Dec 7, 2017

தேன்கூடு (A Miracle in Engineering & Technology) பாகம் - 2

தேன்கூட்டின் ராஜாக்கள்’..?
சென்ற பதிவில், நான் வைத்திருந்த சில கேள்விகளுக்கு விடை தேனீக்கள் தொடரின் இப்பகுதியில் கிடைக்கும். பெண் தேனீக்களில் மிக முக்கியமான வகையான உழைப்பாளி தேனீக்கள் (worker bees) பற்றி இப்பதிவில் மேலும், சற்று சிந்திப்போம். தேனீக்கள் என்றாலே 99% இவைதானே..!
இவை என்னவெல்லாம் செய்கின்றன..? தன்னிடம் மட்டுமே சுரக்கும் beeswax எனப்படும் மெழுகுப்பொருளால் தேன்கூட்டை ஆயிரக்ககணக்கான அறுகோண அறைகள்கொண்டதாய் கட்டுவதை கண்டோம் அல்லவா..? அவ்வறையில் இடப்பட்ட முட்டைகள் புழு(குஞ்சு)பொறிக்க, என்ன வெப்பநிலை தேவையோ 94F (34.4 degrees C) அதை ‘தன் பாணி’ அடைகாப்பின் மூலம் துல்லியமாக தெர்மாமீட்டர் இன்றி தருகின்றன.
அதென்ன.. தேனீபாணி..? தேன்கூட்டின் வெப்பம் குறைகிறது எனில், கூட்டுக்கு மேலே ஒன்று கூடி அடுக்கடுக்காய் மொய்த்து அமர்ந்து கூட்டின் வெப்பத்தை தன் உடல் வெப்பம் மூலம் அதிகரிக்கின்றன. வெப்பம் கூடுமாயின், கூட்டை விட்டு சற்று காற்றோட்டமாய் விலகிக்கொள்கின்றன. இன்னும் கூடினால், விநாடிக்கு சுமார் 230 முறை தன் சிறகை அடித்து விசிறி விடுவதன் மூலம் வெப்பத்தை கட்டுப் படுத்துகின்றன. பாலைவன பிரதேசங்களில் அனல்காற்றுடன் 50 degree C உடன் அனல்காற்று வீடும் வேளையில், எங்காவது நீர் கிடைத்தால் அதை உறிஞ்சிக்கொண்டு வந்து தேனடையில் தெளித்து… பின்னர் விசிறுகிறது. அப்போது தேன்கூட்டில் உள்ள நீரளவு ஆவியாக, “evaporation cooling” சாத்தியமாகிறது..!
முட்டையிலிருந்து வெளிவரும் புழு(லார்வா)க்களுக்கு உணவளிக்கின்றன. அவற்றை கூட்டுப்புழு (ப்யூப்பா) காலத்தில் அறுகோண அறையை உணவுகள் நிரப்பி சீலிட்டு பராமரிக்கின்றன. இப்படி, முட்டையிட்டதிலிருந்து 21 நாட்கள் கழித்து லார்வா… ப்யுப்பா என்று தேனீயாக கூட்டை உடைத்து வெளியேறியதும் மீண்டும் அவற்றுக்கு தேவையான உணவை அளிக்கின்றன.
லார்வாக்களுக்கு அளிக்கப்படும் உணவும் இவற்றுக்கு அளிக்கப்படும் உணவும் வெவ்வேறு. தேனையும், மகரந்ததூளையும், தன்னிடம் சுரக்கும் முக்கிய சத்துப்பொருளையும் குறிப்பிட்ட விகிதத்தில் தேவைக்கேற்ப மிகச்சரியாக எவ்வித குழப்பமும் இன்றி ஊட்டுகின்றன.
மேற்படி உணவை தருவதற்காக கூட்டைவிட்டு பறந்து அலைந்து திரிந்து உணவைத்தேடி சேகரித்து தேன்கூட்ட்டுக்குள் கொண்டு வருகின்றன. இதற்காகவே இவற்றுக்கு மட்டும் இரண்டுவகை தகவம்சங்கள் உடலில் உள்ளன. ஒன்று pollen baskets எனப்படும் பின்னங்கால்களில் காணப்படும் மகரந்தக்கூடைகள். மற்றொன்று honey stomach எனப்படும் ‘தேன்(இரைப்)பை’..!
பூக்களில் அமர்ந்து அதில் உள்ள மகரந்ததூள்களை தன் பின்னங்கால் கூடையில் சேமிக்கின்றன. இதற்கு மற்ற நான்கு கால்களையும் அருமையாக உபயோகிக்கின்றன. இந்த பை நிரம்பிய பின்னர் கூட்டுக்கு திரும்பி விடுகின்றன. இதனை லார்வாக்களுக்கும் தேன்கூட்டில் உழைக்கும் குட்டி உழைப்பாளிகளுக்கும், ஆண் தேனீக்களுக்கும் உணவாக புகட்டுகின்றன.
பூக்களில் காணப்படும் நெக்டார் (nectar) எனப்படும் திரவத்தை உறிஞ்சி தன் செரிக்கும் இரைப்பைக்கு முன்பாக இருக்கும் தேன்(இரைப்)பையில் சேமித்துக்கொள்கின்றன. அந்த பை நிரம்பிவிட்டால் கூட்டை நோக்கி திரும்பிவிடுகின்றன. நிரம்பிய தேன்பையின் நெக்டார் இரைப்பைக்கு சென்றுவிடாமல் இருக்க… இந்த தேன் பைக்கும் இரைப்பைக்கும் இடையே (valve) வால்வு ஒன்று உண்டு..! இப்படி நெக்டாருக்காக பூப்பூவாய் அலையும் வேளையில் பசித்தால், தேனாக மாறிக்கொண்டிருக்கும் நெக்டாரை சிறிதளவு சாப்பிட்டுக்கொள்கின்றன. (தேன் எடுப்பவனே புறங்கையை நக்குகிறானே..!) ஆனால், இப்படி பசிக்காமல் இருக்க, இந்த உழைப்பாளித்தேனிக்கள் மட்டும் கிடைக்கும் பழங்களை துழைத்து பழச்சாறு சாப்பிட்டுவிடுகின்றன.
இன்னொரு அதிசயம் யாதெனில், மகரந்தம் சேமிக்கச்சென்ற உழைப்பாளித் தேனிக்கள் அதை மட்டுமே செய்ய, நெக்டார் சேமிக்கச்சென்றவை அதை மட்டுமே செய்கின்றன..!
அப்படி சேமித்து வரும் போது அந்த நெக்டார் செரித்து விடுவதில்லை..! மாறாக, அதன் honey stomach எனப்படும் ‘தேன்(இரைப்)பை’யில் உருவாகும் enzyme அந்த நெக்டாரை அரை மணிநேரத்தில் தேனாக மாற்றி விடுகிறது..! இதில் தண்ணீர் அளவு அதிகம் இருக்கும். இதைக்குறைக்க தேனீ தன் வாய்வழியே தன் தேன்பையிலிருக்கும் தேனைவெளியே கொண்டுவது அதை மற்ற தேனீக்கள் வாய்களில் மற்றை மாற்றி இறுதியில் கட்டி ஆனவுடன்தேன்கூட்டு அறையில் சேமிக்கின்றன. மேலும், கட்டியாக்க தன் இறக்கை மூலம் விசிருகின்றன.
யாரேனும் எதிரிகள் வந்தால் தங்களிடம் உள்ள கொட்டுறுப்பால் (stinging organs) கொட்டி விஷத்தை கக்குகின்றன. தேவைக்கு அதிகமாக தண்டச்சோறாக ஆண் தேனீக்கள் இருந்தால் அவற்றை கொன்று விடுகின்றன. இவ்வளவும் செய்பவை இனப்பெருக்கம் மட்டும் செய்வதில்லை. ஆனால், இனப்பெருக்கம் செய்யும் ராணித்தேனியை மட்டும் எப்படி உண்டாக்குகின்றன என்பதுதான் பெரிய அதிசயம்..!
ராணித்தேனியிடமிருந்து ‘Pheromone’ (The queen substance’s formula : 9-Keto-(E)-2-decenoic acid எனும் ஒரு வாசனை திரவியம்) எனும் ஒரு வேதியியல் பொருள் சுரக்கிறது. அது அனைத்து தேனீக்களின் உடலிலும் ஊடுருவுகிறது. இதன் பலமே அந்த ராணித்தேனி ராணியாக இருக்க காரணம். இப்படி ஊடுருவும் ரசாயனப்பொருள் மிகுதியாக நுகர கிடைத்தால், அனைத்து தொழிலாளி தேனிக்களும் அதது அதன் வேலையை பார்த்துக்கொண்டு சுமுகமாக சென்று கொண்டிருக்கும்.
ராணித்தேனிக்கு வயசாகிவிட்டால்… அது இந்த ‘pheromone’ எனும் ஒரு வேதியியல் பொருள் சுரப்பை குறைக்கிறது. இதை, தொழிலாளி தேனீக்கள் உணர ஆரம்பிக்கின்றன. மேலும், இது குறைய ஆரம்பித்தால் கூடிய சீக்கிரம் spermatheca எனப்படும் விந்து சேமிப்பு பையும் காலியாகப்போகிறது என்று புரிந்து கொண்டுவிடும். பிறகு என்னாவாகும்..? விந்தணு இல்லாத unfertilized egg என்ன தேனியை உருவாக்கும்..? ஆண் தேனீக்களை மட்டுமே…!
ஆக, ‘pheromone’ குறைவு என்பது தேனீ இனமே அழித்து விடப்போகும் அபாயத்தின் அறிகுறி அல்லவா..? இனிதான் உழைப்பாளி தேனீக்கள் உடனடியாக உச்ச வேகத்தில் செயல்படும். அன்றையதினம் ராணித்தேனி பெண் உழைப்பாளித் தேனீக்களுக்கான முட்டை போட்ட பெரிய அறைகளுக்கு சென்று அறை வாசல்களை அறையின் நீட்சி மாதிரி அமைத்து அவைகளுக்கு அங்கே பெரிய சைஸ் கூடுகள் ஒன்றிரண்டை தன் beeswax மூலம் உடனடியாக கட்டும். (ஒரு ராணி போதும்தான்… இருந்தாலும் ஒரு சேஃப்டிக்கு சில கூடுகள் கட்டும். இது தேன்கூட்டில் ஒரு (emergency situation) அவசரகாலநிலை..!
அந்த குறிப்பிட்ட பெரிய கூட்டு முட்டைகளில் இருந்து மட்டும் 3-வது நாள் வெளியான தொழிலாளித்தேனி லார்வாகளுக்கு மிகவும் அபரிமிதமான சத்து உள்ள “Royal Jelly” எனப்படும் ராஜ திரவ உணவை ஊட்டி வளர்க்கும். இது முற்றிலும் தொழிலாளி தேனிக்களிடமிருந்து சுரக்கின்றது. ஆயிரக்கணக்கான மொத்த தொழிலாளித்தேனி வர்க்கமும் இதை மட்டுமே உணவாக ஊட்டி அந்த லார்வாக்களை வளர்க்கும். அதாவது ராயல் ஜெல்லியில் அவை மிதக்கும்.
அடுத்த ஆறு நாட்களில் அவை 1500 மடங்கு வளர்ந்துவிடும். அப்போது அது தன்னை சுற்றி ஒரு பட்டு வலையை உண்டாக்கிக்கொண்டு (இந்த வலைக்குரிய பட்டு இழைகளை இந்த லார்வாக்களே சுரக்கின்றன) கூட்டுப்புழு நிலையை அடைந்துவிடும். பின்னர் கூட்டுப்புழுவிலிருந்து 16-வது நாள் ராணித்தேனியாகி கூட்டை உடைத்துக்கொண்டு வெளிவந்துவிடும். இந்த இடத்தில், நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, மற்ற தேனீக்களுக்கு பொதுவாக முட்டைலிருந்து தேனீயாக பிறக்க 21 நாட்கள் ஆகும்..! ராணித்தேனியாக பிறந்தவுடனும் ‘ராயல்ஜெல்லி’தான் இவற்றுக்கு உணவு..! இப்போதுதான் ஆண் தேனீக்களுக்கு (drones) இப்படி புதிதாக பிறந்த ராணித்தேனியின் ‘pheromone’ வாசம் கவரப்பட்டு பழைய ராணியை மறந்து புதிய இளம் ராணியின் பின்னே matting flight day அன்று பறந்து சென்று விடும்.
ஆக, தொழிலாளித்தேனிக்களுக்கு (worker bees) ‘ராயல்ஜெல்லி’ உணவு ஊட்டப்பட்டால் அது ராணித்தேனியாக (Queen bee) உருவாகி விடுகிறது..! ஆனால், அந்த உணவை உண்டாக்கும் சுரப்பிகள் தொழிலாளித் தேனிக்களிடம்தான் உள்ளன..! அப்படி அவை சுரப்பதை அவை சாப்பிடுவது இல்லை..! மேலும், முட்டையிலிருந்து வெளிவந்த லார்வா பருவத்துக்குப்பிறகு, ராணி தவிர்த்து வேறு எந்த தேனிக்கும் ஊட்டப்படுவதும் இல்லை..! அதனால்தான், ராணித்தேனிக்களுக்கு மட்டும் பெரிய சைஸ் fertile ஓவரிகள் வளருகின்றன.
இன்னொரு புது ராணித்தேனி பிறக்க, பழைய ராணித்தேனியின் அந்த ‘pheromone’ குறைதல்தானே மிக முக்கிய காரணி..? ஆமாம். அதுதான் காரணம்..! ஆக, ஆணா/பெண்ணா என்ற நிகழ்தகவை, ‘நிகழத்தகாதவை’யாக ஆக்குவதில் யாருக்கு பங்குள்ளது..? உழைப்பாளித்தேனீக்களுக்கு..!
ராணித்தேனியை உருவாக்கி தேனீ இனமே அழியாமல் இருக்கவும் இந்த உழைப்பாளி தேனீக்கள்தான் காரணம்..! ஆக, இவைகள்தான் “தேன்கூட்டின் ராஜாக்கள்” எனலாம்..!
ஆனால், இதன் பாலினம் பெண்கள் என்பதால்… “தேன்கூட்டின் ரியல் ராணீக்கள்” எனலாம்..! தேன்கூட்டின் நிர்வாகம், ஆட்சி, அதிகாரம் அனைத்தும் இவைகளிடம் அல்லவா இருக்கின்றன..?
சரி, இப்போது நம்முன் உள்ள சிந்தனைக்கு விருந்தாகும் ஒரு கேள்வி..! முதல் ராணித்தேனி எப்படி உருவாகியிருக்கும்..? அது உருவாக என்ன தேவை..? என்ன அறிவியல் நியதி..?
அந்த முதல் ராணித்தேனி முட்டை போட வேண்டுமானால், அதற்கு முன் ஒரு ஆண் தேனீ இருந்திருக்க வேண்டுமே..? இரைதேடத்தேரியாத — சாப்பிட மட்டுமே தெரிந்த இவை இரண்டும் உயிருடன் தேன்கூட்டில் வாழ வேண்டுமெனில் உழைப்பாளி பெண் தேனிக்கள் அதற்கும் முன்னரே கட்டாயம் இருந்திருக்க வேண்டுமே..!?
இவை எங்கிருந்து பரிணாமம் பெற்று வந்தன..? கூடவே இத்துணை மலைக்கத்தக்க சிறப்பம்சங்களையும் வேறெந்த ‘உயிரி’யிடமிருந்து பரிணாமத்தில் தன்னுடன் கூட்டி வந்தன..? ஒவ்வொன்றாய் மில்லியன் ஆண்டுக்கணக்கில் பரிணாமம் பெற்றிருக்க சாத்தியம் உண்டா..?
தேனீக்களின் இம்மூன்று வகையும் ஏககாலத்தில் படைக்கப்பட்டு இருந்தாலே அன்றி தேனீக்கள் இருப்பு இவ்வுலகில் சாத்தியம் அல்லவே..!?
தன் இனத்துக்கே கூட இல்லாமல் அது ஏன் ராணித்தேனிக்களுக்கு மட்டும் ஸ்பெஷல் royal jelly உணவை உழைப்பாளித்தேனிக்கள் தருகின்றன..? ‘pheromone effect’ குறைந்துவிட்டால், “இப்படி ஒரு அவசரநிலைக்கு மாறவேண்டும்” என்று இந்த உள்ளுணர்வை – வழிகாட்டலை இந்த உழைப்பாளித்தேனீக்களுக்கு வழங்கியது யார்..?

No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you