட்ட கவனிப்புகளோடு Clipper தயாரிக்கப்படுகிறது. கதிர்வீச்சுக்கு எதிரான பாதுகாப்பை பலப்படுத்துவதிலும் இருக்கும் சிக்கல், Clipper இல் உள்ள கருவிகளும் வெளிநோக்கி வேண்டும் அல்லவா? ஆகவே முற்றாக கதவை மூடினாலும் விண்கலத்தை அங்கே அனுப்புவதில் பயனில்லை.


எனவே நாசா விஞ்ஞானிகளின் முடிவு என்னவென்றால், யுரோப்பாவை Clipper சுற்றிவராமல், வியாழனை அது மூன்றரை ஆண்டுகளுக்கு சுற்றும். அக்காலப்பகுதியில் குறைந்தது 45 முறையாவது யுரோப்பாவிற்கு மிக அருகில் Clipper பறக்கும், அப்போது தேவையான அனைத்து ஆய்வுகளையும் Clipper மேற்கொள்ளும்.



அதன்பின்னர் யுரோப்பாவில் தரையிறங்கி ஆய்வுகளை செய்யக்கூடிய விண்கலம் அனுப்பப்படும். ஆனால் இதுவரை அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் ஆர்வமாகவே உள்ளனர். Clipper விண்கலம், தரையிறங்குவதற்கு ஏற்ற இடத்தை தெரிவு செய்யத் தேவையான தகவல்களை வழங்கும்.


நமக்கு இது ஒரு புதிய அத்தியாயமே. பல விண்வெளி உயிரியலாளர்களும், விஞ்ஞானிகளும், நாம் கண்டறியும் முதலாவது வேற்றுலக உயிரினம் பனியால் ஆன துணைக்கோளில் தான் இருக்கும் என்று நம்புகின்றனர். Clipper  வழிகாட்டும் என நாமும் எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்.

தமிழர் நிலத்தின் போர்க் கருவி - வளறி

 வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை எறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தொலைவில் இருக்கும் எதிரியைத் தாக்குவதற்குச் சிறந்த ஆயுதம் இதுவாகும். வளரிக்கு ஒத்த எறிகருவிகளை எரிவளை, திகிரி, வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

மரத்திலும் இரும்பிலும் தந்தத்திலும் செய்து பயன்படுத்தப்பட்ட வளரி எறிகருவியின் வகைகளை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் சில அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

இக்கருவி பொதுவாகத் தட்டையாகவும் (Flat), வளைவுக்கோண (Angle of Curvature) வடிவிலும், ஒருபுறம் கனமாகவும், மற்றொரு புறம் இலேசாகவும், கூர்மையான வெளிப்புற விளிம்புடன், வடிவமைத்தார்கள். இயக்க எதிர்வினையை (Aerofoil) உண்டாக்கியவாறு காற்றில் வேகமாகச் சுழன்று சென்று இலக்கைத் தாக்கும். இலக்கை தாக்கிவிட்டு திரும்பி வரும் வண்ணமும், திரும்பாத வண்ணமும் வளரியை ஏறிய முடியும்.


காற்றில் இயங்க வல்ல ஏரோடைனமிக் பண்புகளுடன் இலக்கு (Target) தொலைவெல்லை (Range), திசைவேகம் (Velocity), தொடக்க எறியியல் (Initial Ballistics), இடைநிலை எறியியல் (Intermediary Ballistics) மற்றும் இலக்கு ஏறியியல் (Terminal Ballistics) ஆகிய பண்புகளையும் கொண்டது. காற்றில் நிலை நிறுத்துவதற்காக (Stabilization) தட்டையான வடிவமைப்பும், வளை கோணமும் (Angle of the curvature), காற்றில் பயணிப்பதற்கான துல்லியமான எடையும், சமநிலைப் புள்ளியும் (Point of Equilibrium), காற்றை எதிர்த்து இலக்கை நோக்கி துல்லியமாகத் தாக்கும் திற்னும் கொண்டது வளரி.


பண்டைத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி பல்வேறு வடிவமைப்புகளை உடையது. வளைந்த இறக்கை வடிவம் (Angled Feather Shaped) அனைத்து வளரி வடிவமைப்புகளிலும் காணப்படுகிறது. மான்வேட்டையில் பயன்படுத்தப்பட்ட வளரி விலங்கினைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. போரில் பயன்பட்ட பட்டையான வளரி எறிகருவிகள் துல்லியமான வடிவமைப்புகளையும் கூரான வெளிப்புற விளிம்புகளையும் கொண்டது. தப்பிக்க எண்ணியவாறு ஓடியவரை உயிருடன் பிடிக்க வளரியை எறிவதுண்டாம். போர் வீரர்கள் தங்களுடைய கொண்டையில் வளரியைச் செருகி வைத்திருப்பார்களாம். தாக்க வேண்டிய சமயத்தில் கொண்டையிலிருந்து உருவிய வளரியின் தட்டையான கனமற்ற முனையைக் கையில் பிடித்துத் தோளுக்கு மேலே உயர்த்திப் பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிவதுண்டாம். புதுக்கோட்டை திவானாகிய விஜய இரகுநாத பல்லவராயர் வளரியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எழுதியுள்ளார்.


வளரி காற்றில் வேகமாகச் சுழன்று சென்று இலக்கைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடும். திரும்ப வரும் வளரி ஆபத்தானது. எறிந்தவரைத் தாக்க வல்லது. எனவே எறிந்தவர் இதனைக் கவனமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.


சங்க இலக்கியத்தில் வளரி

குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல்

நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;

(புறநானூறு 339 , 4 - 5)


ஆனிரை மேய்க்கும் கோவலர் பூப் பறிக்கும்போது அங்கு மேயும் முயலை நோக்கி அவர்கள் குறுங்கோல் என்னும் வளரியை வீசுவர். அந்த முயல் தப்பி ஒடி அங்குள்ள பரந்த நீர்நிலையில் வாளைமீனோடு சேர்ந்து புரண்டு துள்ளும்.


பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச்

சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய

பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ!

(புறநானூறு 233, 2 - 4)


அகுதை கூடல் நகரின் அரசன். இவன் ஒரு வள்ளல். அவன் பரிசில் வேண்டுவோருகெல்லாம் யானைகளைப் பரிசாக வழங்கியவன். ஒருமுறை பகைவன் வீசிய சக்கரம் (வளரி?) அவன் மார்பில் பாய்ந்தது எனப் பேசப்பட்டது. அந்தக் காயம் ஆறி அவன் பிழைத்துக்கொண்டான்.


எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்

மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை,

குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன

(புறநானூறு 347, 4 - 6)


அகுதை கூடலை ஆண்டுவந்த குறுநிலத் தலைவன் . இவன் ஒரு வள்ளல். போர்க்கோலம் பூண்டு அவன் சூடிய தும்பைப் பூ வாடியது. அவன்மீது பகைவர் சக்கரம் வீசினர். அது அவன் மார்பில் பட்டு அதன் கூராக்கப்பட்ட முனை முறிந்துபோயிற்று. சக்கர வீச்சால் குழைந்துபோன அவன் மார்பில் அணிந்திருந்த தும்பைப் பூவின் அவன் மார்பில் கமழ்ந்தது.


மறவர்களின் ஒரு பிரிவினரான அகதை மறவர்களின் மூதாதையனாக அகுதை கருதப்படுகிறான். அகுதை மன்னன் ஆண்டுவந்த கூடல் என்பது  இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் திரு.எஸ்.இராமச்சந்திரன் கருதுகிறார். "'பொன்புனை திகிரி' (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன்" என்று எஸ்.இராமச்சந்திரன் விவரிக்கிறார்.


புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,

கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்

வடி நவில் அம்பின் வினையர்

(நற்றிணை-48, 5 - 7)

முல்லை நிலம் பூத்து மணம் பரப்பிக்கொண்டிருக்கும் காட்டுவழி. இடி போன்ற முழக்கத்துடன் வழிப்பறி மறவர்கள் அங்குத் தோன்றுவர். மின்னல் வேகத்தில் தாக்கும் கோலை உடையவர். கூர்மையான அம்பு எய்வதில் அவர்கள் வல்லவர்கள்.


ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆவணங்களில் வளரி

கிழக்கிந்தியக் கம்பெனி (East India Company) இந்திய பிரிட்டிஷ் அரசாங்கத்துக் (Indian British Raj) குறிப்புகளில் வளரி பற்றி வியக்கவைக்கும் செய்திகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் விசித்திரமான ஆயுதம் (Strange Weapon) வளரி ஆகும். இரண்டு விதமான வளரி வடிவங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தன. பொதுவாக இவை மரத்தினால் தயாரிக்கப்பட்டவை ஆகும். கனமான மேல்பகுதியும், இலகுவான கீழ்பகுதியும் கூரான வெளிப்புற விளிம்புகளையும் கொண்டது வளரி குச்சி ஆகும்.


மருதுபாண்டியர்களும் வளரியும்

சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்த மருது பாண்டியர்கள் வளரி ஆயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இம்மன்னர்களின் தளபதியான போர்ப்படை தளபதியும் வளரி எறிவதில் வல்லவருமான வைத்தியலிங்க தொண்டைமான் வளரி ஏறி படையை நடத்தியுள்ளார். சிவகங்கை அருங்காட்சியகத்தில் இந்த வளரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..

பெரிய மருதுவின் வளரியின் வல்லமை

பெரிய மருதுவும் வளரி வீசுவதில் வல்லவராம். இவர் ஒரு முறை தன் வளரி வீசும் திறனை பார்வையாளர்கள் முன் செய்து காட்ட மதுரையில் உள்ள வண்டியூர் தெப்பக் குளத்திற்குச் சென்றார். இந்த தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது. இதன் நடுவில் நீராழி மண்டபம் ஒன்று உள்ளது.

தெப்பக்குளத்தின் ஒரு கரையில் தன் கால்களை நன்கு தரையில் ஊன்றி நின்றவாறு எதிர் கரையை நோக்கி வளரி வீசினார். இவர் வீசிய வளரி தெப்பக்குளத்தின் நடுவே இருந்த உயரமான நீராழி மண்டபத்திற்கு மேலே உயரப் பரந்து எதிர்க்கரையில் போய் விழுந்தது. வளரி வீசிய போது இவர் இடுப்பில் அணிந்திருந்த தங்க அரைஞான் கயிறு அறுந்து கீழே விழுந்த்ததாம்.


கர்னல் ஜேம்ஸ் வெல்ஷின் இராணுவ நினைவுகள் நூலில் வளரி


கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் (Colonel Jamesh Welsh) (கி.பி. 1790–1848) கிழக்கிந்திய கம்பெனியின் மாண்புமிகு கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ராணுவத்தில் (1757–1895) (The Madras Army of the Honourable East India Company 1757–1895) ஆங்கில அதிகாரியாக இருந்தவர். ஜேம்ஸ் வெல்ஷ் 1795 ஆம் ஆண்டு சிவகங்கை மருது சகோதரர்களுள் இளையவரான சின்ன மருதுவை அரண்மனை சிறுவயல் என்ற ஊரில் பார்க்கச் சென்றுள்ளார். இவர் எழுதிய இராணுவ நினைவுகள் (Military Reminiscences) என்ற நூலை இதை லண்டன் பதிப்பகம் ஒன்று 1830 ஆம் ஆண்டு வெளியிட்டது. இவர் தன்னுடைய இராணுவ நினைவுகள் (Military Reminiscences) நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்:


"சின்னா மருது தான் எனக்கு முதலில் ஈட்டியை வீசவும், வளரிக் குச்சியை (colliery stick) வீசவும் கற்றுக் கொடுத்தார். வளரி வேறெங்கும் அறியப்படாத ஆயுதம். ஆனால் (வளரிக் கலையில்) தேர்ந்த ஒரு வல்லவரால், நூறு கஜத்திற்கு உட்பட்ட தூரத்தில் உள்ள எந்த இலக்கை நோக்கி குறிதவறாமல் வீச முடியும்."


இவ்வாறு சின்ன மருதுவைப் பார்த்து வியந்த அதே வெல்ஷ் கும்பனி படைக்குத் தலைமையேற்று போர்க்களத்தில் சிவகங்கைப் படையையும், இதர பாளையத்தின் படைகளையும் எதிர்கொண்டார்.


"சிவகங்கையில் மருது சகோதரர்கள் மீது நடைபெற்ற விசாரணையின் போது நாங்கள் அரண்மனை சிறுவயல் என்னும் குக்கிராமத்தில் அத்தகைய ஆயுதங்களின் தொகுப்பைப் பார்த்தோம். "பரந்த தெருக்களும் நன்கு கட்டப்பட்ட வீடுகளும் கொண்ட ஒரு சுத்தமான நகரம்" என்று அரண்மனை சிறுவயல் குறித்து வெல்ஷ் நினைவு கூர்ந்துள்ளார். இந்தக் கிராமம் மருது சகோதரர்களின் தலைமை இடமாகவும் இருந்துள்ளது. "ஜூலை 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சிறுவாயலை நோக்கிப் படையெடுத்தபோது, சிவகங்கைப் படையினர் துடிப்புடன் எதிர்த்து நின்றனர், ஆங்கிலேயர்களைத் தடுத்து நிறுத்த இந்த ஊரையே எரித்தனர்." என்று வெல்ஷ் தன்னுடைய நூலில் வியப்புடன் வெல்ஷ் எழுதியுள்ளார்.

பாளையக்காரர்களின் போர்களில் வளரி பற்றி கும்பினிப் படை அச்சம்


பாளையக்காரர்களுடன் நடந்த போர்களில் இதே வளரியை கொடிய இயல்புள்ள ஆயுதமாக கும்பினிப் படை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பாளையக்காரர்கள் வளரி வீசுவதில் வல்லவர்களாய் இருந்தனர்.கும்பினி இராணுவத்தின் பீரங்கிப்படையை எதிர்த்துப் போரிடும் துணிச்சலை வளரி பெற்றுத் தந்தது. கொரில்லாப் போர் முறையில் பயன்படுத்தப்பட்ட களரி, கண்ணிமைக்கும் நேரத்தில், பறந்து வந்து கும்பினிப் படை வீரர்களின் தலைகளை அறுத்து உயிர்களைப் பறித்தது. கும்பினிப்படை வளரியைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கியது.

பிரிட்டிஷ் ஆயுதச் சட்டம் 1801

1801 ஆம் ஆண்டில், கிழக்கிந்தியக் கும்பினி அரசு, பிரிட்டிஷ் ஆயுதச் சட்டத்தைக் கொண்டுவந்தது, இந்தச் சட்டம் வளரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாக சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது குறைந்தது 15,000 வளரிகளாவது பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பெரும்பாலானவை உடனடியாக அழிக்கப்பட்டன, சில பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கு (லிவர்பூல், ஃபிட்ஸ்வில்லியம் அருங்காட்சியகங்கள் போன்ற அருங்காட்சியகங்கள்) கொண்டு செல்லப்பட்டன. வளரியை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற காரணத்தால் பின்னாளில் வளரிகளை கோவில்களுக்கு படையலாகப் படைக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம்.



வளரி குறித்த பல செய்திகள்

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னர்களுடைய படையில் வளரி போர்க்கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வளரிக்காகத் தனிப் படையே இருந்ததாம். ஏராளமான வளரிகளை இவர்கள் ஆயுதக் கிடங்கில் சேமித்து வைத்திருந்தார்களாம்.

எட்கார் தர்ஸ்டன் (Edgar Thurston) எழுதிய ‘தென்னிந்தியாவின் குலங்களும் குடிகளும்’ (‘Caste and Tribes of Southern India’) என்ற நூலில், கொடிய ஆயுதமான வளரி தென்தமிழகத்தின் கள்ளர் மற்றும் மறவர் குடியினரின் குடும்பங்களில் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிடுகிறார்.

பிரிட்டிஷ் தொல்லியல் வல்லுனரான ராபர்ட் புரூஸ் ஃபுட் மதுரை மாவட்டத்தில் வளரியின் பயன்பாட்டைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கள்ளர் இனத்து மணவினைச் சடங்குகளில் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் இடையே வளரி பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் குற்ப்பிட்டுள்ளார்.

நடுகற்களில் வளரி

கி.பி. 1311 ஆம் ஆண்டு மதுரை மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர் படையுடன் சண்டையிட்டு இறந்த செய்த வீரத்தேவர், கழுவத்தேவர் ஆகிய போர்வீரகளுக்கு கீழக்குயில்குடி என்னும் கிராமத்தில் நடுகல் எடுத்து பட்டவன் என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். இந்த நடுகல்லில் வீரத்தேவர்,கழுவத்தேவருக்கு வலது கையில் வாளும்,இடது கையில் வளரியும் வைத்துள்ளனர். பிரமலைக்கள்ளர் இனத்து மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் நடுகற்களில் காணப்படும் வீரர்களும் வீராங்கனைகளும் வாள், வேல், வளரி ஆகிய ஆயுதங்களுடன் காணப்படுகின்றன. கொல்லிமலையில், அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு மரத்தடியில் உள்ள நடுகல்லில் இடம்பெற்றுள்ள வீரன் ஒருவன் வளரி ஏந்தியுள்ளான்.

சிறுதெய்வ வழிபாட்டில் வளரி

மதுரைக்கு அருகிலுள்ள கோவிலங்குளம் என்னும் கிராமத்தில் உள்ள பட்டசாமி கோவிலில் சுமார் 200 வளரிகளைக் கண்டதாக வரலாற்று ஆய்வாளரும், தமிழ் நாவலாசிரியரும் மதுரை பாராளுமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.வெங்கடேசன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் இந்த ஆயுதம் பட்டசாமி என்னும் உள்ளூர் தெய்வத்திற்குக் படையலாகப் பெறப்பட்டிருந்ததாம். ஒவ்வோர் ஆண்டும் இந்த வளரி படையலாகப் பெறப்படுகிறதாம். இன்றும் மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பாராம். ஆங்கிலேயர்களின் மொத்த ஆதிக்கத்தில், ‘வளரி’ என்ற பெயர் வழக்கற்றுப் போய்விட்டது அல்லது மறந்து போய்விட்டது

Jan 23, 2022

எடைக்கும் நிறை(திணிவு)க்குமுள்ள வித்தியாசம்

 எடைக்கும் நிறை(திணிவு)க்குமுள்ள வித்தியாசம்



ஆயிரம் ராட்சசக் கருந்துளைகள் இணைந்த, 1200 கோடி சூரியன்களின் நிறையைக் கொண்ட ஒன்றைக் கண்டு பிடித்த ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் மூக்கில் விரல் வைத்து உள்ளனர்

பூமியில் புவிஈர்ப்பு விசை உள்ளது. அதனைச் சார்ந்து நாம் பொருள்களை எடைபோடுகிறோம். எடை வேறு. நிறை வேறு. நிறை (Mass) என்றால் ஒரு பொருளில் அடங்கியுள்ள பொருள்களின் திணிவு அல்லது அடர்த்தி. விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் நிறை என்ற அடிப்படையில்தான் மதிப்பிடப்படுகின்றன.

பூமியிலிருந்து 1260 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளை. அதாவது அங்கிருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்து அடையச் சுமார் 1260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று அர்த்தம். சூரியன் பிறந்தே சுமார் 460 கோடி ஆண்டுகள்தாம் ஆகின்றன. ஒரு வேளை 470 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து சூரியனை பார்த்தால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும் . சூரியனை காண இன்னும் பத்து கோடி ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

எனவே இன்று நாம் பார்க்கும் அந்தக் கருந்துளையைச் சுற்றியுள்ள குவாசரிலிருந்து ஒளி புறப்பட்ட போது சூரியன், பூமி எதுவும் பிறக்கவில்லை. அப்போது புறப்பட்ட ஒளி இவ்வளவு காலம் நெடும்பயணம் செய்து இப்போதுதான் பூமியை எட்டுகிறது.

தானும் ஒளிராது, தன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது கருந்துளை. எனவே, கருந்துளையை நேரடியாகப் பார்க்க முடியாது. நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் கருந்துளையை இனம் காண வானவியலாளர்கள் வேறு வழிகளைக் கண்டுள்ளனர்.

அதன் மிகக் கூடுதலான ஈர்ப்பு விசையின் காரணமாக, அதைச் சுற்றி இருக்கும் வான் முகில்கள், விண்மீன்களைப் பிடித்துக் கபளீகரம் செய்யும். இதனால் வேடிக்கையாக வானவியலாளர்கள் கருந்துளையை 'வேக்குவம் கிளீனர்' என்று அழைப்பர்.

அவ்வாறு அருகில் உள்ள பொருள்களைக் கபளீகரம் செய்யும்போது அந்தப் பொருள்கள் மேலே எறிந்த கல் நேரே கீழே விழுவது போல நேரடியாகக் கருந்துளையில் விழாது. வாஷ்பேசினில் நீர் சுழன்று சுழன்று துளைக்குள் விழுவதுபோலக் கருந்துளையைச் சுற்றிச் சுற்றிப் பொருள்கள் விழும்.

அவ்வாறு கருந்துளையைச் சுற்றிச் சுழலும் வாயுக்களின் திரள் ஒரு வட்டு போலக் காணும். அந்தத் திரள் வட்டு சுழலும்போது கருந்துளை செலுத்தும் ஆற்றலால் வெப்பமடைந்து ஒளி உமிழும். இந்தத் திரள் வட்டைதான் குவாசர் என்கிறார்கள்.

குறிப்பிட்ட கருந்துளையை சுற்றியுள்ள குவாசர் SDSS J010013.021280225.8 என அழைக்கப்படுகிறது. இந்த குவாசர் வெளிப்படுத்தும் ஒளி நமது கேலக்ஸியில் உள்ள ஆயிரம் கோடி விண்மீன்கள் வெளிப்படுத்தும் ஒளியை விட 40 ஆயிரம் மடங்கு ஆகும். இவ்வளவு அதிகப் பிரகாசத்தில் இந்த குவாசர் ஒளி உமிழ்ந்தாலும், வானில் வெறும் ஒளிப்புள்ளியாகத்தான் தொலைநோக்கியில் கூடத் தென்படும்.

கருந்துளையின் நிறைக்கு ஏற்ப ஆற்றல் வெளிப்பட்டு வாயுத் திரளை வெப்ப மூட்டும். எனவே, ஒரு வகையில் குவாசரின் பிரகாசம் அந்த வாயுத் திரள் வட்டின் வெப்பநிலையை உணர்த்தும். குவாசரின் ஒளி அளவை அளந்து கருந்துளை எவ்வளவு நிறை கொண்டு இருக்கும் எனக் கணக்கு போட முடியும். அவ்வாறு மதிப்பீடு செய்தபோதுதான் மிகமிகக் கூடுதல் நிறை கொண்டதாக கண்டுபிடித்த கருந்துளை விளங்குகிறது.

இதுவரை இனம் கண்டுள்ள குவாசர்களைப் பார்க்கும்போது அவற்றில் ஆகப் பெரியவைகூட வெறும் 300 கோடி சூரியன்களின் நிறையைத்தான் கொண்டுள்ளன. ஆனால் தற்போது கண்டுபிடித்த கருந்துளை 1200 கோடி சூரியன்களின் நிறையைக் கொண்டது. இதில் என்ன வியப்பு, இது சற்றே பெருத்துப் போன கருந்துளையாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

இரண்டு புதிர்கள் உள்ளன. பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் விண்மீன்கள் சுமார் 100 சூரியன்களின் நிறையுடன் இருந்திருக்கும். அவை, பின்னர்க் கருந்துளையாக மாறி அருகில் உள்ள பொருள்களைக் கபளீகரம் செய்து மேலும் மேலும் நிறை கூடும். 100 சூரியன்களின் நிறை கொண்ட கருந்துளை காலப்போக்கில் மெல்ல மெல்லச் சுற்றிலும் உள்ளப் பொருள்களைக் கபளீகரம் செய்து சுமார் மூன்று மடங்காகப் பெருத்துப் போவது ஒன்றும் அவ்வளவு வியப்பு இல்லை.

ஆனால் 10,12 மடங்குகள் பெரிதாவதுதான் முதல் புதிர். பிரபஞ்சம் தோன்றிய சுமார் 10 கோடி ஆண்டுகள் கடந்த பின்னர் முதல் கருந்துளைகள் முதல் தலைமுறை விண்மீன்களிலிருந்து பிறந்தன எனக் கருதுகின்றனர். அதன் பின் தான் பல ஆயிரம் கோடி ஆண்டுகள் கடந்த பின்னர் இன்று நாம் காணும் ஏனைய பெரும் கருந்துளைகள் வளர்ந்தன எனவும் கருதுகின்றனர்.

ஆனால் தற்போது கண்டுபிடித்த கருந்துளை பிரபஞ்சம் தோன்றிய வெறும் 87.5 கோடி ஆண்டுகளில் 12 மடங்கு பெருத்துப் போய் உள்ளது. இவ்வளவு குறைந்த காலத்தில் அத்துணைப் பொருள்களைக் கபளீகரம் செய்து வேகவேகமாகப் பெருத்துப்போனது எப்படி என்பதுதான் இரண்டாவது புதிர்.

வெப்பம் விலக்கு விசை கொண்டது அல்லவா? எனவே மிகுவான வெப்பம் உடைய குவாசர் தனது நாற்புறமும் உள்ள பொருள்களை வெளி நோக்கித் தள்ளும். அவ்வாறு பெரும் வெப்பத்தில் பளீர் என ஜொலிக்கும் இந்த குவாசர் அதன் அருகில் உள்ள பொருள்களை மேலும் மேலும் அதிக ஆற்றலுடன் வெளி விலக்கி இருக்க வேண்டும். எனவே வேகவேகமாகக் கருந்துளை வளர்வது அவ்வளவு சுலபமாக இருந்திருக்க முடியாது.

பல கேலக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, அவற்றின் மையத்தில் இருக்கும் கருந்துளை இணைந்து இந்த புதிய கருந்துளை வந்திருக்கலாம் என இந்தப் புதிர்களை அவிழ்க்கச் சிலர் விளக்கம் கூறுகின்றனர். 

முதல் தலைமுறை விண்மீன்கள் சில பத்து லட்சம் சூரியன்களின் நிறை கொண்டு இருக்கலாம்; அவ்வாறு இருந்தால் அவை இவ்வாறு பெரும் கருந்துளையாக மாற வாய்ப்பு உண்டு என வேறு சில விஞ்ஞானிகள் மாற்று விடையைக் கூறுகின்றனர்.

இதுவரை 10 லட்சம் சூரியன்களின் நிறை உடைய விண்மீன்களை நாம் இன்னும்  இனம் காணவே இல்லை என்பதுதான் இந்த விளக்கத்தில் உள்ள சிக்கல். எனவே அது யூகம் என்ற நிலையில்தான் இருக்க முடியுமே தவிர அறிவியல் என ஏற்க முடியாது.

ஐன்ஸ்டீனைப் பார்த்துச் சிந்தனையாளர் பெர்னாட் ஷா வேடிக்கையாகக் கூறினாராம் “உங்கள் விஞ்ஞானம் ஒரு பதிலைக் கண்டுபிடித்தால் 10 புதிய கேள்விகளை எழுப்புகிறது” என்று.

எப்படி  கருந்துளை வெகுவேகமாக மிகக்கூடுதலாகப் பெருத்துப்போனது என்ற கேள்விக்கு உண்மையைத் தேடும் விஞ்ஞானிகளின் பயணம் தொடர்கிறது