“காலத்தை எவ்வாறு கடத்த முடியும்? காலம் எங்கே இருக்கின்றது? அதை எங்கிருந்து எங்கே கடத்துவது? காலத்தை பிடித்து நாம் அதை நமக்கேற்றவாறு ஓடவிடமுடியுமா? அல்லது அதை ஒரு பொருளைப்போல் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு கடத்திச்செல்ல முடியுமா? இவையெல்லாம் நம்மால் சாத்தியமாகுமா?” எனப்பல கேள்விகள் என் சிந்தனையில் அடுக்கடுக்காக எழுந்தன. இது போன்ற பல வார்த்தை பிரயோகங்களை இதற்கு முன்னரும் நான் பலதடவை கேட்டிருக்கிறேன்.
“இந்த ஆளோடும் பிள்ளைகளோடும் என்னால இனி காலம் தள்ள முடியாது” என்று அம்மா அப்பாவையும் எங்களையும் கடிந்து கொள்ளும்போதும்,
“எனக்கு எப்படி நேரம் போனதென்றே தெரியவில்லை” என்று சுவாரஸ்யமான நாவல் ஒன்றை வாசித்துட்டு என் நண்பன் கூறியபோதும்,
“இப்ப அவருக்கு காலம் சரியில்லை போல” என்று வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்போது சிலர் கூறிக்கொள்ளும்போதும்; எனக்கு இன்று தோன்றியது போல் முன்னர் எண்ணத்தோன்றவில்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் காலம் எவ்வாறு அவரவற்கேற்றால்ப் போல் வெவ்வேறு தோற்றங்களை காட்டுகின்றது என்பது எனக்கு மேலும் வியப்பை ஊட்டியது. சிலர் காலத்தை தள்ள முடியாது அவதிப்படுகின்றனர். சிலர் அதற்கு எதிர்மாறாக காலம் வேகமாக கரைந்துவிட்டதே என்று கவலைப்படுகின்றனர். ஏன் இந்த முரண்பாடுகள்?
“இந்த ஆளோடும் பிள்ளைகளோடும் என்னால இனி காலம் தள்ள முடியாது” என்று அம்மா அப்பாவையும் எங்களையும் கடிந்து கொள்ளும்போதும்,
“எனக்கு எப்படி நேரம் போனதென்றே தெரியவில்லை” என்று சுவாரஸ்யமான நாவல் ஒன்றை வாசித்துட்டு என் நண்பன் கூறியபோதும்,
“இப்ப அவருக்கு காலம் சரியில்லை போல” என்று வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்போது சிலர் கூறிக்கொள்ளும்போதும்; எனக்கு இன்று தோன்றியது போல் முன்னர் எண்ணத்தோன்றவில்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் காலம் எவ்வாறு அவரவற்கேற்றால்ப் போல் வெவ்வேறு தோற்றங்களை காட்டுகின்றது என்பது எனக்கு மேலும் வியப்பை ஊட்டியது. சிலர் காலத்தை தள்ள முடியாது அவதிப்படுகின்றனர். சிலர் அதற்கு எதிர்மாறாக காலம் வேகமாக கரைந்துவிட்டதே என்று கவலைப்படுகின்றனர். ஏன் இந்த முரண்பாடுகள்?
உண்மையில் காலத்தை நாம் கடத்துகின்றோமா? அல்லது அது நம்மை கடத்திச்செல்கின்றதா? அல்லது இவற்றுகெல்லாம் அப்பால் எம்மால் காலத்தை பிடித்து அடக்கி அதைக்கடந்து காலமில்லா வெளிகளில் நமது இருப்பை நிறுவமுடியுமா? என் சிந்தனையில் தொடர்ந்தும் கேள்விகள் முளைவிட்டுக் கொண்டிருந்தன.
அதற்கு நாம் முதலில் காலம் என்றால் என்ன என்று சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெளதீகவியலில் காலம் என்பது ஒரு பரிமாணம். அதில் நாம் நடைபெறும் நிகழ்வுகளை இறந்த காலத்திலிருந்து நிகழ்காலத்தினூடாக எதிர்காலத்திற்கு வரிசைப்படுத்தமுடிவதோடு நிகழ்வுகளின் கால அளவுகளையும் கணிக்ககூடியதாகவுள்ளது. காலம்/நேரத்தின் அடிப்படை அலகாக நொடிப்பொழுது (second) கொள்ளப்படுகின்றது. ஆரம்பத்தில் (1000 – 1960 ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்) வானத்தில் சூரியனின் நிலையை வைத்தே நேரம் (சூரிய நேரம்) கணக்கிடப்பட்டது. அதன்போது சூரிய நேரத்தின் அடிப்படை அலக்காக ஒரு நாள் கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் ஒரு நாளின் 1/86,400 பகுதியானது ஒரு நொடியாக வரையறுக்கப்பட்டது. பின்னர் விஞ்ஞான வளர்ச்சியினோடு ஒரு நொடி என்பது சீசியம் 133 (caesium) அணுவின் இரண்டு சக்தி நிலைகளுக்கிடையில் நிகழும் நிலைமாற்றத்தின்போது உருவாகும் கதிர்வீச்சின் 9,192,631,770 சுற்றுகளுக்கு செலவாகும் நேரமாக தற்போது துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவை காலம் ஒன்று இருப்பதாக உணர்ந்து அதை அளவிட மனிதன் தனக்கு வரையறுத்த வழிகள். அதனடிப்படையில் நிமிடம், மணி நேரம் என்பனவும் வரையறுக்கப்பட்டன. பூமிக்கு தன்னைதானே சுற்றிவர எடுக்கும் காலமும் சூரியனை சுற்றிவர எடுக்கும் காலமும் கணக்கிடப்பட்டு அதனடிப்படையில் ஒருநாள் 24 மணி நேரத்தை கொண்டதாகவும் ஒரு வருடம் 365 நாட்களை கொண்டதாகவும் அமைக்கப்பட்டது. இவற்றின் அடிப்படையில் கடிகாரங்களும் நாட்காட்டிகளும் அமைந்தன.
நாம் பூமி சார்பாக வரையறுத்த இந்த காலக்கணக்கினூடாக முன்வைத்த பிரபஞ்சம் தொடர்பான நமது கருத்துகளும் அதனூடான நமது தரிசனங்களும் எவ்வளவு தூரம் நிதர்சனத்தை நோக்கி நம்மை நகரவைக்கின்றது என எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? ஏனெனில் எமது சூரிய மண்டலத் தொகுதியிலுள்ள ஏனைய சில கிரகங்களில் ஒரு நாட்ப்பொழுதையும் ஒரு வருடகாலத்தையும் சற்று ஒப்பிட்டு நோக்குவோமாயின்; சூரியனுக்கு மிக அருகிலுள்ளதும் மிகச்சிறியதுமான புதன் கிரகத்தில் ஒரு நாளாக கருதப்படுவது 176 பூமி நாட்களுக்கு சமமாகவுள்ள அதேவேளை அதன் ஒரு வருடமானது சராசரியாக 87 (பூமி) நாட்களுக்கே சமமாகவுள்ளது. அதாவது புதன் சூரியனை சுற்றுவதற்கு எடுக்கும் காலத்தின் இரு மடங்கு காலத்தை தன்னைத் தானே சுற்றுவதற்கு எடுக்கின்றது. அடுத்ததாக, நமது சூரிய மண்டலத் தொகுதியின் மிகப்பெரியதும் ஏறத்தாள விட்டத்தில் பூமியைவிட 11 மடங்கு பெரியதுமான வியாழக் கிரகத்தில் ஒரு நாட்ப் பொழுது அண்ணளவாக வெறும் 10 மணி நேரமாக மட்டுமேயுள்ளது. ஆனால் அங்கே ஒரு வருடமாக கருதப்படுவது பூமியின் 11.8 வருடங்களுக்கு சமமானதாக இருக்கின்றது. இவ்வாறு ஏனைய கோள்களிலும் அவை தம்மை தாமே சுற்றுவதற்கும் சூரியனை சுற்றுவதற்கும் எடுக்கும் நேரத்தைப் பொறுத்து முறையே ஒரு நாளும் வருடமும் காலக் கணக்கில் வேறுபடுகின்றன. எனவே நமது சூரிய மண்டல தொகுதியினுள்ளேயே ஒரு நாளும் வருடமும் கிரகத்திற்கு கிரகம் பெரிய ஒரு வேறுபாட்டை கொண்டிருக்கும்போது இந்த பிரபஞ்சத்தின் வேறு பகுதிகளில் வாழும் உயிரினங்களது அல்லது வேறு பரிமாணங்களில் தமது இருப்பை நிறுவியவர்களது காலமானது நிச்சயம் நம்முடைய காலத்துடன் இதை விட மிகப்பாரிய வேறுபாட்டை காட்டுவதாகவே இருக்கும் என்பதோடு அவர்கள் காணும் அல்லது கருதும் பிரபஞ்சமும் நம்முடையதிலிருந்து வேறுபட்டதாகவே இருக்கும். நமது காலக்கணக்கினூடாக இந்த பிரபஞ்சத்தின் வயதை கணக்கிட்டால், பிரபஞ்சம் பெருவெடிப்பிலிருந்து தோற்றம் பெற்று இன்று ஏறத்தாள 14 பில்லியன் வருடங்கள் கடந்துவிட்டது. இது ஒரு பிரமாண்டமான விடயமாக நமக்கு தோற்றமளித்தாலும் வேறு பரிமாணங்களில் உள்ளவர்களுக்கு அது மிக அற்பமாகப்படுவதுடன் அவர்களது காலக்கணக்கில் பிரபஞ்சம் உருவாகி சில வருடப்பொழுதுகளே கழிந்திருக்கலாம்.
இதேபோன்றதொரு கருத்தியலை நமது இதிகாசங்களில்கூட நாம் பார்க்கலாம். ஆறுமுக நாவலரின் பாலபாட நான்காம் புத்தகத்தின் குறிப்புரைகளிலே,
· மனிதர்களுக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் எனவும்
· 360 மனுஷ வருடம் ஒரு தேவ வருடம் எனவும்
· பன்னீராயிரம் தேவ வருடம் ஒரு சதுர்யுகம் எனவும்
· 1000 சதுர்யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் எனவும்
· ஒரு பிரம்ம வருடம் விஷ்ணூவிற்கு ஒரு நாள் எனவும்
· ஒரு விஷ்ணு வருடம் சிவனுக்கு ஒரு நாள் எனவும் கூறப்பட்டுள்ளது.
· மனிதர்களுக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் எனவும்
· 360 மனுஷ வருடம் ஒரு தேவ வருடம் எனவும்
· பன்னீராயிரம் தேவ வருடம் ஒரு சதுர்யுகம் எனவும்
· 1000 சதுர்யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் எனவும்
· ஒரு பிரம்ம வருடம் விஷ்ணூவிற்கு ஒரு நாள் எனவும்
· ஒரு விஷ்ணு வருடம் சிவனுக்கு ஒரு நாள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனை நாம் சற்று உற்று நோக்கினால் பரிமாணப்படிநிலைகளில் மேலே செல்லச் செல்ல காலம் படிப்படியாக மிக மெதுவாக நகர்வதை பார்க்கலாம்.
இந்த காலக்கணக்கின் முன் நமது ஆயுட்காலமானது மிக அற்பமானது. அந்த சொற்பகாலத்தினுள் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், முடிவு மற்றும் அதன் நடத்தை என்பவற்றை நாம் விளங்கிக்கொள்ள முன்னர் காலம் நம்மை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். எனவே எமது ஆயுட்காலத்தினுள் நாம் காணும் நிதர்சனங்களுடன் ஒப்பிடும்போது நம்மைவிட பரிமாணநிலையில் மேலே உள்ளவர்கள் அல்லது காலத்தை கட்டுப்படுத்துபவர்கள் காணும் நிதர்சனங்கள் முழுமையானவை. எனவே அத்தகைய நிலையை அடைவதற்கு நாம் காலத்தை கட்டுப்படுத்துபவர்களாக அல்லது அதைக் கடந்தவர்களாக பரிமாண வளர்ச்சி (diamensional shift) அடையவேண்டும். அது எப்படி சாத்தியமாகும்? விஞ்ஞானத்தால் நாம் அந்த பரிமாண வளர்ச்சியை அடைய முடியுமா? விஞ்ஞானம் அது தொடர்பாக என்ன கூறுகின்றது என்று சற்றுப் பார்ப்போம்.
பெளதீகவியலின் அடிப்படையில் ஆரம்பத்தில் நேரமானது ஒரு மாறிலி (absolute time) என்றும் அது இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானதென்றும் ஒரு கொள்கை இருந்து வந்தது. அந்தக் கொள்கை பெளதீகவியலின் மேதை அல்பேட் ஐன்ஸ்ரின் தனது சார்புத் தத்துவத்தினூடாக நேரமானது சார்பானது என்று தெளிவுபடுத்தியன் பின்னர் முடிவுக்கு வந்தது. அதற்கமைய ஒரு நோக்குனர் சார்பாக, மிகவேகமாக பயணிக்கும் பொருள் ஒன்றுக்கும் பெரிய ஈர்ப்புவிசைக்கு அருகிலுள்ள பொருள் ஒன்றுக்கும் நேரமானது மெதுவாகவே நகரும் என்று நிரூபிக்கப்பட்டது. அது ஒரு மாறிலி அல்ல என்று தெரியவந்தது. அதாவது ஒவ்வொரு நோக்குனரும் தமக்கென தனித்தனி நேர அளவீடுகளை கொண்டிருப்பார்கள். ஒரு நிகழ்வின் கால அளவானது நோக்குனர் அதை அளவிடும் சட்டத்திற்கமைய அவர்களது கடிகாரத்தில் வெவ்வேறு அளவுகளை காட்டும் என்று அறியப்பட்டது. மேலும் காலமானது முழுமையாக தனித்திருக்காமல் வெளியுடன் (space) சேர்ந்ததாகவே இருக்கும் என்றும் அவ்விரண்டும் இணைந்து காலவெளி (space-time) என்ற ஒரு பொருள் போன்றே இயங்கும் எனவும் ஐன்ஸ்ரினின் சார்புத் தத்துவம் மேலும் கூறுகின்றது. இவற்றுக்கமைய ஒளியின் வேகத்தில் இயங்கும் விண்கலத்தில் ஒருவர் பயணிப்பாராயின் அவருக்கு காலம் மிக மெதுவாகவே நகரும். அவர் சிறிதுகாலம் விண்வெளியில் ஏறத்தாள ஒளியின் வேகத்தில் பயணம் செய்துவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவாராயின் அவருடைய நேரத்தைவிட பூமியில் அதிக காலம் கடந்திருக்கும். அதாவது அவர் தான் எதிர்காலத்திற்கு பயணித்திருப்பதாக உணர்ந்துகொள்வார்.
இதேபோல் ஒளியைவிட மிகையான வேகத்தில் ஒருவர் பயணிப்பாராயின் அவருக்கு காலம் பின்னோக்கி நகருவதாக இருக்கும். ஆனால் ஒளியைவிட எதுவும் இப்பிரபஞ்சத்தில் வேகமாக பயணிக்க முடியாது என்று சார்புத்தத்துவம் கூறுகின்றது. ஏனெனில் நாம் எவ்வளவுதான் சக்தியை பிரயோகித்து ஒரு பொருளை ஆர்முடுக்கினாலும் அதனால் ஒளியின் வேகத்திற்கு மிக அண்மையாக (99.99%) மட்டுமே செல்லமுடியும். அதைவிட மேலதிகமாக எவ்வளவு சக்தி கொடுக்கப்பட்டாலும் அப்பொருளினால் ஒளியின் வேகத்தை விஞ்சமுடியாது. இதை CERN (European Centre for Nuclear Research) இல் நிரூபித்துமுள்ளார்கள். இதற்குக் காரணம் ஒளியின் வேகத்தை ஒரு பொருள் அண்மிக்கும்போது அதன் திணிவு (mass) பல மடங்காக அதிகரித்து ஒரு கட்டத்தில் அது முடிவிலியாக அதிகரிக்கின்றது. எனவே அதனை மேலும் ஆர்முடுக்கத் தேவைப்படும் சக்தியும் முடிவிலியாக அதிகரிக்கும். அதனால் ஒரு பொருளினால் ஒருபோதும் ஒளியின் வேகத்தை அடையமுடியாது. இதை நாம் E=mc2 என்ற சமன்பாடு மூலம் விளங்கிக் கொள்ளமுடியும்.
எனவே ஒளியை விஞ்சிய வேகத்தில் இயங்கி காலத்தில் பின்னோக்கி பயணிப்பது சாத்தியமில்லை. அதற்கு இன்னோரு வழி அண்டவெளித் துளையினூடாக (wormhole) பயணிப்பதே. இந்த அண்டவெளித்துளைகள் காலவெளியில் பல மில்லியன் ஒளியாண்டு தூரத்திலுள்ள இரு புள்ளிகளையும் சில நிமிடங்களில் கடக்க உதவும். எவ்வாறெனில் இத்துளைகளினூடாக அவ்விரண்டு புள்ளிகளுக்கிடையிலுள்ள காலவெளியை சுருக்கி அப்புள்ளிகள் இரண்டையும் மிக அருகில் கொண்டு வந்து அப்புள்ளிகளுக் கிடையில் ஒரு சுருக்கவழி ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமாகும். அதனால் நம்மால் காலத்தில் பின்னோக்கி பயணிக்ககூடியதாகவும் இருக்கும். இந்த அண்டவெளித்துளைகள் பற்றிய கருதுகோள் ஐன்ஸ்ரினாலும் அவருடன் பணியாற்றிய நாதன் ரோசென் (Nathan Rosen) எனும் பெளதீகவியலாளராலும் 1935 ம் ஆண்டளவிலேயே முன்வைக்கப்பட்டுவிட்டது. ஆனால் இக்கருதுகோள் இன்னும் பரிசோதனை மட்டத்திலேயே உள்ளது.
இனிவரும் காலங்களில் மனிதன் ஒரு காலஇயந்திரத்தை உருவாக்கி காலத்தில் பின்னோக்கியும் முன்னோக்கியும் பயணிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குவாண்டம் கொள்கை கூறுகின்றது. அடிக்கடி உலகின் பல இடங்களில் வானில் தென்படும் பறக்கும் தட்டுகளும் ஏனைய மர்மான பொருட்களும் வேற்றுக்கிரகவாசிகள் பயணிக்கும் விண்கலங்களாக அல்லது காலப்பயணம் மேற்கொள்பவர்கள் எதிர்காலத்திலிருந்து வந்து செல்லும் காலஇயந்திரங்களாக இருக்கலாம் என்று பலர் நம்புகின்றனர். ஒருவேளை அவர்கள் எதிர்காலத்தில் இருந்து வருபவர்களாயின் ஏன் அவர்கள் யாருடனும் நேரடித்தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என்று தெரியவில்லை.
காலப்பயணத்தில் காலத்தில் பின்னோக்கி பயணிக்கும்போது மனிதனால் நடைபெற்ற நிகழ்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியுமா என்றும் அவ்வாறு ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் நிகழ்காலத்தில் எத்தகைய முரணிலைகளை (paradoxes) தோற்றுவிக்கும் என்பது தொடர்பாகவும் பெளதீகவியலாளர்களால் ஒரு தெளிவான முடிவுக்கு இன்னும் வரமுடியவில்லை. உதாரணமாக ஒருவர் காலத்தில் பின்னோக்கி பயணம்செய்து அவரின் பாட்டனாரை அவருக்கு பிள்ளைகள் பிறக்கும் முன் கொன்றுவிடுவாராக இருந்தால் தற்போது எவ்வாறு இவரால் நிகழ்காலத்தில் இருக்க முடியும் அல்லது காலத்தில் பின்னோக்கி பயணித்திருக்க முடியும்?
இந்த முரணிலைகள் தொடர்பாக ஆராய்ந்த உலகின் மற்றுமொரு தலைசிறந்த பெளதீகவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) தனது A Briefer History of Time எனும் நூலில் அவற்றுக்கு பின்வரும் தீர்வுகளை முன்வைக்கின்றார். அதில் முதலாவது நிலையான வரலாற்றுக் கருதுகோள் (consistent histories hypothesis) இக்கருதுகோளின்படி ஒருவர் காலத்தில் பின்னோக்கி பயணிப்பதற்கு ஏற்கனவே வரலாற்றில் அதற்கு இடமளிக்கப்பட்டிருக்கவேண்டும். அதாவது இறந்தகாலமும் எதிர்காலமும் இவ்வாறுதான் இருக்கும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவையாகவே இருக்கும். ஒருவேளை அவ்வாறு ஒருவர் காலத்தில் பின்னோக்கி சென்றாலும் அவரால் கடந்த வரலாற்றினில் பெரிய மாற்றங்கள் எதனையும் செய்ய இயலாது. கடந்த நிகழ்வுகளோடு பெருமளவில் ஒத்துச்செல்லக்கூடியதாகவே அவரது நடவடிக்கைகள் அமையும். இரண்டாவது கருதுகோள் மாற்று வரலாற்றுக் கருதுகோள் (alternative histories hypothesis) ஆகும். இது முற்றிலும் முன்னதையதற்கு எதிர்மறையானது. இக்கருதுகோளின்படி காலத்தில் பின்னோக்கி பயணிப்பவர்கள் தங்கள் விருப்பம் போன்று நடந்த வரலாற்றினை மாற்றுவதற்கான சுதந்திரத்தை கொண்டிருப்பார்கள். அங்கே அவர்களுக்கு பழைய வரலாற்றோடு ஒத்துப்போகவேண்டிய எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. அங்கே அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு மாற்றங்களுக்கும் ஏற்றவாறு வரலாறானது மாறிச்செல்லும். அதாவது இந்தப் பிரபஞ்சம் தனி ஒரு வரலாறை மட்டும் கொண்டதல்ல. அது சாத்தியமான எல்லா வரலாறுகளையும் அவற்றுக்கே உரிய நிகழ்தகவுகளின் அடிப்படையில் கொண்டதாக இருக்கும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் சில தீர்வுகளை முன்வைத்துள்ளார். இத்தீர்வுகளை காலப்பயணம் செய்தால் மாத்திரமே ஆராய்ந்து அறியமுடியும்.
இந்தவகையில் விஞ்ஞானமானது காலத்தை கட்டுப்படுத்தும் படிநிலைகளில் இன்னமும் ஆரம்பகட்டத்திலேயே உள்ளது. காலத்தை கட்டுபடுத்துவதே பெளதீகவியலாளருக்கு ஒரு பெரிய சவாலான விடயமாக உள்ளபோது அவர்களால் காலத்தை கடந்த ஒரு நிலையை பற்றியும் அப்படி ஒரு நிலை இருக்குமானால் அதை எப்படி அடைவது என்பது பற்றியும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரமுடியுமோ தெரியவில்லை. ஏனெனில் காலமானது பெளதீகவியலின் ஏழு அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும். எனவே காலம் இல்லாமல் கோட்பாடுகளை அவர்களால் உருவாக்குவதும் கடினம். காலஇயந்திரத்தில் காலத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் பயணிப்பதன் மூலம் தங்களால் காலத்தை கட்டுப்படுத்தலாம் என்று அவர்கள் கருதினாலும் காலஇயந்திரத்தில் பயணிப்பவருக்கு அவ்வியந்திரம் சார்பாக நேரம் நகர்வதை தடுக்கமுடியாது என்பதுடன் அவர்களது பயணமும் இறந்தகாலத்தில் அல்லது எதிர்காலத்தில் என்று காலம் சார்பானதாகவே அமையும். அவர்களால் ஒருபோதும் காலத்தை கடந்த ஒருநிலையை அடையமுடியாது. அந்தவகையில் காலத்தை எம்மால் கடத்த முடியாது. அதுதான் எங்களை எங்களுக்கே தெரியாமல் மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கும்.
அப்படியாயின் காலத்தை எவ்வாறு நாம் கடப்பது? நாம் காலமில்லா வெளிகளில் பரிணமிப்பது எப்போது? இவ்வாறு சிந்திக்கும்போது அந்த சிந்தனைகளின் அடியில் காலம் ஊற்றெடுப்பதை நாம் உணரலாம். காலம் என்பது தனித்தியங்கும் ஒரு பொருளோ அல்லது ஒரு விசையோ அல்ல. நம்மால் அதனை உண்மையில் அளவிடவும் முடியாது. காலம் என்பது எங்கள் எண்ணெங்களில் ஊற்றெடுப்பது. அது நமது மனத்தின் பிரதிபலிப்பு. நாம் தூங்கும்போது காலம் பற்றி ஒருபோதும் உணருவதில்லை. ஏனெனில் எம்மனதில் நாம் எதையும் எண்ணுவதில்லை. நாம் விழித்தெழும்போது காலமும் எமது எண்ணங்களோடு சேர்ந்து விழித்துக்கொள்கின்றது. இடமும் (space) பொருளும் (object) இருக்குமானால் அங்கே எப்போதும் காலமும் வந்து அவற்றுடன் ஒட்டிக்கொள்ளும். இடமும் பொருளும் எமது மனதின் போலித் தோற்றங்கள் என்னும்போது அதனோடு இணைந்த காலமும் அவ்வாறே. அதாவது காலம் என்று ஒன்று இல்லை. இதனால்தான் சிலர் காலத்தை தள்ள கஷ்டப்படும் அதேவேளை வேறு சிலர் காலம் இவ்வளவு விரைவாக கரைந்துவிட்டதே என்று கவலைப்படுகின்றனர். எல்லாம் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. எண்ணங்கள் யாவையும் கடந்து மனமற்ற ‘நிலை’யை அடைந்து தனது இருப்பு என்ற பிரக்ஞை மட்டுமே இறுதியானது, அதுவே அனைத்துமாக தனக்கு காட்சிதருகின்றது என்பதை அறிந்தவனுக்கு இடம், பொருள் என்று எதுவுமில்லை. அதனால் அவற்றோடிணைந்த காலமும் அவனுக்கில்லை. அவன் காலத்தை கடந்தவன் ஆகிறான். அவன் காலத்தை மட்டுமல்ல எல்லாவற்றையும் கடந்தவனாகிறான். அவனே ஞானியாவான். ற மது எண்ணங்களால்தான் காலமானது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என எமக்கு தோற்றம் காட்டுகின்றது. ஆனால் காலத்தை கடந்த ஞானிக்கு அவை எல்லாமே ஒன்றுதான். இதைத்தான் திரிகால ஞானம் (முக்காலமும் உணர்ந்தவர்) என்று குறிப்பிடுகிறார்கள். இதனால்தான் அவர்களால் நடந்தவற்றையும் இனி நடக்கப்போவதையும் அறிந்துகொள்கின்றார்கள். எனவே மனம் என்ற கருவி மூலம் மட்டுமே ஒருவன் காலத்தை கடந்து தனது இருப்பெனும் பிரக்ஞையே இறுதியானது என்பதை அறிய முடியும். அதை உணர்ந்த ஞானிக்கு மனம் என்பதும் இருப்பதில்லை. மனம் அதை அடைய உதவும் ஒரு கருவி மட்டுமே. எனவே காலத்தை கடப்பதற்கு ஒரு சிறந்த கருவி நமது மனம் மட்டுமே. இதுவே காலம் கடத்தலாகும்
No comments:
Post a Comment
Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you