Dec 4, 2017

பிரபஞ்ச இரகசியம் - இரட்டை சூரியன்

இரட்டை சூரியன்
வானில் ஒரு சூரியன் இருக்கும் போதே பிரச்சினையாக இருக்கிறது. கோடை வந்தால் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் தாங்க முடிவதில்லை. வானில் இரட்டை சூரியன் சூரியன் இருந்தால் கேட்கவே வேண்டாம்.
சரி, எங்கே இப்படி இரட்டை சூரியன்? முதலில் சூரியனைப் பற்றி சில வார்த்தைகள் கூறியாக வேண்டும். இரவில் வானைப் பாருங்கள். எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரியும். இவற்றில் ஏதோ ஒரு நட்சத்திரம் இருக்கின்ற இடத்துக்கு நம்மால் போக முடிவதாக வைத்துக் கொள்வோம். அங்கிருந்து திரும்பிப் பார்த்தால் சூரியனும் இப்படி ஒரு நட்சத்திரமாக -= அனேகமாக மங்கலான சிறிய நட்ச்த்திரமாக-- தெரியும். அதாவது சூரியனும் ஒரு நட்சத்திரமே.
சூரியன் என்கிற நட்சத்திரம் நமக்கு அருகில் இருப்பதால் அது பெரிதாகத் தெரிகிறது. நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறது. சூரியன் என்கிற இந்த நட்சத்திரத்தை பூமி உட்பட பல கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவையெல்லாம் தெரிந்த விஷயம்.
விஞ்ஞானிகள் கடந்த பல காலமாக ஆராய்ந்து வந்ததில் ஒரு விஷய்ம் தெரிய வந்தது. விண்வெளியில் -- நமது அண்டத்தில் (Milky Way Galaxy) உள்ள நடசத்திரங்களில் பெரும்பாலானவை ஜோடி சேர்ந்து இரட்டை நட்சத்திரங்களாக உள்ளன. இரண்டுக்கு மேற்பட்ட நட்சத்திரங்கள் சேர்ந்து இருப்பதும் உண்டு.
சூரியனோ ஒண்டிக்கட்டை நட்சத்திரம். அதாவது சூரியனுக்கு ஜோடி இல்லை. சூரியன் போன்ற ஒண்டிக்கட்டை நட்சத்திரங்களுக்கு மட்டுமே கிரகங்கள் இருக்க முடியும்.. இரட்டை நட்சத்திரங்களுக்கு கிரகங்கள் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாகக் கருதி வந்தனர்.
இரட்டை நட்சத்திரங்கள் ஒரு பொது மையத்தை சுற்றி வருபவை.. அவற்றுக்கு கிரகம் அல்லது கிரகங்கள் இருக்குமானால் அவற்றினால் அந்த இரு நட்சத்திரங்களின் ஈர்ப்பு சக்திக்கு ஈடு கொடுத்து சுற்றி வர முடியாது என்று கருதப்பட்டது. இதன் விளைவாக இந்த கிரகங்கள் ஒன்று, அதன் பாதையிலிருந்து தூக்கி எறியப்படும். அல்லது அந்த கிரகம் விரைவிலேயே ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் போய் விழுந்து அழிந்து விடும் என்பதாகக் கருதப்பட்டு வந்தது. ஒரு வீட்டில் இரண்டு எஜ்மானர்கள் இருக்க முடியாதே.
இப்போதே இரட்டை நடசத்திரங்கள் ஒன்றல்ல இரண்டு கிரகங்களைப் பெற்றிருக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஒரே ஒரு கிரகத்தைப் பெற்றுள்ள இரட்டை நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது இரண்டு கிரகங்களைக் கொண்ட இரட்டை நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரு கிரகங்களும் இரு நட்சத்திரங்களை சுற்றி வரும் என்பதால் இவற்றின் வானில் இரட்டை சூரியன்கள் பிரகாசிக்கும். இந்த நட்சத்திர ஜோடிக்கு Kepler 47 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு சூரியன்களில் ( நட்சத்திரங்களில்) ஒன்று சூரியன் சைஸில் உள்ளது. மற்றொன்று சூரியன் சைஸில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. இந்த இரண்டும் பொதுமையத்தைச் சுற்றி வருகின்றன. இந்த இரண்டையும் இரு கிரகங்கள் சுற்றுகின்றன. ஒரு கிரகம் இந்த இரு சூரியன்களையும் ஒரு தடவை சுற்றி முடிக்க 50 நாட்கள் ஆகின்றன. வெளி வட்டத்தில் உள்ள கிரகம் இதே போல ஒரு தடவை சுற்றி முடிக்க 303 நாட்கள் ஆகின்றன.
கெப்ளர் டெலஸ்கோப். ஓவியர் வரைந்தது
அமெரிக்க நாஸா அமைப்பு 2009 ஆம் ஆண்டில் கெப்ளர் (Kepler ) டெலஸ்கோப் என்னும் பெயர் கொண்ட ஒரு செயற்கைக்கோளை உயரே செலுத்தியது. இது விண்வெளியில் எங்கெல்லாமோ இருக்கின்ற நட்சத்திரங்களுக்கு கிரகங்கள் உள்ளனவா என்று விசேஷ முறை மூலம் ஆராய்கிறது.குறிப்பாக, எங்காவது ஒரு நட்சத்திரத்தில் பூமி போல ஒரு கிரகம் இருக்குமா என்பதை ஆராய்கிறது.
இந்த டெலஸ்கோப் இதுவரை பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. அந்த டெலஸ்கோப் தான் இப்போது இரட்டைச் சூரியன்களையும் இரட்டை கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளது.
சீனாவில் பெய்ஜிங்கில் நடந்த சர்வதேச வானவியல் சங்கத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேராசிரியர் வில்லியம் வெல்ஷ், கெப்ளர் குழுவின் சார்பில் மேற்படி கண்டுபிடிப்பைத் தெரிவித்தார். அவர் அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ மானில பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.
சரி, இரட்டை சூரியன்களைக் கொண்ட கிரகங்கள் எங்கே உள்ளன? இவை 4900 ஒளியாண்டு தொலைவில் உள்ளன. இது கற்பனை செய்து பார்க்க முடியாத தூரம்.
ஒளியானது ஒரு வினாடியில் சுமார் 3 லட்ச கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியது. ஓராண்டு என்பதில் 31,536,00 வினாடிகள் உள்ளன. இதை 3 லட்சத்தால் பெருக்க வேண்டும். ( இந்தத் தொகை தான் ஒளியாண்டு தூரம்) அதன் மூலம் கிடைக்கும் தொகையை 4900 என்ற எண்ணால் பெருக்கினால் வரக்கூடிய தொகை தான் அந்த இரட்டை சூரியன்களைப் பெற்றுள்ள கிரகங்கள் இருக்கின்ற தூரம்.
இரு சூரியன்களைப் பெற்றுள்ள இரு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள்து பற்றி சாண்டா குரூஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வான் இயற்பியல் பேராசிரியர் கிரெக் காக்லின் கூறுகையில் இது மிக அதிச்யமானது என்றார். இரட்டை சூரியன், இரட்டை கிரகங்கள் இது எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை. விஞ்ஞானிகளாகிய நாங்கள் இதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.



No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you