Dec 7, 2017

மனம் எனும் மாய தேவதை - பாகம் 7: நீர் இல்லாத கிணறு

நமது எண்ணங்களின் வேலை என்ன ?
நமது எண்ணங்களின் வலிமை என்ன ?
நமது சிந்தனைகளுக்கும் நமது செயல்பாட்டிற்கும் நமது வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
இது போன்ற பல விஷயங்களை மிக ஆழமாக சிந்தித்து ஆராய்ந்தார் ஜேம்ஸ் ஆலன் என்கிற தத்துவ ஆய்வாளர்.
ஜேம்ஸ் ஆலன் தனது 15 ஆவது வயதில் பள்ளியை விட்டு சென்றவர் ஆனால் பிற்காலத்தில் வாழ்க்கையை குறித்து குறிப்பாக மனித சிந்தனையை குறித்து மிக ஆழமாக சிந்தித்தவர். ஓரு பொருளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு அதை தொடர்ந்து ஆராயும் ஒரு விஞ்ஞானி போல ஜேம்ஸ் ஆலன் எடுத்து மிக தீவிரமாக ஆராய்ந்த பொருள் மனித மனம். இதன் விளைவாக மனித மனம் பற்றிய பல அரிய உண்மைகளை உலகிற்கு கண்டு சொன்னார் ஆலன்.
அவரது முதல் புத்தகம் "ஏழ்மையில் இருந்து வளமைக்கு" (From Poverty to Power ) அவரது வித்தியாசமான ஆழமான சிந்தனைகளை உலகிற்கு காட்டியது.
ஆலன் நிறைய புத்தகங்களை வெளியிட்டவர் ஆனால் அவரது 3 ஆவது புத்தகமான " As a Man Thinketh"
இன்று வரை பதிப்புகளில் சாதனை படைத்த புத்தகம்.
மனித மனம் பற்றிய மிக ஆழமான பல உண்மைகளை எடுத்து சொன்ன ஒரு புத்தகம். பைபிள் வாசகமான " மனிதன் சந்தித்ததை போல அவன் இருக்கின்றான் " (As a man thinketh in his heart, so is he ) என்கிற வாசகத்தில் இருந்து தனது புத்தகத்துக்கு "As a man thinketh " என்ற பெயரை வைத்து இருந்தார்.
அந்த புத்தகத்தில் அவர் மனித மனதை சரியாக பயன் படுத்துவது எப்படி ? சரியாக சிந்திக்கும் முறைகள் என்பது என்ன ? நமது எண்ணங்களை கையாள்வதன் மூலம் நமது வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவது எப்படி போன்ற பல விஷயங்களை எடுத்து சொன்னார். நமூரில் இருந்து ஒருவர் அதை படித்து பார்த்து மிக ரசித்து ஆழ்ந்தார். அடடே இவைகள் வாழ்க்கையையே மாற்றும் சிந்தனைகள் ஆயிற்றே என்று ஆச்சர்ய பட்டார் . நல்ல அறிஞர்களில் தேச பாகுபாடு பார்க்க கூடாது என்று எண்ணம் கொண்டார். இவைகளை நமது நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று மிகவும் ஆசை பட்டார். அதன் விளைவாக நிறைய புத்தகங்களை எழுதினார். அந்த மனிதரின் பெயர் M. S உதய மூர்த்தி. (இப்போது அவர் இவ்வுலகில் இல்லை )
அவரது,
"எண்ணங்கள்" ..
"மனம் பிராத்தனை மந்திரம்"
"சாதனைக்கோர் பாதை "
" நெஞ்சமே அஞ்சாதே நீ "
"உலகால் அறியபடாத ரகசியம்"
"உயர் மனிதன் உண்டாக்கும் எண்ணங்கள் "
"ஆத்ம தரிசனம் "
"தன்னம்பிக்கையும் உயர் தர்ம நெறிகளும் "
"உன்னால் முடியும் "
போன்ற பல புத்தகங்களில் உள்ளீடாக இருப்பது ஜேம்ஸ் ஆலன் அவர்களின் கருத்துகள் தான்.
(புரட்சிகரமான சமூக அக்கறை கொண்ட நாயகனை மையமாக வைத்து இயக்குனர் பாலசந்தர் " உன்னால் முடியும் தம்பி " படத்தை எடுத்த போது "உன்னால் முடியும் " எனும் தலைப்பில் புத்தகம் எழுதி இளைஞர்களிடையே எழுச்சியை உண்டு பண்ணி இருந்த உதய மூர்த்தி அவர்களின் பெயரை தான் கதாநாயகனின் பெயராக வைத்தார்.)
நண்பர்களே ஜேம்ஸ் ஆலன் கருத்துகளை பகிர்ந்து கொள்ள MS உதயமூர்த்தி அவர்கள் விரும்பியது போல MS உதயமூர்த்தியின் கருத்துக்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மிக விரும்புகிறேன்.
ஏனென்றால் அவரது மற்றும் ஆலன் அவர்களது மனம் குறித்த சில சிந்தனைகள் மிக ஆழமானவை. ஒரு வரி கருத்து கூட நம்மை நீண்ட நேரம் சிந்திக்க வைத்து புரிதலை ஏற்படுத்த கூடியவை.
உதாரணமாக அவரது ஒரு கருத்தில்
"சூழ்நிலைகள் மனிதனை உண்டாக்குவது இல்லை மாறாக அவனை அடையாளம் காட்டுகின்றன "
என்கிறார்.
நமக்குள் ஆழமான புரிதலை ஏற்படுத்தும் மந்திர வாக்கியம் இது. ஒரு உதாரணத்திற்காக கிராமத்தில் ஒழுக்கமாக வாழ்ந்து வந்த ஒருவன் நகரத்திற்கு மேல் படிப்பிற்கு சென்ற மாணவன் அங்கே பல தீய பழக்கத்திற்கு ஆளாகிறான் என்று வைத்து கொள்வோம்." ஏன் இப்படி கெட்டு போய்ட்ட " என்று கேட்டால் "நான் என்ன பண்றது நான் சேர்ந்த நண்பர்களும் இப்போ இருக்கும் சூழ்நிலைகளும் அப்படி " என்று சொல்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள் . அது சுத்த பொய் என்கிறார் ஆலன்.
தான் விரும்பாத வரை ...தான் இடம் கொடுக்காத வரை எப்படி பட்ட சூழ்நிலையும் ஒரு மனிதனை கெடுக்க முடியாது என்கிறார் ஆலன். சூழ்நிலை தான் மனிதனை உண்டாக்குகிறது என்று நாம் கேள்வி பட்டிருப்போம். அதை மிக உறுதியாக மறுக்கிறார் ஆலன் சூழ்நிலையால் மனிதனை உண்டாக்க முடியாது ஆனால் அவனுக்குள் இருக்கும் நிஜ மனிதன் என்ன என்பதை அடையாளம் காட்ட முடியும் என்கிறார்.
ஒருவன் நகரத்திற்கு வந்து கெட்டவன் ஆகிவிட்டான் என்றால் அவனுக்குள் கெட்டவன் ஏற்கனவே இருந்து இருக்கின்றான் என்கிறார் அப்படி இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்கிறார்.
இதே கருத்தை புத்தர் பல இடங்களில் வலியுறுத்தி இருக்கின்றார். தண்ணீர் இல்லாத கிணற்றில் நீங்கள் எத்தனை முறை இறைத்தாலும் வெறும் காலி பாத்திரம் தான் திரும்பி வரும் நீர் வராது என்கிறார்.
ஒரு முறை ஒரு கிராமத்தின் வழியாக கடந்து செல்கிறார் புத்தர். வழக்கமாக தானம் கேட்டு வாங்கி சாப்பிடுவது தான் அவர் வழக்கம் அந்த ஊரிலும் அப்படி கேட்கிறார். அப்போது அவர் மேல் கடுப்பான ஒருவர் '' கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு பிச்சை எடுத்து சாப்பிடறதுதானே வெக்கமா இல்ல தூ " என்று முகத்தில் உமிழ்கிறார்.
புத்தர் அதற்க்கு எந்த மறுவினையும் ஆற்றாமல் மிக சாந்தமாக " வேறு ஏதும் தர வேண்டி இருந்தால் சீக்கிரம் தாருங்கள் அய்யா நான் அடுத்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் " என்கிறார்.
இதை பார்த்து கொண்டிருந்த அவர் சீடர் ஒருவர் கொஞ்சம் நேரம் கழித்து அவரிடம் "எப்படி குருவே இவ்ளோ பொறுமையா இருக்கீங்க அவன் காரி துப்பறான் உங்களுக்கு கோபமே வரலையா " என்று கேட்கிறான் அதற்க்கு புத்தர் ,
"அந்த மனிதன் மிக கால தாமதமாக வந்து விட்டான் " என்கிறார்.(இந்த பதில் உங்களுக்கு புரிந்திருக்குமானால் தெளிவாக உணருகிறீர்கள் என்று அர்த்தம்)
"இதில் பொறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அவர் செய்ததற்கு மறுவினை ஆற்ற எனக்குள் அங்கே யாருமே இல்லை என்பது தான் உண்மை. வெறும் சூனியத்தில் எச்சில் துப்பினால் அது எப்படி கடந்து போய் கீழே விழுமோ அப்படி அவன் துப்பியது என்னை கடந்து சென்று விட்டது. சூழ்நிலைக்கு மறுமொழி ஆற்றும் ஒருவன் எனக்குள்ளிருந்து அழிந்து பல நாட்கள் ஆகி விட்டது . அந்த மனிதன் என்னை கோப படுத்த மிக தாமதமாக வந்து விட்டான் " என்றார்.
"நீர் இல்லாத வெற்று கினற்றில் எத்தனை முறை இறைத்தாலும் நீர் எடுக்க முடியாது.... உள்ளுக்குள் கோபம் என்ற ஒன்று முற்றிலும் அழிந்து போன ஒருவனை எந்த சூழ்நிலையும் கோப படுத்த முடியாது " என்கிறார் புத்தர்.
புத்தர் சொன்ன மிக சக்தி வாய்ந்த வாசகம் ஒன்று உண்டு.
"உங்களை கோப படுத்தும் அல்லது எரிச்சல் மூட்டும் மனிதர்கள் அல்லது வெளி சூழ்நிலைகளுக்கு மறுமொழி ஆற்றாதீர்கள் . காரணம் உங்கள் மறுமொழி இல்லாமல் அவைகள் சக்தி அற்றவைகள் . அவைகளுக்கு சக்தி கொடுபதே நீங்கள் தான் " (என்னவொரு அற்புதமான புரிதலான வாக்கியம்)
நாம் நமக்குள் இருந்து செயலாற்றாத வரை வெளி சூழ்நிலைகள் நம்மை எந்த வகையிலும் மாற்றவோ பாதிக்கவோ முடியாது என்பது மிக பெரிய உண்மை.
ஜேம்ஸ் ஆலனின் " சூழ்நிலைகள் மனிதனை உண்டாக்குவது இல்லை, அடையாளம் காட்டு கின்றன " என்ற வாசகம் நமக்குள் தலைகீழ் மாற்றத்தை உண்டு பண்ண கூடியது. சூழ்நிலை தன்னை மாற்றி விடுமோ என்று அஞ்சும் நபர்கள் ஆலனின் கருத்தை நம்புவார்கள் எனில் சூழ்நிலை நமது கையில் தான் உள்ளது அஞ்ச வேண்டிய தேவை இல்லை என்று தன்னம்பிக்கை கொள்ளலாம்.
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பதை போல அவர் புத்தகங்களில் உள்ள இன்னொரு மந்திர வார்த்தை,
பொதுவாக மனம் பற்றிய சிந்திக்கும் முறைகளில் மிக முக்கியமான ஒன்று. அது...
நம்மையே நமக்கு பிடிக்கிறதா என்ற மனோபாவம்... நம்மையே நமக்கு பிடிக்க வில்லை எனில் மற்றவர்களுக்கு நம்மை கண்டிப்பாக பிடிக்காது. காரணகாரிய அறிவியல் உண்மை போல இது ஒரு மனோஅறிவியல் உண்மை . நம்மை நாம் மதிக்கவில்லை எனில் பிறர் நிச்சயம் மதிக்க மாட்டார்கள். இது ஒரு இயற்கை விதி போல செயல் படுகிறது. எனவே நம்மை நாம் நேசிப்பது என்பது மிக முக்கியம். பின்னே...நாமே நம்மை மதிக்காத போது அவர்கள் மதிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு அல்லவா... எனவே நம்மை நாம் விரும்ப ....மதிக்க வேண்டும் என்ற சிறிய மந்திர வார்த்தை ஒரு போதும் மறக்க கூடாது .
'ஒரு மனிதன் தனது விதியை தானே எழுதுகிறான்' என்கிறார் ஓஷோ .
உனது எண்ணங்களுக்கே கூலி கொடுக்கப்படுகிறது
எண்ணங்களே செயல்களாகின்றன என்கிறார் நபிகள் நாயகம்
'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் ' என்கிறார் புத்தர்.
'மனிதன் எப்படி சிந்தித்தானோ அப்படியே அவன் இருக்கிறான் ' என்கிறது பைபிள்.
உண்மையில் மனித சிந்தனைக்கு அளப்பரிய ஆற்றலும் வலிமையும் இருப்பது உண்மையா ?? இதற்க்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இருக்கிறதா ? இதில் ஏதும் ஆய்வுகள் நடந்துள்ளதா ?
மரங்கள்.. செடிகள் ஆராயும் ஆய்வாளர் அவர் செடிகள் உடலில் சில நுண்ணிய கருவிகளை பொருத்தி அந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது அதன் உடலில் உண்டாகும் வேதி மாற்றம் அல்லது செடி காய்ந்து போனால் உண்டாகும் வேதி மாற்றம் போன்றவற்றை கவனித்து வந்தவர் அவர்.
குறிப்பாக அவர் கருவிகள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது அவைகள் மகிழ்ச்சியை வெளி படுத்துகின்ற என்றும் அவற்றை கிள்ளும் போது பறிக்கும் போது அவை எதிர்ப்பை வெறுப்பை வெளி படுத்துகின்றன என்றும் கண்டார்.
ஒரு முறை தனது ஆய்வு கூடத்தில் இருக்கும் போது நண்பர் ஒருவர் உள்ளே நுழைந்த உடன் அவர் ஆய்வுக்காக வைத்திருந்த செடிகள் மிகுந்த எதிர்ப்பை அதாவது நீர் இல்லாமல் காய்ந்து போனால் உண்டாகும் அறிகுறியை அந்த கருவியில் உண்டாகக்கியதை கண்டார். மிக ஆச்சர்யமாக தனது நண்பர் என்ன வேலை செயகிறார் என்று விசாரித்தார் . அவர் செய்யும் வேலை செடி கொடிகளை நெருப்பில் பொசுக்குவது சம்பந்தமாக இருந்ததை கண்டு ஆச்சர்ய பட்டார். அவர் இந்த வேலை செய்பவர் என்பதை செடிகள் உணர்ந்தது எப்படி ? இன்னொரு மிக பெரிய ஆச்சர்யம் அவர் அந்த வேலையை செய்வது பல கிலோ மீட்டர் தள்ளி ரொம்ப தூரம் வேற ஊரில்.
மனிதனின் மிக நுணுக்கமான சிந்தனைகளை செடிகள் உள்வாங்கி கொள்கிறதா ?
இது தொடர்பாக நடத்த பட்ட பல ஆய்வுகள் மிக ஆச்சர்யமானவை .
ஒரு காட்டுக்குள் மரம் வெட்டி உள்ளே நுழைந்ததுமே அணைத்து மரங்களும் பயத்தில் தங்கள் செல்களை சுருக்கி கொள்கின்றன என்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் மரம் வெட்டி கையில் கோடாலியோடு வெட்டும் எண்ணம் இல்லாமல் வெறுமனே கடந்து சென்றால் அவைகள் எந்த பயத்தையும் வெளி படுத்துவது இல்லை.
மரம் வெட்டியின் உளுணர்வை மரங்கள் புரிந்து கொள்கின்றன என்கிறார்கள்.
அந்த ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால்....
ஒரு செடியை நீங்கள் ஆசையாக செல்லமாக வளர்த்தால் அவை மேலும் வேகமாக செழிப்பாக வளர்கிறது நீங்கள் உங்கள் மொழியில் சொல்லும் பாராட்டு வார்த்தைகளை அவைகள் புரிந்து கொள்கின்றன என்கிறார்கள். அதே போல திட்டினால் செடிகள் சுருங்குகின்றன என்கிறார்கள். இரண்டு செடிகளை தனி தனியாக வளர்த்து ஒன்றை நன்றாக ஆசை வார்த்தை பேசி செல்ல பிராணி போல வளர்த்தும் இன்னொன்றை தினம் திட்டி நீ அழிந்து போ என்று சொல்லியும் வளர்த்தால் பாராட்டும் செடி நன்றாக வளர்வதையும் ..திட்ட பட்ட செடி வளர்ச்சி அற்று இருப்பதையும் பார்க்கலாம் என்கிறார்கள்.
நான் சொல்லும் இந்த விஷயங்கள் நம்ப முடியாததாக அறிவுக்கு ஒவ்வாததாக இருப்பதாக நினைக்கும் நண்பர்களுக்கு மட்டும் அந்த ஊட்டி விவசாயியை பற்றி சொல்ல விரும்புகிறேன். அவரை பற்றி இணையத்தில் தேடினால் கிடைக்கும் ஊட்டியில் வருடா வருடம் நடக்கும் தாவரங்களுக்கான கண்காட்சியில் எப்போதுமே நம்பர் 1 இடத்தை பிடிப்பது அவர் தான். பல வகையான உரங்கள் பராமரிப்புகள் செய்யும் மற்ற போட்டியாளர் களுக்கு இடையில் ஒவ்வொரு பேட்டியிலும் அவர் சொல்லும் வெற்றி ரகசியம் மிக விசித்திரமானது .
அதாவது அந்த செடிகளிடம் தான் தினமும் பேசுவதாக சொல்கிறார்.
''டேய் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் நாம தாண்டா ஜெயிக்கணும் விட்டு கொடுத்து விட கூடாது " என்று தினம் நம்பிக்கை வார்த்தையை செடிகளுக்கு கொடுப்பது தான் தனது வெற்றிக்கு காரணம் என்கிறார் அவர்.
சரி...
செடி கொடிகள் இருக்கட்டும். ஒரு மனிதனின் எண்ணங்கள் பிற மனிதர்கள் மேல் பாதிப்பை ஏற்படுத்துமா ?
நாம் அன்றாடம் பிறர் மேல் ஏற்படுத்தும் 'எண்ண பாதிப்பு ' பற்றி உங்களுக்கு தெரியுமா ?
அடுத்த பாகத்தில் தொடர்ந்து சிந்திக்கலாம்

No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you